வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (04/03/2017)

கடைசி தொடர்பு:17:46 (04/03/2017)

உஷார்... மொபைல்,கணினி மூலம் உங்கள் ப்ரைவஸி இப்படியும் பறிபோகலாம்? #CyberSecurity

ப்ரைவஸி

பாடகி சுசித்ரா ட்விட்டர் பக்கத்திலிருந்து தமிழ் சினிமா நடிகர்களின் ப்ரைவஸி படங்கள் வெளியாகியுள்ளளன என்ற செய்தி பரவியதும், வாட்ஸ்அப் க்ரூப்களில் டவுன்லோட் செய்யப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் வந்த வண்ணம் உள்ளன. ட்விட்டரில் இல்லாதவர்கள் கூட  ட்விட்டர் கணக்கு ஓப்பன் செய்து அந்த கணக்கை தொடர முயற்சிக்கிறார்கள்.  ஒரு நாளில் மட்டும் அவரது கணக்கை 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொடர்ந்துள்ளனர். அவரும் தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும் அதில் பதியப்படும் தகவல்கள் தன்னுடையது அல்ல என்றும் கூறியுள்ளார். 

இந்த பிரச்னைகள் ஒரு புறம் ஓடிக்கொண்டிருக்க இந்த தகவல்களால் தனிமனித உறவுகளும் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளன. நண்பன் ஒருவனுக்கு அவனது காதலியிடமிருந்து வரும் அழைப்பில் நமக்கு இடையே சில ப்ரைவஸி புகைப்படங்களை பகிர்ந்துள்ளோம் அதனை டெலிட் செய்து விடலாம். நம்பிக்கையில்லாமல் இல்லை. இன்று நடந்தது போல யாரவது ஹேக் செய்துவிட்டால் என்ன செய்வது என்ற அளவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. உண்மையிலேயே இன்றைய டிஜிட்டல் உலகம் ப்ரைவஸி விஷயத்தில் பாதுகாப்பாக தான் இருக்கிறதா என்றால் இல்லை என்பது தான் பதில்.

இந்த டிஜிட்டல் உலகில் நமது செயல்பாடுகளை நமக்கு தெரியாமல் யாரோ ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றால் நீங்கள் நம்புவீர்களா? அது எப்படி நானும் இன்னொருவரும் தனிப்பட்ட முறையில் சாட் செய்வது யாருக்கு தெரியும் என்று நீங்கள் கேட்கலாம். உங்கள் பர்சனல் இந்த மூன்று முக்கியமான வழிகளில் இன்னொருவருக்கு எளிதில் கிடைத்துவிடுகிறது.

1. பெரும்பாலும் பர்சனல் தகவல்கள் நமது மெஸென்ஜர் உரையாடல்களிலோ அல்லது வாட்ஸ்அப், ஹைக் போன்ற உடனடி ஆப்ஸ்கள் மூலமாக தான் நடக்கிறது. இந்த விஷயங்களில் நமது முதல் எதிரி நாம் எல்லா நேரங்களிலும் இந்த ஆப்ஸ்களில் இருப்பது தான். சில நேரங்களில் நமது லேப்டாப், கணினி ஆகியவற்றை நிறைய இடங்களில் லாக் இன் செய்து வைத்துவிடுகிறோம். யாரவது அதே இடத்தில் மீண்டும் லாக் இன் செய்தால் அதில் உங்கள் கணக்குடன் துவங்கும் அபாயம் உள்ளது. இதனால் உங்களது உரையாடல்கள் எளிதில் மற்றவர்களுக்கு தெரிந்தும் அதனைக் கொண்டு ஒருவரை மிரட்டுவது அதிகரித்துவருகிறது. 

இதற்குத் தீர்வு உங்களது கணக்கை ஓப்பன் செய்து எல்லா டிவைஸ்களில் இருந்து லாக் அவுட் செய்யும் ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் நீங்கள் லாக் இன் செய்த அனைத்து சிஸ்டங்களில் இருந்தும் லாக் அவுட் ஆகிவிடும் அதன்மூலம் உங்களை தகவல் பறிபோய் விடுமோ என்று பயப்பட வேண்டாம்.

ப்ரைவஸி

2. அலுவலகமோ அல்லது வீடோ யாராவது ஒருவர் உங்களிடம் இருந்து ஒரு ஃபைலை கேட்கிறார் என்றால் உடனடியாக இ-மெயில் ஐடி பாஸ்வேர்டை கொடுத்து எடுத்துக்கொள்ளுங்கள் என கூறிவிடுகிறார்கள். கேட்டால் அந்த மெயிலில் பர்சனலாக எதுவுமே இருக்காது என்கிறார்கள். இங்குதான் பிரச்னை ஆரம்பிக்கிறது நிச்சயம் அந்த மெயில் உங்கள் மொபைலிலும் லாக் இன் ஆகி இருக்கும். அதில் உங்கள் புகைப்படங்களை கூகுள் போட்டோஸ் எனும் க்ளவுட் ஸ்டோரேஜில் சேமிக்கிறீர்களா என கேட்டதற்கு ஆம் என்று எப்போதாவது அனுமதி அளித்து வைத்திருப்பீர்கள். அந்த போட்டோக்களை இந்த மெயில் ஐடியை ஓப்பன் செய்தே பார்க்க முடியும், இதே போல் வீடியோ, ட்ரைவ் போன்றவற்றையும் அறிய முடியும். நீங்கள் யாருக்கும் தெரியாமல் சில இடங்களுக்குச் சென்று வர நினைப்பீர்கள் நீங்கள் எந்த இடத்துக்கெல்லாம் சென்றிருக்கிறீர்கள் என்று வரைபடத்துடன் காட்டவும் உங்கள் மெயில் ஐடி போதும். இது நீங்களாக முன் வந்து மெயில் ஐடி பாஸ்வேர்டை கொடுத்தால் தான் என்றில்லை. உங்கள் கூகுள் க்ரோமில் சேமிக்கப்பட்ட பாஸ்வேர்டாகவோ அல்லது ப்ரெளசிங் சென்டரில் நீங்கள் லாக் அவுட் செய்ய மறந்தோ அல்லது உங்கள் கணக்கை ஹேக் செய்தாலோ இதெல்லாம் நடக்க வாய்ப்புள்ளது.

இதற்குத் தீர்வு இரட்டை செக்யூரிட்டி செக் தான். நீங்கள் பாஸ்வேர்டு கொடுத்து லாக் இன் செய்தாலும் உங்கள் போனுக்கு ஒரு ஓடிபி வரும் அதனை வைத்து தான் லாக் இன் செய்ய முடியும்,. அப்படி செய்தால் உங்கள் கணக்கு தற்போது வேறு ஒரு கணினியில் திறக்கப்பட்டுள்ளது என்ற செய்தியையும் நீங்கள் பெற முடியும். அதனை ஆக்டிவேட் செய்து வைப்பது சிறந்தது. 

3. கணினி மற்றும் லேப்டாப் அல்லது செல்போனை ரிப்பேர் செய்ய அளிக்கும்போது உங்கள் கணினியில் உள்ள மெமரியில் ஏதேனும் பர்சனல் தகவல்களை சேமித்து வைத்திருந்தால் அதனை ஃபார்மெட் செய்து அளிக்கவும் சில சமயங்களில் அதையும் கூட அவர்களால் திரும்ப எடுக்க முடியும் இருந்தாலும் இப்படி செய்வதன் மூலம் பெரும்பாலான தகவல்கள் திரும்பப் பெறாமல் இருக்க முடியும். இது போன்ற இடங்களில் இருந்து பெரும் தகவல்கள் அதிக அளவில் மிரட்டலுக்கு பயன்படுத்தப்படுவதாக  கூறப்படுகிறது.

இவையெல்லாம் நமக்கு தெரியாமல் நம் தகவல்கள் இன்னொருவரிடம் செல்வதற்கான வழிகள். ஆனால் தெரிந்தே சில விஷயங்களை நாம் செய்து வருகிறோம். அவசரத்துக்காக இ-மெயில் பாஸ்வேர்டுகளை நண்பர்களிடம் பகிர்வது, நண்பர்களின் கணினியில் நமது பர்சனல் விஷயங்களை சேமித்து வைப்பது, ப்ரெளசிங் சென்டர்களில் டவுன்லோட் செய்யும் புகைப்படங்கள், அல்லது வீடியோக்களை டெலிட் செய்யாமல் வந்துவிடுவது போன்றவற்றில் நமது ப்ரைவஸி பறிபோக வாய்ப்புள்ளது.

ப்ரைவஸி

இவையெல்லாம் நாம் அறிந்த விஷயங்கள் என்றாலும் நம்மை அறியாமல் சில விஷயங்களில் நம்மிடமிருந்து தகவல்கள் திருடப்பட்டு கணக்குகள் ஹேக் செய்யப்படும். இது குறித்து இன்ஃபி செக்யூரிட்டி நிறுவனத்திடம் கேட்டபோது, '' நீங்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்கள் அல்லது இணையதளங்கள் போலவே பிஷ்ஷிங் தளங்கள் எனப்படும் போலி தளங்களை அதே பெயரில் உருவாக்கி உங்கள் பாஸ்வேர்டுகளைப் பெற முடியும், வங்கி பரிவர்த்தனைகளில் போலி ஆப்ஸ்கள் மூலமாகவும், ஏடிஎம் கார்டு க்ளோனிங் மூலமாகவும் உங்கள் தகவல்களைப் பெற முடியும். 

இதற்கு நீங்கள் சரியான தளத்தின் பெயரை நீங்களே டைப் செய்து உள்நுழைவது சிறந்தது. வங்கிகளின் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள ஆப்ஸ்களை பயன்படுத்துங்கள். சமூக வலைதளங்கள் ஹேக் செய்யப்பட்டால் அதுகுறித்த புகாரை உடனடியாக பதிவுசெய்து அதில் உங்கள் தகவல்கள் பரவாமல் இருக்க தற்காலிக டி-ஆக்டிவேட் வசதியை கையில் எடுங்கள். பின்னர் யார் ஹேக்கர் என்பதை கண்டறிவது குறித்த பணிகளில் இறங்கலாம். இதுதான் நமது தகவல்களை காக்கும் வழி. இணையம் என்பது எப்போதுமே 100 சதவிகித பாதுகாப்பானது அல்ல. அதனை எந்த அளவுக்கு அதிகமாக பாதுகாத்து வைத்திருக்கிறோம் என்பது தான் இங்கிருக்கும் சவால் என்றனர்.

இந்த பாதுகாப்பற்ற டிஜிட்டல் உலகைத் தவிர்த்துவிட்டும் ஒருவரால் இயங்குவது கடினம்.  டிஜிட்டல் என்ற வார்த்தைக்குள் அதிகம் நமது தனிப்பட்ட விஷயங்களைக் கொண்டு போகும்போது யாரோ ஒருவரிடம் நமது பர்சனலை விட்டுச் செல்கிறோம் என்ற கவனத்துடன் இருந்து கொண்டே இருந்தால் இந்த ஆபத்துகளில் சிக்காமல் இருக்கலாம். 

- ச.ஸ்ரீராம்


டிரெண்டிங் @ விகடன்