கூகுள் லவ்வர்ஸ்... கூகுள் தந்திருக்கும் புதிய மாற்றங்கள் என்னென்ன?

காலையில் அலுவலகம் நுழைந்ததும் முதல் வேலையாக கூகுள் ஓப்பன் செய்வதுதான் பலருக்கும் வழக்கமாக இருக்கும். இணையத்தைப் பயன்படுத்தும் யாரும் கூகுளை ஓப்பன் செய்யாமல் ஒரு நாளைக்கூட கடத்தி விட முடியாது. அந்த அளவுக்கு கூகுள் சர்ச் இன்ஜினும், அதன் தயாரிப்புகளும் நம் வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாறிவிட்டது. கூகுள் கொண்டுவரும் எந்தவொரு சிறிய மாற்றமும் நம்மை  நேரடியாகப் பாதிக்கும். தற்போது கூகுள் சில மாற்றங்களைச் செய்துள்ளது. அவை என்னவென்று பார்ப்போமா?

கூகுள்

ஜி-மெயிலில் இனி 50MB வரை ஃபைல்களைப் பெறலாம் :

இ-மெயில் சேவையைப் பொறுத்தவரை தனிப்பட்ட பயன்பாட்டுக்கும், அலுவலகப் பயன்பாட்டுக்கும் கூகுளுக்குச் சொந்தமான ஜி-மெயில் தான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.  ஜி-மெயில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டே நூறு கோடியைத் தாண்டிவிட்டது.

ஜி-மெயில்

அதிக மெமரி கொண்ட ஃபைல்களை அனுப்பவும், பெறவும் ஜி-மெயில் பொதுவாக அனுமதிப்பதில்லை. இதுவரை அதிகபட்சமாக 25MB மெமரி கொண்ட ஃபைல்களை அனுப்பதான் ஜி-மெயில் அனுமதிக்கிறது. அந்த அளவைத்  தாண்டும் பட்சத்தில், தானாகவே கூகுள் ட்ரைவ் மூலமாக அப்லோட் செய்து அதன் லிங்கை மட்டுமே மெயிலில் அனுப்ப  முடியும். அதன்பின் அந்த லிங்கை கிளிக் செய்து இணைப்பை டவுன்லோட் செய்ய, அனுப்பியவர் அனுமதிக்க  வேண்டும். அதன் பின்னரே டவுன்லோட் ஆகும். ஆனால் இன்று முதல் 50MB அளவு வரை ஜி-மெயில் யூசர்ஸ்  ஃபைல்களை நேரடியாக மெயில் மூலமாகப் பெற ஜி-மெயில் அனுமதித்திருக்கிறது.

ஜி-மெயில் பயனர்கள் 25MB-க்கு மேல் மெயில் அனுப்பும்போது, வழக்கம்போல கூகுள் ட்ரைவ் மூலமாக  அப்லோட் ஆகும். ஆனால் மெயிலைப் பெறுபவர்களுக்கு 50MB அளவு வரை அது சாதாரண இணைப்பாகவே  காண்பிக்கிறது. டவுன்லோட் பட்டனைத் தட்டி அதை அப்படியே டவுன்லோட் செய்ய முடிகிறது.

கூகுள் ஸ்ப்ரெட் ஷீட்டில் புதிதாக சில வசதிகள் :

கூகுள் டாக்குமென்ட்ஸ் வசதிகளில் ஒன்றான ஸ்ப்ரெட்ஷீட்டில் புதிதாக சில வசதிகள் வரவிருக்கிறது. இதுவரை Row எனப்படும் வரிசை, Column எனப்படும் பத்தி போன்றவற்றை மட்டுமே டெலீட் செய்ய முடியும். ஆனால் இனிமேல் குறிப்பிட்ட Cell-களை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றையும் டெலீட் செய்ய முடியும்.

google

இதே போல், ஒரு கட்டத்தில் இருக்கும் எழுத்துக்களை இனி விருப்பம்போல் எந்த திசையில் வேண்டுமானாலும் திருப்பிக் கொள்ளும் ’ரொட்டேட் டெக்ஸ்ட்’ வசதி, அக்கவுண்டிங் ஃபார்மட் வசதிகளையும் கூகுள் தனது ஸ்ப்ரெட்ஷீட்டில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் சில பார்டர் ஸ்டைல்களையும் கூகுள் அறிமுகப்படுத்தியிருக்கிறது. மைக்ரோசாப்ட்டின் எக்ஸலில் ஏற்கெனவே இருக்கும் வசதிகள் தான் என்றாலும், தற்போதுதான் இந்த வசதிகள் ஸ்ப்ரெட்ஷீட்டில் அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்த வசதிகளை வருகின்ற 6-ம் தேதியிலிருந்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மொஸில்லா ப்ரெளசரில் ‘ஹேங்க்-அவுட்’ வேலை செய்யாது :

கூகுள் ஹேங்க்-அவுட்

கூகுள் அக்கவுன்ட் மூலம் ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்ய உதவும் ஒரு வசதி ‘ஹேங்க்-அவுட்’. மொஸில்லா நிறுவனத்தின் ஃபயர்பாக்ஸ் 52 வெர்சன் ப்ரெளசரானது ப்ளகின்களை அனுமதிக்காது என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. ‘ஹேங்க்-அவுட்’ வசதி ப்ளகின்கள் மூலமாக தான் ஆடியோ மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்கிறது என்பதால், 7-ம் தேதிக்கு மேல் புதிய ஃபயர்பாக்ஸ் ப்ரெளசரில் இது தற்போதைக்கு வேலை செய்யாது. இதை சரிசெய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயனாளர்களின் வசதி மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கூகுள் புதிது புதிதாக பல மாற்றங்களைச் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- கருப்பு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!