வெளியிடப்பட்ட நேரம்: 11:27 (05/03/2017)

கடைசி தொடர்பு:10:26 (06/03/2017)

ஜியோ, வோடஃபோன், ஏர்டெல்... டேட்டா ரேஸில் முந்துவது யார்? #TariffComparison #VikatanExclusive

பெரிய ஏற்ற இறக்கங்கள் ஏதும் இல்லாமல் இருந்த இந்திய டெலிகாம் மார்க்கெட்டில் கடந்த வருடம் பெரும் அதிர்வையே ஏற்படுத்திவிட்டது ஜியோ. முதல் மூன்று மாதம் இலவச வாய்ஸ்கால், அன்லிமிடெட் டேட்டா என சலுகைகளை அள்ளிவீச தடதடவென உயர்ந்தனர் ஜியோ வாடிக்கையாளர்கள். இதை சமாளிக்க ஏர்டெல், வோடஃபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட நிறுவனங்கள் புதுப்புது கட்டண விவரங்களை அறிவித்தனர். ஜியோவும் தொடர்ந்து வாடிக்கையாளர்களை சம்பாதிக்க, தனது 'வெல்கம் ஆஃபரை' ஹேப்பி நியூ இயர் ஆஃபர் என மாற்றி மார்ச் 31 வரை தனது இலவச சேவைகளை நீட்டித்தது. இதனைத் தொடர்ந்து 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் என்ற இலக்கையும் தொட்டது. மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு ஜியோவின் இலவச சேவைகள் நீட்டிக்கப்படுமா அல்லது கட்டண சேவைகள் துவங்குமா என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் பேசிய அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ ப்ரைம் சேவையைப் பற்றி அறிவித்தார். தற்போது ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட நிறுவனங்களும் புதிய கட்டண விவரங்களை அறிவித்துள்ளன. இவற்றில் எது நமக்கு லாபம்?

ஜியோ வோடஃபோன் ஏர்டெல்

ஜியோ ப்ரைம் சேவையானது, 99 ரூபாய் பணம் செலுத்தி இந்த மாத இறுதிக்குள் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என முகேஷ் அம்பானி அறிவித்திருந்தார். அத்துடன் தற்போது இலவசமாக கிடைக்கும் ஹேப்பி நியூ இயர் ஆஃபரைத் தொடர்ந்து பெற, மாதந்தோறும் 303 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் அறிவித்தார். 

இதன்படி ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ஜியோ ப்ரைம் உறுப்பினராக 99 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். பின்பு நீங்கள் ப்ரைம் உறுப்பினராக மாறியவுடன் 28 நாட்களுக்கு ஒருமுறை 303 ரூபாய்க்கு கட்டணம் செலுத்த வேண்டும். ப்ரைம் உறுப்பினர் மற்றும் 303 ரூபாய் கட்டணம் செலுத்துவதன் மூலம் 28 நாட்களுக்கு, ஒரு நாளைக்கு 1 GBடேட்டா வீதம் 28 GB 4Gடேட்டா, இலவச வாய்ஸ்கால், இலவச எஸ்.எம்.எஸ் ஆகியவை கிடைக்கும். ஜியோவில் அன்லிமிடெட் டேட்டா என்றாலும் கூட, ஒரு நாளைக்கு 1 GB டேட்டா மட்டும்தான் 4G டேட்டா. அதன்பிறகு இணைய வேகம் 128 Kbps ஆகக் குறைந்துவிடும்.  

ப்ரைம் உறுப்பினராக (ஒரே ஒரு முறை மட்டும்) - ரூ.99

ஜியோ கட்டணங்கள்

பிறகு 28 நாட்களுக்கு - ரூ. 303 (அன்லிமிடெட் டேட்டா, இலவச வாய்ஸ்கால், இலவச எஸ்.எம்.எஸ், இலவச ஜியோ சேவைகள்)
வேலிடிட்டி 28 நாட்கள்தான் என்பதால், ஒரு வருடத்துக்கு 13 முறை ரீசார்ஜ் செய்வீர்கள். ஒரு வருடத்திற்கு மொத்த தொகை - ரூ. 4038

ப்ரைம் உறுப்பினராக 99 ரூபாய் கட்டணம் செலுத்தி நீங்கள் பதிவு செய்யவில்லை என்றாலும் கூட, நீங்கள் ஜியோ சேவைகளை அனுபவிக்க முடியும். அதாவது நீங்கள் ப்ரைம் உறுப்பினராக பதிவு செய்யாமல், 303 ரூபாய் செலுத்தினால் உங்களுக்கு அன்லிமிடெட் டேட்டா கிடையாது. 28 நாட்களுக்கு 2.5 GB டேட்டா மட்டுமே! அதே சமயம் இலவச வாய்ஸ்கால், இலவச எஸ்.எம்.எஸ் ஆப்ஷன்கள் உங்களுக்கும் உண்டு. 

ப்ரைம் உறுப்பினர் இல்லாமல் 28 நாட்களுக்கு - ரூ. 303 (2.5 GB டேட்டா. இலவச வாய்ஸ்கால், இலவச எஸ்.எம்.எஸ், இலவச ஜியோ சேவைகள்)

ஒரு வருடத்திற்கு - ரூ. 3939

இவை இரண்டும் போக 28 நாட்கள் வேலிடிட்டிக்கு ரூ.499 திட்டமும் உண்டு. இதன்படி 4G டேட்டாவின் அளவு இருமடங்காக வழங்கப்படும். இத்துடன் மார்ச் 31-ம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற ஒரு சலுகையையும் அறிவித்துள்ளது ஜியோ. இதன்படி இந்த மாத இறுதிக்குள் 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 5 GB மற்றும் 499 ரூபாய் அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்தால் 10 GB-யும் 4G டேட்டா கூடுதலாகக் கிடைக்கும். 

ஜியோ திட்டங்களை நீங்கள் கவனித்தாலே ஒன்று புரியும். உங்களுடைய ஆசையை எளிதாகத் தூண்டும்படிதான் இருக்கிறது இவை. உதாரணமாக 303 ரூபாய்க்கு ப்ரைம் உறுப்பினருக்கு கிடைக்கும் சலுகையையும், அதே 303 ரூபாய்க்கு ப்ரைம் உறுப்பினர் அல்லாதவருக்கு கிடைக்கும் டேட்டா அளவையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இரண்டையும் ஒப்பிட்டு நிச்சயம் ப்ரைம் உறுப்பினர் ஆகிவிடுவீர்கள். ஜியோவின் முதல் இலக்கு அதுதான்.

அடுத்தது 303 ரூபாய் மற்றும் 499 ரூபாய் திட்டங்கள். 303 ரூபாய் உடன் கூடுதலாக 196 ரூபாய் செலுத்தினால், உங்களுக்கு மேலும் 28 GB-க்கு 4G டேட்டா கிடைக்கும். அதேபோல மார்ச் 31-க்குள் ரீசார்ஜ் செய்தால் 10 GB-க்கு 4G டேட்டா கிடைக்கும். இந்த இரண்டையும் ஒப்பிட்டு பலர் ரூ. 499 ஆப்ஷனை தேர்வு செய்வார்கள். இது இரண்டாவது இலக்கு. 

ஜியோவை சமாளிக்கும் வகையில் வோடஃபோன் நிறுவனமும் புதிய ஆஃபர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி ரூ.346-க்கு ரீசார்ஜ் செய்தால், 28 நாட்களுக்கு தினமும் 1GB அளவுக்கு 3G / 4G டேட்டாவுடன், அன்லிமிடெட் வாய்ஸ்கால் வசதியும் கிடைக்கும். அதுவும் முதல்முறை வோடஃபோன் பயன்படுத்துபவர் என்றால் இதே சலுகைகள் இருமடங்காக கிடைக்கும். அதாவது 56 GB டேட்டா, 56 நாட்களுக்கு கிடைக்கும். ஒருமுறை நீங்கள் 346 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்துவிட்டால், இதே வசதியை அடுத்த ஒரு வருடத்திற்கு நீங்கள் பெறலாம். இதன்படி பார்த்தால் வருடத்திற்கு ரூ. 4,498.

அடுத்து ஏர்டெல் பக்கம் வருவோம். ஏர்டெல் நிறுவனம் ரூ.145 மற்றும் ரூ.349 ஆகிய விலையில் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.349-க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலமாக 28 நாட்களுக்கு, நாளொன்றுக்கு 1 GB வீதம் 28 GB-க்கு 4G டேட்டா கிடைக்கும். ஒரு நாளைக்கு 1 GB என்றாலும் அனைத்தையும் நாம் பயன்படுத்த முடியாது. காரணம் இதில் 500 MB டேட்டாவை பகல் நேரத்திலும், மீதி 500 MB டேட்டாவை அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள்ளும்தான் பயன்படுத்த முடியும். இத்துடன் எல்லா நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் இலவசம். ஒரு வருடத்திற்கு = ரூ.4,537

இதில் ஏர்டெல் நிறுவனத்தின் ப்ளானில்தான் சிக்கல் இருக்கிறது. காரணம் 1 GB டேட்டாவை முழுமையாக அனுபவிக்க முடியாது. மற்றபடி கட்டணத்தின் படி பார்த்தால் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் இடையே கட்டண ரீதியாகப் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை. ஜியோ என்னும் ஜீ-பூம்பா மந்திரம் இன்னும் என்னவெல்லாம் செய்யும் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

- ஞா.சுதாகர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்