வெளியிடப்பட்ட நேரம்: 11:27 (27/02/2017)

கடைசி தொடர்பு:11:27 (27/02/2017)

நோக்கியாவின் கிளாஸிக் 3310 இஸ் பேக்... ஸ்னேக் விளையாட தயாரா!? #Nokia3310

நோக்கியா

உலகம் முழுவதும் உள்ள மொபைல் போன் பிரியர்கள், குறிப்பாக நோக்கியாவின் பல்லாண்டுகால ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நோக்கியாவின் புதிய ஆண்ட்ராய்டு மொபைல்கள், நோக்கியா 3, 5 மற்றும் 6 ஆகிய மூன்றும் 16 வருடங்களுக்கு முன்பு அறிமுகம்செய்யப்பட்டு, விற்பனையில் சாதனைபடைத்த நோக்கியா 3310-ன் மேம்படுத்தப்பட்ட மொபைல், நேற்று பார்சிலோனாவில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

பொதுவாக கிரிக்கெட் மேட்சுகளையும், சில சமயங்களில் டென்னிஸ், பாட்மின்டன் போன்ற மற்ற சில விளையாட்டுகளின் நேரலைகளையும்  மட்டுமே பார்க்கும் பலர், நேற்று பார்சிலோனாவில் நடைபெற்ற 'மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ்' என்னும் வருடாந்திர தொழில்நுட்பக் கண்காட்சியின் நேரலையைப் பார்த்திருப்பார்கள். அதற்கு ஒரே காரணம், நோக்கியா! ஆம், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் திணறி, தனது மொபைல் பிரிவை மைக்ரோசாஃப்டுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு விற்ற அதே நோக்கியா, HMD Global என்னும் நிறுவனத்தின் மூலம் மீண்டும் மொபைல் போன் சந்தைக்கு வந்துள்ளது. கடந்த சில மாதங்களாக நாம் பெரிதும் எதிர்பார்த்துவந்த நோக்கியா 3310 மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் நோக்கியா 3, 5 மற்றும் நோக்கியா 6 ஆகிய 4 புதிய மொபைல்கள், நேற்று அறிமுகம்செய்யப்பட்டன. 

நோக்கியா 6

சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் அறிமுகப்படுத்தி 23 நொடிகளில் விற்றுத்தீர்ந்த அதே நோக்கியா 6-ன் சர்வதேச மாடல், நேற்று வெளியிடப்பட்டது. 5.5 இன்ச் முழு HD திரையுடன்கூடிய கொரில்லா கிளாஸ், குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 430 ப்ராசசர் உடன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ரோமையும் இது கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை 16 மெகாபிக்சல் பின்புற கேமராவையும், 8  மெகாபிக்சல் முன்புற கேமராவையும் கொண்டுள்ளது. இந்த மொபைலில், இரண்டு ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளதால், மிகச் சிறந்த ஒலியைக் கேட்க முடியும். மேலும், இதன் ஒலிபெருக்கிகள் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பத்தில் இயங்குவதால், 3டி ஒலியைத் துல்லியமாகக் கேட்க முடியும்.  மேட் ப்ளாக், சில்வேர், டேம்பேர்ட் ப்ளூ மற்றும் காப்பர் நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதன் விலை, தோராயமாக 16,000 ரூபாய் இருக்கும் என்கிறார்கள்.

 

 

நோக்கியா 5

நோக்கியா 5, 5.2இன்ச் HD IPS திரையையும், குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 ப்ராசசர் உடன் 2ஜிபி ரேம், 16ஜிபி ரோம் மற்றும் முறையே 13 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல் பின்புற மற்றும் முன்புற கேமெராக்களைக்கொண்டுள்ளது. கூகுளின் பிரத்யேக அசிஸ்டன்ட் இதில் இயங்கும் என்பது சிறப்பு. மேட் ப்ளாக், சில்வர், டேம்பேர்ட் ப்ளூ மற்றும் காப்பர் நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதன் விலை, தோராயமாக 13,000 ரூபாய் இருக்கும் என்று கருதப்படுகிறது.

 

 

 

நோக்கியா 3

நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல்களிலேயே குறைத்த திறன்கொண்ட மொபைல் இதுதான். பாலிகார்போனேட் மற்றும் அலுமினியத்திலான கட்டமைப்புடன்கூடிய  5இன்ச் திரையையும் மீடியாடேக் 6737 ப்ராசசர் உடன் 2ஜிபி ரேம், 16ஜிபி ரோம் மற்றும் 8 மெகாபிக்சல் முன்புற மற்றும் பின்புற  கேமராக்களைக் கொண்டுள்ளது. இதன் விலை, தோராயமாக 9,500 ரூபாய்  இருக்குமென்று கருதப்படுகிறது.

 

 

நோக்கியா 3310

பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த, 16 வருடங்களுக்கு முன்பு அறிமுகமாகி கோடிக்கணக்காக எண்ணிக்கையில் விற்பனையான, உலகின் பிரபலமான மொபைல் நோக்கியா 3310 மீண்டும் பல்வேறு புதிய வசதிகளுடன் 22 மணிநேர டாக்டைம் மற்றும் ஒரு மாதத்துக்கு ஸ்டாண்ட்-பையில் இருக்கும் பேட்டரி திறனையும் கொண்டுள்ளது. 2.4இன்ச் வண்ணத் திரையுடன் மேம்படுத்தப்பட்டுள்ள இது, 16 MB நினைவகத்தையும் மற்றும் 2MP கேமெராவையும் கொண்டுள்ளது. மேலும் பழைய நோக்கியா ரிங்டோனும், ஸ்னேக் கேமும் இதில் உள்ளன. வார்ம் ரெட், எல்லோ, டார்க் ப்ளூ மற்றும் கிரே ஆகிய நான்கு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதன் விலை, தோராயமாக 3,500 ரூபாய்  இருக்குமென்று கருதப்படுகிறது.

 

 

நோக்கியா 6,5 மற்றும் 3 ஆகிய மூன்று மொபைல்களும் சமீபத்திய ஆண்ட்ராய்டு பதிப்பான 7.1.1 நௌகட்டில் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. நோக்கியா 6 மற்றும் 5,  3000 mAh பாட்டரியையும், நோக்கியா 3,  2650 mAh பாட்டரியையும் கொண்டுள்ளது. மேலும் இந்த நான்கு மொபைல்களும் இரண்டாவது காலாண்டில் அதாவது ஏப்ரல்-ஜூன் மாதத்துக்குள் உலகம் முழுவதும் விற்பனைக்கு வருமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய நிகழ்ச்சியில்... நோக்கியா, தான் உருவாக்கிய உலகின் முதல் 5G தொழில்நுட்பத்தின் முன்னோட்டத்தையும் அதன் வருங்கால இலக்குகளையும் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

-ஜெ. சாய்ராம்,

மாணவப் பத்திரிகையாளர்,

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்