காஃபிக்குள் செல்ஃபி வரையும் மேஜிக் மெஷின்..!

காஃபி

டி- ஷர்ட், காஃபி கோப்பை இதில் எல்லாம் புகைப்படங்களை வரைந்து நமக்கு பிரியமானவர்களை சர்ப்ரைஸ் செய்வது வழக்கம் தான். ஆனால் தற்போது வித்தியாசமாக காஃபிக்குள் புகைப்படங்களை பதிய ஒரு இயந்திரம் அறிமுகமாகியுள்ளது. அதன் பெயர் ரிப்பிள் மேக்கர். இந்த இயந்திரத்தின் மூலம் நாம் விரும்பும் புகைப்படத்தை காஃபிக்குள் வரைய முடியும்.

இந்த மிஷினில் ரிப்பிள்ஸ் மூலமாக  காஃபியில் நாம் அளிக்கும் புகைப்படத்தை  வடிவமைத்து மேலே பதிய வைக்கும். இதன் மூலம் ஒருவர் தான் தெரிவிக்க இருக்கும் வாழ்த்து செய்தியையோ அல்லது புகைப்படத்தையோ இதில் வரவைக்கலாம். 

இந்த இயந்திரம் 4.25 இன்ச் உள்ள காபி கோப்பையின் அளவை அதுவாகவே கணித்து அதன் மேல் பிரிண்ட் செய்யும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அகலம் 210 மிமீ, ஆழம் 270 மிமீ, உயரம் 495 மிமீ, எடை 16 கிலோகிராம். இதில் உள்ள வை-பை வசதி மூலம் புகைப்படங்களையும் டிசைனையும் அனுப்ப முடியும். இந்த மிஷினிலும் சில டெம்ப்ளேட்டுகள் உள்ளன. விரும்புபவர்கள் அதனையும் பயன்படுத்தி கொள்ள முடியும் என்கிறது ரிப்பிள் மேக்கர் நிறுவனம். இந்த சேவை தற்போது மொபைல் ஆப் மூலமாகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

காஃபி

இந்த ஆப் மூலம் நமது செல்போனில் உள்ள புகைப்படங்களை தேர்ந்தெடுத்து பதிவேற்றி, அருகில் உள்ள ரிப்பிள் மேக்கர் காபி  ஷாப்பிற்கு அனுப்பி ஆர்டர் செய்யும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து இந்த காஃபி ஷாப்கள் எவ்வளவு தூரத்தில் உள்ளன என்ற விவரங்களையும் இந்த ஆப் அளிக்கிறது. ப்ளே ஸ்டோரில் 4.2 ரேட்டிங் பெற்றுள்ளது இந்த ஆப். இது ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களிலும் இலவச ஆப்பாக கிடைக்கிறது.

இந்த சேவை தற்போது அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், கெரியா மற்றும் சீனாவின் சில பகுதிகளில் உள்ளது. இந்த வருடம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சேவையை கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பிராண்டிங்கிற்காகவும், காதலர்கள் தங்கள் காதலை பரிமாறவும் அதிகம் பயன்படுத்துகிறார்கள். வினோதமாக சில கட்சிகள் தங்கள் பிரசாரத்துக்கும் இதனை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. 

இந்தியாவில் அறிமுகமானால் அனைத்து காஃபி காதலர்கள் மத்தியில் பிரபலமடையும். இந்தியா போன்ற பெரிய மார்க்கெட்டுகளை நோக்கி  விற்பனையை அதிகப்படுத்தவுள்ளதாகவும், ஏற்கெனவே காஃபி ஷாப் வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை அணுகி இந்த தயாரிப்பை பிரபலப்படுத்தும் எண்ணமும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இன்னமும் கொஞ்சம் யோசித்து பாருங்கள். நம் ஊரில் உள்ள கட்சிகளும், சினிமா ரசிகர்களும் செம்மொழி செல்ஃபியே, தங்கத்தாரகையே, அண்ணன் அகில உலக சூப்பர் ஸ்டாரேனு அட்ராசிட்டி காஃபி ரிப்பிள் தயாரித்தால் எப்படி இருக்கும் என்று. அப்பறம் என்ன செல்ஃபி வித் காஃபி தான்.

காஃபி ரிப்பிள் இயந்திரம் எப்படி செய்ல்பட்டு புகைப்படத்தை பிரிண்ட் செய்கிறது என்பதை விளக்கும் வீடியோ:

 

 

- ச.ஸ்ரீராம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!