வெளியிடப்பட்ட நேரம்: 10:24 (24/02/2017)

கடைசி தொடர்பு:11:21 (24/02/2017)

மைக்கேல் ஜாக்ஸன் ஆவி முதல் ஜெயலலிதா ஆவி வரை... கூகுளில் தேடும் உலகம்!


தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016 டிசம்பர் 5ம் தேதி காலமானார். அப்போது இணையத்தில் மொத்த இந்தியாவும் அவரைத் தேடி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின் பல்வேறு பிரச்னைகள், அதிமுகவில் சர்ச்சை, சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி கட்சிக்குள் பிளவு, புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி என இவ்வளவு விஷயங்கள் நடந்தாலும் இன்னமும் ட்ரெண்டில் இருப்பது ஜெயலலிதா தான். 

அவரது மரணம் டிசம்பர் 5ம் தேதி நடந்தது. அதற்கு பின்பு துவங்கி அவரது பிறந்த நாளான இன்று வரை அவரை இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் உள்ள மக்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக தேடியுள்ளனர். செய்திகளின் உச்சத்தில் இருந்த சசிகலா, ஓ.பி.எஸ், கூவத்துர் பங்களா ஆகியவற்றை கூட சில மாநிலங்கள் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளது. ஆனால் ஜெயலலிதாவை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து தேடி வருகின்றனர். 

ஜெயலலிதா

அப்படி என்ன விஷயங்களுக்காக ஜெயலலிதாவை இணையம் தொடர்ந்து தேடுகிறது என்று பார்த்தால் அதில் கிடைக்கும் தகவல்கள் ஆச்சர்யம் அளிப்பவையாக உள்ளன. 

சசிகலாவும், ஜெயலலிதாவும் சேர்ந்து இருக்கும் பழைய புகைப்படங்களை இணையம் அதிகமாக தேடியுள்ளது. சசிகலா ஜெயலலிதாவை போலவே உடை அணிந்து வந்ததை மக்கள் பேரும்பாலும் விரும்பவில்லை என்பதை ஃபேஸ்புக் லைவ்கள் ஆங்க்ரி எமோஜிக்களாக விளக்கியது நாம் அறிந்ததே.

ஜெயலலிதாவின் ஆவி, ஜெயலலிதாவின் ஆவி வீடியோ போன்றவை அதிகமாக தேடப்பட்டுள்ளன. எப்போதுமே ஒரு பிரபலம் மரணமடைந்தால் இந்தத் தேடலை கூகுளில் அதிக பேர் தேடுவது வழக்கமான ஒன்று. அதற்கு மிகப்பெரிய உதாரணம் இன்று வரை மைக்கேல் ஜாக்ஸன் ஆவியை உலகம் தேடி வருவது தான். இதற்கு ஜெயலலிதாவும் விதிவிலக்கல்ல.

ஜெயலலிதாவின் கால்கள், ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மம் இன்னமும் நீங்கவில்லை என பல விஷயங்களும் , விவாதங்களும் நடைபெற்று வரும் வேளையில் அதற்கு ஆரம்பமாய் இருந்த கால்கள் நீக்கப்பட்டதை மறைத்துவிட்டனர் என்ற மர்மமும் தேடலில் இடம்பிடித்துள்ளது. எம்பாமிங், மருத்துவமனை தகவல்கள் என அடுத்த விஷயங்களையும் இந்தியா தொடர்ந்து தேடி வந்துள்ளது.

ஜல்லிக்கட்டு நேரத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் மாணவர் போராட்டம் எப்படி இருந்திருக்கும், ஜல்லிக்கட்டில் ஜெயலலிதாவின் நிலைப்பாடு குறித்த விவரங்களும் அதிகம் தேடப்பட்டுள்ளன.

ஜெயலலிதாவை தாக்கிய சசிகலா, மரணமடைந்த நிலையில் தான் ஜெயலலிதா அப்போலோ கொண்டு வரப்பட்டாரா, கொலை செய்யப்பட்டாரா ஜெயலலிதா, ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் போன்ற கேள்விகளை தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கின்றனர். இதில் தமிழக அளவில் ஒரு கேள்வி குறைந்த நபர்களால் தேடப்பட்டாலும் அந்த கேள்வி தமிழக அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு இருந்துள்ளது. ஜெயலலிதாவுக்கு பிறகு அ.தி.மு.கவின் எதிர்காலம் என்ன ஆகும் என்கிறது அந்த தேடல்.
இந்தியா முழுவதும் எதிர்பார்க்கும் இந்த கேள்விக்கு இன்று விடை கிடைக்கலாம். 

 

ச.ஸ்ரீராம்
 


டிரெண்டிங் @ விகடன்