வெளியிடப்பட்ட நேரம்: 10:34 (02/03/2017)

கடைசி தொடர்பு:17:42 (02/03/2017)

ரஜினிகாந்துக்கு கூட டூப்ளிகேட் தயாரிக்கும் சைனாவின் ஜெராக்ஸ் கடை யீவு..! #Yiwu

யீவு

யீவு. இந்தப் பெயரை சர்வ நிச்சயமாக நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஆனால் அந்த நகரில் இருந்து வரும் பொருட்களில் ஒரு டஜனாவது தற்போது உங்களிடம் இருக்கும். கொசு பேட்டில் ஆரம்பித்து மொபைல், ரிமோட் என நம் அன்றாடம் பயன்படுத்தும் எல்லா பொருட்களையும் சீனாவில் இருக்கும் யீவு நகரம்தான் தயாரிக்கிறது. வாழ்நாளில் ஒரு லட்சம் ரூபாயாவது இந்த ஊருக்கு உங்கள் பங்களிப்பு இருக்கும். 

யீவுவின் சந்தை மிகப்பெரியது. 17 முக்கிய தொழிற்துறைகளில் 4,20,000க்கும் அதிகமான பொருட்கள் இங்கே கிடைக்கின்றன. 1,00,000 வாடிக்கையாளர்கள் தினமும் பொருட்களை வாங்க வருகிறார்கள்.1500 கண்டெய்னர்கள் தினமும் யீவுவில் இருந்து உலகின் பல மூலைகளுக்கும் புறப்படுகின்றன. வாரம் ஏழு நாட்களும், வருடம் முழுவதும் கடைகள் திறந்திருக்கும். சீன புத்தாண்டு மட்டுமே யீவுவுக்கு விடுமுறை நாள்.

சிறிய கிராமமாக இருந்த யீவு இப்போது சிறுபொருட்களின் உலகளாவிய தலைநகரமாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு யீவு மிகச்சிறந்த சான்று. இன்று யீவு சீனாவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது உலகிற்கே சொந்தமானது. மற்ற நாடுகளின் தேவைகளை அறிந்து அதற்கு ஏற்ற பொருட்களை தயாரிப்பதில் யீவு மக்கள் கில்லாடிகள். அதற்குப் பல நூற்றாண்டுகள் விரியும் அவர்களின் வரலாறும் ஒரு முக்கிய காரணம். 

யீவு நகரம் முழுவதும் மலைப்பிரதேசம்தான். அந்த நிலங்கள் விவசாயத்துக்கும் ஏற்றதாக இல்லை. எனவே அந்தப்பகுதி மக்கள் வாழ்வாதாரத்துக்காக வணிகத்தை நம்ப வேண்டி இருந்தது. அவர்கள் வசம் இருந்த ஒரே விஷயம் பழுப்பு சர்க்கரை. எனவே பழுப்பு சர்க்கரையை கொடுத்து, அதற்குப் பதிலாக கோழி இறகுகளை பண்டை மாற்றம் செய்தார்கள். கோழி இறகில் இருந்து உருவாகும் உரம் அவர்களின் நிலங்களை பண்படுத்த உதவியது. மேலும் இறகுகளில் பல கைவினைப்பொருட்களை செய்து அதையும் விற்று வந்தார்கள். யீவு நகர மக்கள் 1600 காலத்தில் கூடைகளை தோள்களில் சுமந்து சென்று அருகில் இருக்கும் நகரங்களில் வியாபாரம் செய்து வந்தார்கள். கிடைக்கும் பொருட்களை அப்படியே விற்காமல் அதை கைவினைப்பொருட்களாக மாற்றி விற்றனர். மற்ற நகர மக்களின் தேவைகளை அறிந்து வந்து, அதற்குத் தீர்வு தரக்கூடிய பொருட்களை தயாரித்து வியாபாரம் செய்து வந்தனர். அந்தக் கலாசாரம் தான் இன்று உலகின் தேவைக்காக பொருட்களைத் தயாரிக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

சீனா ஒரு கம்யூனிச நாடு. அப்போது அந்த நாட்டில் வணிக சுதந்திரம் (free trade) கிடையாது. அதனால் யீவு மக்களை மற்றவர்கள் முதலாளித்துவ பிரதிநிதிகளாக பார்த்தனர். ஆனால், யீவுவுக்கு வணிகத்தை விட்டால் வேறு வாழ்வாதாரம் கிடையாது. எனவே ரகசியமாக தங்கள் வணிகத்தை தொடர்ந்தார்கள். காவல்துறையிடம் சிக்கினால் பொருள் நட்டத்தோடு சிறைவாசமும்.1982-ம் ஆண்டு வரை தொடர்ந்த இந்த கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு முடிவு ஒரு துணிச்சல்மிக்க பெண்ணால் வந்தது. 

ஐந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த அந்தப் பெண்ணின் பெயர் ஃபெங் ஐ கியான். தன் குடும்பத்தைக் காப்பாற்ற வியாபாரம் மட்டுமே வழி என்பதை உணர்ந்த கியான், யீவு நகர மேயரை சென்று பார்த்தார். தன் நகர மக்களின் ஏழ்மையை விரட்ட வணிகத்தால் மட்டுமே முடியும் என்பதை எடுத்து உரைத்தார். அரசாங்க கொள்கைகளைக் காட்டி அதை மறுத்த மேயரிடம் ”உங்கள் நகர மக்களைப் பற்றிய அக்கறை உங்களுக்கு இல்லையா? பிறகு என்ன மேயர் நீங்கள்” என கோவமாக பேசிவிட்டு, அறைக்கதவை படாரென சாத்திவிட்டு வெளியேறினார். கதவு மூடிய சத்தம் மேயரின் மூளைக்குள் பல நாட்கள் எதிரொலித்தது. பதவிப் பறிபோகும் அபாயம் இருந்தாலும், மக்கள் தான் முக்கியம் என முடிவெடுத்த மேயர், யீவு நகர மக்களை வணிகம் செய்ய அனுமதித்தார். முதல் முறையாக யீவு நகரின் ஹ்யூகிங்மென் தருவில் 700 கடைகள் அமைக்கப்பட்டன. சீனாவின் முதல் சந்தை அதுதான். அதிர்ஷ்டவசமாக அன்றைய அதிபர் டெங் ஷவ் பிங்கும் வணிக சுதந்திரத்தை அனுமதிக்கும் முடிவை எடுக்க நினைத்திருந்தார். 

அதன் பின் யீவு நகர வளர்ச்சி அசுரத்தனமானது. தமிழ்ச் சினிமாவில் ஒரே பாடலில் வளரும் நாயகர்களை விடவும் வேகமாக வளர்ந்தார்கள். இன்று யீவு நகரில் 70000க்கு மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. ஓர் ஆண்டுக்கு 6 பில்லியன் டாலர்கள் யீவு நகரில் கைமாறுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ஏறத்தாழ 40000 கோடி ரூபாய். காலம் யீவுவை தேர்ந்தெடுக்கவில்லை. யீவு நகரம் தனக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், வியாபாரம் என்பது யீவு மக்களின் நாடி, நரம்பு, ரத்தம், சதை எல்லாவற்றிலும் ஊறிப்போன விஷயம்.

சைனா

யீவு என்றால் ‘விசுவாசமான காகம்” என்று பொருள். சீன நாட்டின் புராதன கதை ஒன்று உண்டு. அதில் ஒரு காகம் மக்களுக்கு உதவி செய்யும். அதைக் குறிக்கும் விதமாகத்தான் யீவு என்ற பெயர் வந்தது. ஆனால் இன்று நிலமை முற்றிலும் வேறு. உலகில் மிகச்சிறந்த பிராண்ட் பொருட்கள் அனைத்துக்கும் டூப்ளிகேட் யீவுவில் கிடைக்கும். 10 ஆண்டுகள் முன்புவரை இப்படி இல்லை என கவலை கொள்கிறார்கள் உலக வியாபாரிகள். அடிடாஸ் காலணி முதல் Gucci கண்ணாடிகள் வரை எல்லா பிராண்டட் பொருட்களின் கடைகள் யீவுவில் இருந்தன. இன்று எல்லாமே போலிகள். எந்த ஒரு புதுப்பொருள் வந்தாலும் யீவுவுக்கு 10 நாட்கள் போதும். அச்சு அசலான போலியை உருவாக்கிவிடுகிறார்கள். இதனால் சீன பொருட்கள் பற்றிய நம்பிக்கை உலக அளவில் உடைந்தாலும் இவர்களுக்கு கவலை இல்லை. உங்கள் நாட்டில் கஸ்ட்மஸை ஏமாற்றிப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியும் என்றாலும் போதும். சீனாவில் ஏற்றுமதியை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். சீன போலீஸும் இதைக் கண்டுக்கொள்ளாமல் இருக்க மொத்தமாக ‘கவனிக்கப்படுகிறார்கள்’ என்கிறார்கள்.

 உலக மக்கள் அனைவருமே “லைக்ஸ்” போடும் பெருமைமிகு வரலாறு யீவுவுக்கு உண்டு. அது சிதைந்து போக அவர்கள் அனுமதிக்கக்கூடாது.. ஏனெனில், மனிதர்களுக்கு உருவாக்கியதைவிட, அழித்தததை அதிக காலம் நினைவில் வைக்கும் பழக்கம் உண்டு. 

- கார்க்கிபவா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்