பாதிப்புகள் ஏற்படுத்தும் மொபைல் கதிர்வீச்சு... பாதுகாப்பு வழிமுறைகள்! #MobileMania

மொபைல் வெளிப்படுத்தும் கதிர்வீச்சு அபாயம் குறித்து நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். உலகம் முழுவதும் 400 கோடிக்கும் மேற்பட்டோர் அன்றாடம் மொபைலை பயன்படுத்தி வருகின்றனர். மொபைல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. பணிச்சூழல் காரணமாக அன்றாட வாழ்வில் ஒரு நாள்கூட மொபைல் இல்லாமல் கடத்துவது கடினம் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், மொபைலில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு அபாயம் குறித்தும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

மொபைல் கதிர்வீச்சு

மொபைல் கதிர்வீச்சு மின்காந்த அலைகள் (Radiofrequency Electromagnetic Fields) புற்றுநோய் ஏற்பட ஒரு காரணியாக அமையலாம் என  உலக புற்றுநோய் ஆய்வுக் கழகம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. உறுதியாக இல்லாவிட்டாலும், புற்றுநோய் ஏற்பட இவையும் காரணிகளாக அமையலாம் என்பதை 'குரூப் 2பி' என வகைப்படுத்துவார்கள். அந்தப் பட்டியலில்தான், உலக சுகாதார நிறுவனத்தால் மொபைல் கதிர்வீச்சு சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும், செல்போனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சினால் புற்றுநோய் மட்டுமின்றி பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என 'எலக்ட்ரோமேக்னடிக் பயாலஜி மற்றும் மருந்துகள் இதழ்' (Electromagnetic Biology and Medicine Journal) மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது. மொபைல் கதிர்வீச்சு காரணமாக சாதாரண தலைவலி, உடல் சோர்வு, தோல் சிதைவில் தொடங்கி மூளையில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகள் வரை பாதிப்பு ஏற்படலாம் என இந்த ஆய்வு எச்சரிக்கிறது. அதே நேரத்தில், மொபைலில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சின் அளவு குறைவு என்பதால் இத்தகைய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு என பல ஆய்வுக் குழுக்கள் மறுக்கின்றன. ஆனாலும் மொபைல் பயனாளர்களாகிய நாம் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியமாகிறது.

மொபைலில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சை நமது உடல் உள்வாங்கும் அளவை 'குறிப்பிட்ட உறிஞ்சு வீதம்' அதாவது 'ஸ்பெசிபிக் அப்சார்ப்சன் ரேட் (Specific Absorption Rate -SAR)' என்றழைக்கிறார்கள். சர்வதேச தகவல் தொடர்பு ஆணையத்தின் விதிமுறையின்படி, ஒருவர் 30 நிமிடம் இடைவிடாமல் மொபைலை காதில் வைத்துப் பேசும்போது உடல் எவ்வளவு கதிர்வீச்சை உள்வாங்கப்படுமோ, அதன் சராசரியே 'குறிப்பிட்ட உறிஞ்சு வீதம்' எனப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு கிராமிமுக்கு 1.6 வாட்ஸ் என்பதை விடக் குறைவாகத்தான் இந்த SAR கதிர்வீச்சின் அளவு இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.

உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் *#07# என்ற எண்ணை டயல் செய்தால் ஒரு திரை தோன்றும். அதில் 1.6 வாட்ஸ் என்ற அளவை விடக் குறைவான கதிர்வீச்சு குறிப்பிட்டிருந்தால் உங்கள் மொபைல் பாதுகாப்பானது. இதை விட அதிகமாக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் தரம்குறைந்த மொபைல்களைப் பயன்படுத்துவது, நாமே பலவித உபாதைகளை வரவேற்பது போலாகிவிடும். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொபைல் பயன்படுத்துவதை தவிர்க்க முடியாவிட்டாலும், அதன் பாதிப்புகளில் இருந்து முடிந்தவரை நம்மை தற்காத்துக்கொள்ள முடியும்.

மொபைல் கதிர்வீச்சில் இருந்து தற்காத்துக்கொள்ள சில வழிமுறைகள்:

மொபைல் கதிர்வீச்சு - தற்காத்துக்கொள்ள சில வழிமுறைகள்

  • சிக்னல் குறைவான இடங்களில் அதிக நேரம் மொபைலைப் பயன்படுத்தும்போது, பொதுவாக மொபைல் அதிக அளவில் கதிர்வீச்சை வெளிப்படுத்தும். எனவே சிக்னல் குறைவான இடங்களில் அவசியம் ஏற்பட்டால் மட்டும் மொபைலைப் பயன்படுத்தவும்.
  • மொபைலில் பேட்டரி சார்ஜ் 15 சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ளபோது அதிக அளவு கதிர்வீச்சு வெளிப்படும் என ஆய்வுகள் தெரிவிக்கிறது. எனவே பேட்டரி சார்ஜ் குறைவாக உள்ளபோதும் மொபைலை பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதே போல் சார்ஜ் போட்டுக்கொண்டே மொபைல் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
  • அதிக நேரம் மொபைலில் பேசும்போது கதிர்வீச்சின் பாதிப்பானது அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது. மொபைலை காதில் வைத்துப் பேசும்போது கதிர்வீச்சு காரணமாக மூளையானது நேரடியாகப் பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே முடிந்தவரை ஹேண்ட்ஸ் ஃப்ரீ மோட் அல்லது தரமான இயர்ஃபோன்கள் பயன்படுத்தி மொபைலில் பேசலாம்.
  • நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொலைக்காட்சி, ரேடியோ ஆகியவற்றிலிருந்தும் சிறிய அளவில் கதிர்வீச்சு வெளிப்படும். ஆனால் அவை உடலிலிருந்து சற்றுத் தொலைவில் இருப்பதால் அதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புக்குறைவு. குறைந்தது 20 செ.மீ தூர இடைவெளி இருந்தாலே கதிர்வீச்சு மின்காந்த அலைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். ஆனால் மொபைலை நாம் மிக நெருக்கமாக வைத்துப் பயன்படுத்துகிறோம் என்பதால் அதிக நேரம் பயன்படுத்துவதைக் குறைப்பது நலம்.
  • பொதுவாக மொபைலை தலையனைக்குக் கீழ் அல்லது அருகில் வைத்தபடி உறங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
  • கதிர்வீச்சின் பாதிப்பு குழந்தைகளுக்கு  இரு மடங்கு இருக்கும் என்பதால், குழந்தைகள் மொபைல் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்ப்பது நலம்.
  • செல்போன்களை சட்டையின் இடதுபக்க பாக்கெட்டில் வைத்தால், கதிர்வீச்சின் மூலம் இதயம் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. எனவே அதைத் தவிர்க்க வேண்டும்.
  • அதிக நேரம் மொபைலில் பேசவேண்டியிருந்தால் ஒரே காதில் வைத்துப் பேசாமல், சிறிது நேர இடைவெளியில் இரண்டு காதுகளிலும் மாற்றி மாற்றி வைத்துப் பேசவும்.
  • தோலில் கதிர்வீச்சு ஊடுருவுவதைத் தவிர்க்கும் 'ரேடியேஷன் டிஃபெண்டர் கேஸ்கள்' சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்துவதன் மூலம் கதிர்வீச்சில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
  • வழக்கத்தை விட அதிகம் சூடாகும் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்ஃபோன்கள் உபயோகிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

4ஜி, 5ஜி என நெட்வொர்க் சேவை அசுரவேகத்தில் வளர்ச்சியடைந்து வரும் இந்த டிஜிட்டல் யுகத்தில், கதிர்வீச்சில் இருந்து ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வதில் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.

- கருப்பு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!