வெளியிடப்பட்ட நேரம்: 10:22 (06/03/2017)

கடைசி தொடர்பு:10:22 (06/03/2017)

90களில் ஹிட் ஆன பாடல்கள் தெரியும்.. மொபைல்கள் தெரியுமா? #MobileMania

"டேய் எங்கண்ணன் புதுசா மொபைல் வாங்கியிருக்கான்டா. இன்னிக்கு சாயங்காலம் வீட்டுக்கு வந்தேன்னா பார்க்கலாம். அதுல "ஸ்நேக்" கேம் இருக்கு."

" என்னடா சொல்ற?! நிஜமாவா? வித் ஆன்டனாவா? வித் அவுட் ஆன்டனாவா? பிக்சர் மெஸேஜ் எல்லாம் இருக்கா?"

" வித் அவுட் ஆன்டனாடா..."

" என்னடா டேய்... வித் அவுட் ஆன்டனா வாங்கக் கூடாதுடா. செல்போன் ஹீட், அந்த வேவ்ஸ் எல்லாம் போனுக்குள்ளயே இருக்குமான்டா. கேன்சர் வந்துடும்னு சொல்றாங்க. சரி... ஸ்நேக் கேம்ல எவ்வளவு ஸ்கோர் எடுத்த?" ... ஒரு பெரிய கும்பலாகப் போய் அந்த நோக்கியா 1100வைப் பார்த்தது, கிட்டத்தட்ட அடுத்த 3 மாதங்களுக்கான  ஹாட் டாபிக்கானது. 

கலர் கலரான பேனல்கள் வாங்கப் போவது, சிலிகான் பவுச் வாங்குவது, "ஹார்டின்" பேக் லைட் பிக்ஸ் செய்வது, ஸ்டிக்கரிங் செய்வது என அந்த செல்போன்கள் அண்ணன்களால் பூஜிக்கப்படும். கேம் விளையாடுவதற்கோ, பெருமைக்காக நண்பனுக்கு போன் பண்ணவோ அண்ணன்களுக்குத் தெரியாமல் செல்போனை சுடுவது சுவாரஸ்யமான விளையாட்டு. ஸ்கூல் ஆன்வல் டே நிகழ்ச்சிக்கு அண்ணன்களின் கை,கால்களில் விழுந்து கெஞ்சிக் கதறி, போராடி செல்போனை வாங்கிக் கொண்டு ப்ரெண்ட்ஸ் முன்னாடி சீன் போட்டது மாஸ் நினைவுகள். இப்படி ஒவ்வொரு காலத்துல செல்போனை அனுபவிச்சவங்களுக்கு, ஒவ்வொரு விதமான "நாஸ்டால்ஜிக்" மொமண்ட்ஸ் கண்டிப்பா இருக்கும். 

என்னதான் இன்னிக்கு "தொடு திரை தொழில்நுட்பம்" (அதாங்க... டச் ஸ்கிரீன்) எல்லோரையும் தொட்டிருக்குன்னாலும், அந்த ரப்பர் பட்டன்கள தொட்ட சுகம் தனி தான். அப்படி முதன்முதலா வந்த செல்போன்ல இருந்து... 2000ற்கு முன்னாடி வரைக்கும் வந்த சில முக்கிய செல்போன்களின் தொகுப்பு இது: 

1983 - மோட்டோரொலா டைனாடாக் (Motorola DynaTac) - 8000 X:

செல்போன்களோட காட்பாதர் இந்த டைனாடாக். 1973ல மோட்டோரொலாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மார்டின் கூப்பர், ஒரு மாதிரி செல்போனை கண்டுபிடிக்கிறார். ( ஒரு மாதிரியான செல்போன் இல்லை!!! மாதிரி - Prototype) . பலகட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, 1983ல விற்பனைக்கு வந்தது. 

முழுசா சார்ஜ் ஆக பத்து மணி நேரம் ஆகும். அதுக்காக பத்து மணி நேரம் எல்லாம் பேச முடியாது. அதிகபட்சம் அரை மணிநேரம்தான் டாக் டைம். எடை கிட்டத்தட்ட 800 கிராம் இருந்தது. இந்த "செல்போனை" செல்லமா "செங்கல் போன்"னு தான் அந்தக் காலத்துல சொல்லியிருக்காங்க. ஒரே விஷயம் அந்த கால கோடீஸ்வரர்கள் மட்டும்தான் இதை வாங்கியிருப்பாங்க காரணம் அன்னிக்கே இதோட விலை 4,000 அமெரிக்க டாலர்கள். 

செல்போன் மொபைல் பழைய போன்கள்           செல்போன் மொபைல் பழைய போன்கள்

                                                                                                               செல்போன்களுடன் மார்டின் கூப்பர்

1989 - மோட்டோரொலா மைக்ரோடாக் (Motorola MicroTac) - 9800 X:

"அட போங்கப்பா ... செங்கல் போன பாக்கெட்லேயே வைக்க முடியில"ன்னு அலுத்துக்கிட்டவங்களுக்காகவே அறிமுகப்படுத்தப்பட்டது இந்த மைக்ரோடாக். இதுல "மவுத் பீஸ்" , கீ பேடோடு மடித்து வைக்கும் மாடலில் வடிவமைக்கப்பட்டது. வருங்காலத்துல வந்த ஃப்ளிப் போன்களோட முன்னாடி... சாரி, முன்னோடி இவர்தான். 

"இந்த போன நீங்க ஜாலிய உங்க பாக்கெட்லேயே வச்சுக்கலாம்" ன்னு சொல்லி ஏக விளம்பரம் கொடுக்க, விற்பனையில் பட்டையக் கிளப்பியது.

செல்போன் மொபைல் பழைய போன்கள்

1992 - மோட்டோரொலா இண்டர்நேஷனல் (Motorola International) - 3200:

"இதென்னப்பா சுடுகாட்லருந்து எடுத்து வந்த எலும்பு மாதிரி இருக்கு..." என்று கமெண்ட் செய்த ஜெர்மானியர்கள் இதை "எலும்பு" போன் என்றே அழைத்தார்கள். 21 பட்டன்கள் இதில் இருந்தன. 750mAh பேட்டரி பவர் இருந்தது. 5 மணி நேரம் சார்ஜ் செய்தால் போதும். செல்போன்ல பேசாம சும்மா சீன் மட்டும் போட்டா 8 மணி நேரம் சார்ஜ் நிக்கும். பேசுனா ஒரு மணி நேரம் தாங்கும். ஜி.எஸ்.எம். டெக்னாலஜியில வந்த முதல் செல்போன் இதுதான். 

செல்போன் மொபைல் பழைய போன்கள்      செல்போன் மொபைல் பழைய போன்கள்

1992 - நோக்கியா 1011:

"வர்லாம் வா...வர்லாம் வா... நோக்கியா"ன்னு எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த நோக்கியா வரலாற்றுல மாஸ் என்ட்ரி கொடுத்த தருணம். 10-11-1992 அன்று ஒரு செல்போனை அறிமுகப்படுத்த நோக்கியா அந்த மாடலுக்கு பேர் வைக்க ரொம்பவெல்லாம் யோசிக்கல. அறிமுகப்படுத்தும் நாளையே மாடல் நம்பராக வைத்தது. அப்படி பிறந்தவன் தான் "நோக்கியா 1011". ஆனா, இந்த மாடல்ல நோக்கியாவோட அடையாளமா இருக்கும் அந்த "தனன்னா னே தன..." (ஓ... இசைய எழுதனா கேட்க முடியாதுல்ல!!) ரிங்டோன் இதில் இடம் பெறவில்லை.

செல்போன் மொபைல் பழைய போன்கள்

 1996 - மோட்டோரொலா ஸ்டார்டாக் (Motorola StarTac):

முதன்முதலில் வந்த பக்காவான ஃப்ளிப் போன் இதுதான். 88 கிராம் எடை கொண்டிருந்தது. முதமுதலாக வைப்ரேஷன் மோடு அறிமுகப்பட்டுத்தப்பட்டது இதில்தான். நெட்வொர்க் ரேஞ்ச் இருப்பதை பச்சை இண்டிகேட்டர் மூலம் காட்டும். கிட்டத்தட்ட 60 மில்லியன் செல்போன்கள் விற்பனையாகின. 

செல்போன் மொபைல் பழைய போன்கள்

1996 - நோக்கியா 8110:

முதல் ஸ்லைடர் மாடல் போன். ஸ்லைடரை மேலே தூக்கினாலே கால் ஆன் ஆகிவிடும். கொஞ்சம் வளைந்த மாதிரி இருப்பதால் செல்லமாக "வாழைப்பழ போன்" என்ற பெயரைப் பெற்றது. 

    செல்போன்                                           செல்போன் மொபைல் பழைய போன்கள்

 

நோக்கியா 9000 கம்யூனிகேட்டர்:

8 எம்பி மெமரியோடு வந்த செல்போன். கொஞ்சம் ஜேம்ஸ் பாண்ட் கேட்ஜெட் ஸ்டைலில் இருக்கும் இதுதான் உலகின் முதல் ஸ்மார்போன் என்கிறார்கள். 

செல்போன்

நோக்கியா 5110:

எல்லா சிறப்புகளையும் விட்டுத் தள்ளுங்கள். இந்த செல்போன் இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த படைப்பு. ஒரே காரணம், இதில்தான் முதன் முதலில்  "ஸ்நேக்" கேம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

செல்போன்

1999 - நோக்கியா 3210 :

செல்போன் வரலாற்றில் அதிரிபுதிரி ஹிட்டான ஒரு போன். 160 மில்லியன் செல்போன்கள் விற்பனையாகின. பிக்சர் மெஸேஜ் வசதி முதன்முதலில் கொண்டுவரப்பட்டது இதில்தான். வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும் ஆன்டனாவுக்கு "பை,பை" சொன்ன முதல் போன். அதுவரை பணக்காரர்களின் சொத்தாக மட்டுமே இருந்த செல்போனை, நடுத்தர வர்க்கத்தின் கைகளுக்கு கொண்டு சேர்த்த சிகப்பு சிறப்பு இதற்கு உண்டு.

செல்போன்         செல்போன்

இதையெல்லாம் பார்க்கும்போது, கையிலருக்கும் டச் போன் மறைந்து இதுல ஏதாவது ஒண்ணு வந்துடக் கூடாதான்னு தோணுதுல்ல??? சேம் பீலிங்!!!

- இரா. கலைச் செல்வன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்