வெளியிடப்பட்ட நேரம்: 11:13 (22/02/2017)

கடைசி தொடர்பு:16:37 (22/02/2017)

அமெரிக்காவும் சீனாவும் இந்தியாவை இதற்குத்தான் பயன்படுத்துகிறதா!? #ShockUpdate

E-waste

இந்தியாவில்தான் உலகின் தலைசிறந்த இன்ஜினீயர்கள் உருவாகிறார்கள், சிலிக்கான் வேலியை ஆளும் பலர், இந்தியர்கள். உலகின் சர்வ வல்லமை பொருந்திய நாடுகளும் இந்தியாவைக் கண்டு மிரளுகின்றன, ரயில் நிலையங்களில் வைஃபை, டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா எனத் தொடர் பெருமைகளைப் பேசிவரும் நாம், ஏன் இந்த விஷயங்களைப் பேச மறுக்கிறோம். எல்.கே.ஜி படிக்கும் குழந்தையைக் கூட, 'குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடணும்'னு சொல்லிக்கொடுத்து வளர்க்கிற நாடு, உலக குப்பைகளைத் தன் தலை மேல் கொட்டிக்கொள்வது ஏன்? 

ஆம். உலகின் மிகப்பெரிய நாடுகள், இந்தியாவில் குப்பைகளைக் கொட்டுகின்றன. இ-வேஸ்ட் எனப்படும் எலெக்ட்ரானிக் குப்பைகளை இந்தியா, உலகின் பல மூலைகளில் இருந்து வாங்கி, தன் தலைமேல் கொட்டிக்கொண்டிருக்கிறது, இந்தியாவின் இ-வேஸ்ட் இறக்குமதி, ஆண்டுக்கு 30 சதவிகிதம் அதிகரித்துவருகிறது. அசோசம் அறிக்கையின்படி, இந்தியாவில் இறக்குமதியாகும் இ-குப்பைகளில் அதிகபட்சமாக  அமெரிக்கா 42 சதவிகித பங்களிப்பைத் தருகிறது, சீனா, 30 சதவிகித பங்களிப்பையும், ஐரோப்பா, 18 சதவிகிதமும், மற்ற நாடுகள் சேர்த்து 10 சதவிகிதமும் பங்களிக்கிறது. இதனால், இந்தியா உலகின் இ-குப்பைகளைக் கொட்டும் கிடங்காக மாறிவருகிறது. டெல்லியில் மட்டும் ஒரு நாளைக்கு 10,000 மெட்ரிக் டன் இ-குப்பைகள் கொட்டப்படுகின்றன. 

இந்த இ-குப்பைகளில் அதிகம் இடம்பிடிப்பவை, கணினி சாதனங்கள்தான் இவைதான் 68 சதவிகிதம், தொலைத்தொடர்பு சாதனங்கள் 12 சதவிகிதமும், எலெக்ட்ரிக்கல் சாதனங்கள், மருத்துவ உபகரணங்கள் தலா 8 மற்றும் 7 சதவிகிதத்தில் இ-குப்பைகள் கணக்கில் இடம்பிடிக்கின்றன. இவையெல்லாம் மறுசுழற்சிக்காகத்தான் கொட்டப்படுகின்றன என சொல்லப்பட்டாலும், போதிய உள்கட்டமைப்புகள் இல்லாததால், இந்தியாவில் ஆண்டுக்கு கொட்டப்படும் 18 லட்சம் மெட்ரிக் டன்  இ-குப்பைகளில், வெறும் 2 சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. 

இ-வேஸ்ட்

இந்தியாவில் கொட்டப்படும் இ-குப்பைகளின் எண்ணிக்கை 2020-ம் ஆண்டுக்குள் 3 மடங்கு அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் கொட்டப்படும் 18 லட்சம் மெட்ரிக் டன் இ-குப்பைகளின் அளவு 2020-ல் 52 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கும் என்று அசோசம் கணித்துள்ளது. இந்தியாதான் உலகின் 5-வது மிகப்பெரிய இ-குப்பை தயாரிக்கும் நாடு என்பது புள்ளிவிவரம். டெல்லி இ-குப்பைகளால் நிறைந்துவருகிறது. இதனால், இங்கு வேலைசெய்யும் தொழிலாளர்கள், பல்வேறு நோய்களால் தாக்கப்படுகிறார்கள், பாதரச தாக்குதல்களால் தோல் நோய், சுவாசப்பிரச்னை என ஆரம்பித்து,புற்றுநோய் வரை உண்டாகும் அபாயம் உள்ளது. மேலும், இந்தக் குப்பைகள் எரிக்கப்படுவதன்மூலம் காற்று மாசு அதிகரித்து, சுவாசிக்கத் தகுதியற்ற நகரம் என்ற பெயரை வாங்கியுள்ளது டெல்லி.  

உலகின் மொத்த இ-குப்பைகளின் அளவு,  52 மில்லியன் டன் . கானா, நைஜீரியா, சீனா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் வியட்நாம் நாடுகள்தான் உலகின் மிகப்பெரிய இ-குப்பை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கின்றன. இந்த விஷயத்தில்,  உலகின் மிகப்பெரிய கள்ளச்சந்தையும் இந்த நாடுகள்தான். இ-குப்பை வர்த்தகத்தில் 90 சதவிகிதம் சட்டத்துக்குப் புறம்பானது என்கிறது, யூ.என் பல்கலைக்கழக ஆய்வு. இ-குப்பைகள் மூலம் ஆண்டுக்கு இந்த நாடுகளில் இருந்து 410 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடைபெறுகிறது.

இ-வேஸ்ட்

இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும், மிகப்பெரிய அரசியல் கட்டமைப்பு கொண்ட நாடுகளிலும் கள்ளச்சந்தைக்கான விஷயங்களை சாதித்துக்கொள்வது எளிது. இந்தியாவில் இ-குப்பைகளை இறக்குமதி செய்யும் அதிகாரத்தை அந்நிய நாடுகள் எளிதில் பெற்றுவிடுகின்றன. இந்தியாவில்தான் குறைந்த விலையில் செல்போன்கள் விற்கப்படுகின்றன. அவை அதிகம் இ-குப்பைகளாகவும் மாற்றப்படுகின்றன. இந்தியா ஒரு மார்க்கெட்டாக எல்லா விஷயங்களிலும் மாறி வருகிறது. எலெக்ட்ரானிக் சந்தையாக இருக்கும் இந்தியா. அதே எலெக்ட்ரானிக் குப்பைகளில் மிகப்பெரிய மார்க்கெட்டாக உருவெடுத்து வருகிறது. டெல்லியில் மாசு அதிகரித்து மக்கள் சுவாசிக்க தகுதியற்ற நகரமாக அது மாறி வருவதால் இந்தியாவின் மற்ற நகரங்களில் இ-குப்பைகளைக் கொட்ட முடிவெடுத்து வருகின்றனர் இதன் மூலம் பணம் பார்க்கும் முதலாளிகள். இவர்களின் குறியில் தமிழ்நாடும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுக்குக் கோடிக்கணக்கில் கொட்டித்தரும் இந்தக் குப்பைத் தொழிலைச் சில நிறுவனங்கள் அரசு மற்றும் அரசியல்வாதிகளின் உதவியோடு செய்து வருகின்றன. ஏதோ ஒரு மூலையில் கொட்டுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இது ஏற்படுத்தும் பாதிப்பு ஒரு நகரத்தையே அழித்துவிடும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. கப்பல் மற்றும் விமானம் மூலமாக இந்தியாவில் இறக்குமதி ஆகும் இ-குப்பைகளில் பெரும்பாலானவை சட்டத்துக்குப் புறம்பானவை. இதையெல்லாம் அரசு கட்டுப்படுத்தி நெறிமுறைப்படுத்தாவிட்டால் இந்தியா குப்பை கொட்டும் குப்பை நாடாகிவிடும். இன்னமும் இதை விட மோசமான மெடிக்கல் குப்பைகள் உள்ளன. அது மிகக் கொடிய நோய்களையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடியது. 

அரசுக்கு ஒரே ஒரு வேண்டுகோள், இந்தியா இ-குப்பைகளைக் கொட்டும் இடமல்ல, இதனை நெறிமுறைப்படுத்தி பிரச்னைகளைத் தவிர்த்தால் இந்தியாவின் வளங்களும் இயற்கையும் பாதுகாக்கப்படும். 

ச.ஸ்ரீராம்


டிரெண்டிங் @ விகடன்