ரூ 5999 முதல் ரூ 27,999 வரை... இந்த கிண்டில் மாடல்களில் எது நல்ல சாய்ஸ்? #AmazonKindle

ம்மில் பலருக்கு, வாசிப்புப் பழக்கம் என்பது ஏதேனும் ஒரு புத்தகத்தில் இருந்துதான் துவங்கியிருக்கும். அது, பள்ளியின் பாடப் புத்தமாக இருக்கலாம்; அல்லது நூலகத்தில் இருக்கும் மற்ற புத்தகங்களாக இருக்கலாம்; ஏதேனும் ஒரு பத்திரிகையாகக்கூட இருக்கலாம். ஆனால், தற்போது இவற்றின் மூலமாகத்தான் தங்கள் மொழி அறிமுகமாக வேண்டும் என்ற அவசியமே இந்தத் தலைமுறையினருக்கு இல்லை. மொபைல், கணினி என ஏகப்பட்ட விஷயங்கள் வந்துவிட்டன. அப்படி, தற்போது புத்தகம் வாசிக்க விரும்பும் பலரது கைகளிலும் தவழ்வது, அட்டைப் பக்கத்தைத் திறந்ததும் தனது பக்கங்களால் மையின் மணம் பரப்பும் புத்தகங்கள் அல்ல; 6 இன்ச் திரையளவுகொண்ட அமேசான் கிண்டில்கள்தான். 

அமேசான் கிண்டில்

தற்போது, கிண்டிலில் புத்தகம் படிப்போரின் எண்ணிக்கையும், கிண்டில் வாங்குவோரின் எண்ணிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துவருகிறது. அப்படி, முதல்முறையாக கிண்டில் வாங்கும்போது, எதை வாங்குவது... எது சிறந்தது என்ற குழப்பம் ஏற்படும். அவர்களுக்கு உதவும் ஒரு குட்டி கைடுதான் இந்தக் கட்டுரை.

தற்போது, கிண்டிலில் புத்தகம் படிப்போரின் எண்ணிக்கையும், கிண்டில் வாங்குவோரின் எண்ணிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துவருகிறது.

கிண்டில் (Kindle), கிண்டில் பேப்பர்வொயிட் (Kindle Paperwhite), கிண்டில் வோயேஜ் (Kindle Voyage), கிண்டில் ஓயாசிஸ் (Kindle Oasis) என நான்கு வகையான கிண்டில்கள் அமேசான் இணையதளத்தில் கிடைக்கின்றன. இவை ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியாகப் பார்ப்போம்.

கிண்டில் (Kindle): 

கிண்டில்

முதல்முறையாக கிண்டில்கள் வாங்கும் பலரும் இதைத்தான் டிக் அடிப்பார்கள். காரணம், இதன் விலைதான். இருப்பதிலேயே விலைகுறைவான கிண்டில் இதுதான். 6 இன்ச் டிஸ்ப்ளே, 4 ஜி.பி மெமரி, 167 ppi ரெசொல்யூஷன்(Resolution), வைஃபை வசதி, 161 கிராம் எடை, சிங்கிள் சார்ஜில் ஒருவாரம் வரை தாங்கும் பேட்டரி என, நம் பட்ஜெட்டுக்கு ஏற்ற வசதிகளோடு இருக்கிறது இந்த கிண்டில். மற்ற மூன்று வெர்ஷன்களிலும் இருக்கும் பில்ட் இன் லைட் ஆப்ஷன் இதில் இல்லை என்பதுதான் இதன் மைனஸ். இதனால் குறைந்த வெளிச்சத்தில் உங்களால் புத்தகங்களைப் படிக்க முடியாது. விலைதான் இதன் ப்ளஸ் பாயின்ட். 

விலை : ரூ. 5,999 முதல் கிடைக்கிறது.

 

கிண்டில் பேப்பர்வொயிட் (Kindle Paperwhite) :

வைஃபை மட்டும் உடையது, வைஃபை மற்றும் 3G வசதி உடையது என இதில் இரண்டு வெர்ஷன்கள் இருக்கின்றன. இரண்டின் விலையிலும் அதற்கேற்றபடி வித்தியாசமும் இருக்கிறது. 6 இன்ச் டிஸ்ப்ளே, 4 ஜி.பி மெமரி, 300 ppi ரெசொல்யூஷன்(Resolution), ஒரு வாரம் தாங்கும் பேட்டரி போன்றவை பொதுவான வசதிகள். வைஃபை மற்றும் வைஃபை + இலவச 3G வசதியும் இதன் சிறப்பம்சங்கள். முந்தைய மாடலில் இல்லாத பில்ட் இன் லைட் ஆப்ஷன் இதில் இருக்கிறது. இதனால், குறைந்த வெளிச்சத்திலும் வாசிக்க முடியும். 

கிண்டில் பேப்பர்வொயிட்

உங்கள் மொபைலில் நீங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க்கைப் பொறுத்து, நாம் இணைய வசதிக்காக பணம் செலுத்த வேண்டும். ஆனால், அது இதில் இலவசம். இந்த 3G வசதியை அமேசான் நிறுவனமே வழங்கும்.

இந்த இரண்டில் எது பெஸ்ட் எனக் குழம்புபவர்கள், உங்கள் தேவையைப் பொறுத்து முடிவெடுக்கலாம். அதாவது ஏற்கெனவே உங்களிடம் இணைய வசதியுடன் கூடிய வைஃபை இருந்தால், நீங்கள் பேப்பர்வொயிட் வைஃபை மாடலையே டிக் அடிக்கலாம். அது இல்லாதவர்கள் மட்டும் பேப்பர்வொயிட் 3G மாடலை டிக் அடிக்கலாம். இதில், இன்பில்ட் ஆக இருக்கும் 3G கனெக்டர்கள், உங்கள் மொபைல் போன்றே செயல்படும். உங்கள் மொபைலில் நீங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க்கைப் பொறுத்து, நாம் இணைய வசதிக்காக பணம் செலுத்த வேண்டும். ஆனால், அது இதில் இலவசம். இந்த 3G வசதியை அமேசான் நிறுவனமே வழங்கும். அது மட்டுமின்றி, வேறு வைஃபை நெட்வொர்க்கிலும் உங்கள் கிண்டிலை இணைத்துக்கொள்ளலாம். அவ்வளவுதான், இரண்டுக்கும் உள்ள வித்தியாசம். உங்கள் பகுதியில் 3G சேவை கிடைக்குமா என்பதை இந்த லிங்க்கில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். சாதாரண கிண்டிலை விடவும், இந்த இரண்டு மாடல்களின் விலையில் இருக்கும் வித்தியாசம்தான் இதன் மைனஸ்.

விலை: 

பேப்பர்வொயிட் வைஃபை மாடல் : ரூ.10,999 முதல் கிடைக்கிறது.
பேப்பர்வொயிட் 3G மாடல் : ரூ. 13,999 முதல் கிடைக்கிறது.

 

கிண்டில் வோயேஜ் (Kindle Voyage) :

பேப்பர்வொயிட் போன்றே இதிலும் வைஃபை மற்றும் வைஃபை + 3G என இதிலும் இரண்டு வெர்ஷன்கள் இருக்கின்றன. மேலே நாம் பார்த்த காரணிகளை வைத்தே இரண்டில் எது என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்.

கிண்டில் வோயேஜ்

6 இன்ச் டிஸ்ப்ளே, பில்ட் இன் லைட், அடாப்டிவ் லைட் சென்சார், 300 ppi ரெசொல்யூஷன்(Resolution), ஒரு வாரத்துக்கான பேட்டரி என இருக்கிறது கிண்டில் வோயேஜ். சிறிய அழுத்தங்களை கிண்டிலின் விளிம்பில் கொடுப்பதன் மூலமே, புத்தகங்களின் பக்கத்தைத் திருப்பும் பேஜ்பிரஸ் சென்சார்கள், உங்களின் சுற்றுப்புற வெளிச்சத்திற்கு ஏற்ப, டிஸ்ப்ளே வெளிச்சத்தைச் சரிசெய்யும் அடாப்டிவ் லைட் சென்சார், இதன் டிசைன் ஆகியவை இதன் ஸ்பெஷல். வசதிகள் மற்றும் படிக்கும் அனுபவத்தில் குட்மார்க்ஸ் வாங்கினாலும், கொஞ்சம் ராயல் ரீடர்கள் மட்டுமே டிக் அடிக்கவேண்டிய ரகம் இது. 

விலை: 

வோயேஜ் வைஃபை மாடல் : ரூ.16,499 முதல் கிடைக்கிறது. 
வோயேஜ் 3G மாடல் : ரூ. 20,499 முதல் கிடைக்கிறது. 

 

கிண்டில் ஓயாசிஸ் (Kindle Oasis) : 

கிண்டிலின் டாப் வேரியன்ட் இதுதான். எப்போதுமே திகட்டாமல் இ-புத்தகங்கள் வாசிப்பவர்களுக்கு அல்டிமேட் ஆப்ஷன் இந்த கிண்டில் ஓயாசிஸ். 6 இன்ச் டிஸ்ப்ளே, 4 ஜி.பி மெமரி, 300 ppi ரெசொல்யூஷன்(Resolution), ஒரு மாதம் வரை நீடிக்கும் பேட்டரி என பக்காவாக இருக்கிறது இதன் வசதிகள். மற்ற கிண்டில் மாடல்களை விடவும் மெலிதாக, எடை குறைவாக இருக்கிறது இது. எனவே, கையாள எளிதாகவும், ஸ்டைலிஷ்ஷாகவும் இருக்கிறது இதன் டிசைன். நீங்கள் எந்தக் கையில் வைத்துப் படிக்கிறீர்களோ, அதற்கு ஏற்றபடி அட்ஜஸ்ட் செய்துகொள்கிறது கிண்டில் டிஸ்ப்ளே.

கிண்டில் ஓயாசிஸ்

வோயேஜ் வெர்ஷனில் இருந்த பேஜ்பிரஸ் சென்சார்களுக்குப் பதில், இதில் இருப்பது பேஜ் டர்ன் பட்டன்கள். டிஸ்ப்ளேயை ஸ்வைப் செய்தோ அல்லது இந்த பட்டன்களைப் பயன்படுத்தியோ புத்தகங்களின் பக்கங்களைப் புரட்டலாம். இந்தக் கிண்டிலின் லெதர் கவரையும், கிண்டில் உடன் இணைத்து சார்ஜ் செய்துகொள்ள முடியும். இதன்மூலம் கிண்டிலின் பேட்டரி தீர்ந்தாலும், இதன் கவர் பேட்டரியை ரீ-சார்ஜ் செய்துவிடும். இதற்கான ப்ரீமியம் லெதர்கவரும் கிண்டில் உடனே கிடைக்கும். இதிலும் வைஃபை மற்றும் 3G என இரண்டு மாடல்கள் இருக்கின்றன.

அனைத்திலும் பக்காவாக இருந்தாலும், எலைட் ரீடர்களுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் இருக்கிறது இதன் விலை. 

விலை: 

ஓயாசிஸ் வைஃபை மாடல் : ரூ. 23,999 முதல் கிடைக்கிறது.
ஓயாசிஸ் 3G மாடல்: ரூ. 27,999 முதல் கிடைக்கிறது. 

 

மேலே நாம் பார்த்த நான்கு கிண்டில்களிலும் உங்கள் தேவை, பட்ஜெட், வசதிகள் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்கானதை டிக் அடிக்கலாம். முதல்முறையாக கிண்டிலை நாடுவோருக்கு சாதாரண கிண்டிலும், கிண்டில் பேப்பர்வொயிட்டும் நல்ல சாய்ஸ். 

இ-வாசகர்கள் கவனத்திற்கு!

கிண்டில் புத்தகங்கள்

ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப், டெஸ்க்டாப் எனப் பல கேட்ஜெட்களிலும் மின்புத்தகங்களைப் படிக்க முடியும். ஆனால், அதிலிருந்து வெளியாகும் ப்ளூலைட்டால் ஏற்படும் கண் எரிச்சல், அனைத்து இடங்களுக்கும் எடுத்துச்செல்ல முடியாதது, பேட்டரி சிக்கல், இடை இடையே வந்து தொல்லை கொடுக்கும் வாட்ஸ்அப் மற்றும் இ-மெயில் நோட்டிஃபிகேஷன்கள், கிளார் அடிக்கும் டிஸ்ப்ளே என ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றன. இவை அனைத்திற்கும் 'நோ' சொல்வதும், புத்தகங்களின் கலெக்ஷனும்தான் கிண்டிலின் பலம். 

கிண்டிலில் நீங்கள் படிக்கும் புத்தகங்கள் அனைத்தையும், கிண்டில் இல்லாமலும் படிக்க முடியும்.  கிண்டில் ஆப்பை டவுண்லோட் செய்துகொள்வதன்மூலம் உங்கள் மொபைலில்கூட, கிண்டில் புத்தகங்களைப் படிக்கலாம்.

ஆனால், கிண்டிலில் நீங்கள் படிக்கும் புத்தகங்கள் அனைத்தையும், கிண்டில் இல்லாமலும் படிக்க முடியும். கிண்டில் ஆப்பை டவுண்லோட் செய்துகொள்வதன்மூலம் உங்கள் மொபைலில்கூட, கிண்டில் புத்தகங்களைப் படிக்கலாம். கணினியிலும் PC வெர்ஷன் டவுண்லோட் செய்து, கிண்டில் புத்தகங்களைப் படிக்கலாம். இணையத்திலும் படிக்கலாம். ஏற்கெனவே கிண்டில் பயன்படுத்துபவர்கள், உங்கள் கருத்துக்களை கமென்ட்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

- ஞா.சுதாகர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!