வெளியிடப்பட்ட நேரம்: 08:43 (27/02/2017)

கடைசி தொடர்பு:10:34 (27/02/2017)

நிலநடுக்கத்தை கொண்டு வரும் ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங்... தப்பிக்குமா நெடுவாசல்? #HowHydraulicFracturingWorks

ஹைட்ராலிக்

நெடுவாசல் இன்னொரு மெரீனாவாக மாறி வருகிறது. இந்தமுறை தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக்கொள்ள மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். மீத்தேன், ஹைட்ரோகார்பன் என ஒரே திட்டத்தை போக்கிரி பட வடிவேலு போல அதிகார வர்க்கம் வெவ்வேறு பெயர்களில் கொண்டு வருகிறது. அதை அனைத்தையும் முறியடிக்க மக்கள் தெருவில் இறங்கியிருக்கிறார்கள். ஜனங்களின் முன் அதிகார நாயகர்கள் பணிந்து போயே ஆக வேண்டும். அதுதான் ஜனநாயகமாக இருக்க முடியும். நெடுவாசல் கிராமத்தில் ஆழ்துளை கிணற்றை அமைத்துவிட்டார்கள். கொஞ்சம் கண் அசந்தால் எரிவாயுவை எடுக்க தொடங்கிவிடுவார்கள். இதற்கு பல தொழில்நுட்பங்களை கார்ப்பரேட்களும், அதன் பின்னணியில் இருக்கும் அரசும் பயன்படுத்துவார்கள். அதில் முக்கியமானது ஹைட்ரோ ஃப்ராக்கிங் (Hydrofracking) எனப்படும் ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் (hydraulic fracturing). தமிழில் நீரழுத்த முறிவு முறை.

அது என்ன ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் ?

பெருமளவில் நீருடன், மணல் மற்றும் சில கெமிக்கல்களை கலந்து பூமிக்கு அடியில் செலுத்துவார்கள். அது, நிலத்தடியில் இருக்கும் பாறைகளை வெடிக்க செய்யும். இதனால் உருவாகும் வழியில், அங்கிருக்கும் வாயு எளிதில் மேலே வரும். இந்த முறைக்குத்தான் ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் என்று பெயர். 

 

 

1947ல், அமெரிக்காவில் இருக்கும் கன்ஸாஸ் என்ற இடத்தில்தான் முதல்முதலில் இந்த முறை செயல்படுத்தப்பட்டது. அப்போது எண்ணெயை பயன்படுத்திதான் ஃப்ராக்ச்சரிங் செய்திருக்கிறார்கள். 1953ல் தான் நீருடன் சில கெமிக்கல்களை சேர்த்து பயன்படுத்தலாம் என கண்டுப்பிடிக்கப்பட்டது. ஹைட்ராலிக் ஃப்ராக்கசரிங் செய்யப்பட்ட கிணற்றில் இருந்து 90% அதிகமான வாயுவை எடுக்க முடியும் என்பதால் பெரும்பாலான இடங்களில் இதை பயன்படுத்துகிறார்கள். 

முதன் முதலில் ஸ்டானோலிண்ட் என்ற எண்ணெய் நிறுவனம் தான் ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் முறையை பயன்படுத்தினார்கள். ஆனால், இதன் பேடண்ட் உரிமை Halliburton Oil Well Cementing Company என்ற நிறுவனத்திடம்தான் இன்னமும் இருக்கிறது. 

இதற்குத் தேவையான அதிக அளவிலான நீரை அங்கிருந்துதான் எடுப்பார்கள். பிராசஸ் முடிந்ததும் வெளியாகும் நீர், கெமிக்கல் கலந்தது. விஷத்தன்மை வாய்ந்தது. அதை வெளியேற்றுவதில் பல ஆபத்துகள் இருக்கின்றன. மேலும், பூமியை இப்படி செயற்கையாக வெடிக்கச் செய்வதும் ஆபத்தில் முடியலாம் என உலக விஞ்ஞானிகள் இந்த முறைக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். 

ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் முறையினால் என்ன என்ன நிகழும்?

1) நிலத்தடி நீர் பாதிக்கப்படும்

2) வெளியேறும் வாயுக்களால் பருவநிலையே மாறும்.

3) விஷத்தன்மை வாய்ந்த கெமிக்கல்கள் அந்தப் பகுதி மக்களுக்கு நிறைய நோய்களை உண்டாக்கும்.

4) ஏராளமான நீர் வீணாக்கப்படும்.

5) கழுவுகளை வெளியேற்றுவதில் சிரமங்கள் வரும்

6) பூமிக்கு அடியில் நிகழ்த்தப்படும் இந்த முறையால் நில நடுக்கங்கள் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இது தவிர விபத்துகள் நடந்தால் நாம் நினைப்பதை விட மோசமான பாதிப்புகள் ஏற்படலாம். அந்தப் பகுதி முழுவதுமே பல நூறு ஆண்டுகளுக்கு வாழ முடியாத பகுதியாக மாறும் ஆபத்துகளும் உண்டு. பொதுவாக ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் முறை மக்கள் அதிகம் வாழாத பகுதிகளில் இருக்கும் எண்ணெய் கிணற்றில் செய்யப்படும். ஆனால், நெடுவாசலும் மற்ற பகுதிகளும் லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து வரும் இடம் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

இத்தனை எதிர்ப்புகளை மீறி இந்தத் திட்டத்தை நிறைவேற்றி, பூமிக்கு அடியில் இருந்து அவர்கள் எடுக்கப்போவது எரிவாயு அல்ல. அது விவசாயிகளின் மூச்சுக்காற்று. 

- கார்க்கிபவா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்