வெளியிடப்பட்ட நேரம்: 17:34 (07/03/2017)

கடைசி தொடர்பு:17:05 (08/03/2017)

இனி “பஸ்ல டிரைவரை காணோம்” ஜோக் அடிக்க முடியாது..! #SelfDrivingBus

தானியங்கி பஸ்

தானியங்கி பஸ்ஸின் ஆல்பத்தை காண க்ளிக் செய்க

உலகத்துல எல்லாமே ஆளில்லா விஷயங்களா மாறிட்டு வருது. ரயில்வே கேட் ஆரம்பிச்சு கார் வரைக்கும் தானியங்கி விஷயங்கள் தலைகாட்ட ஆரம்பித்துவிட்டன. அந்த வரிசையில் அறிமுகமாகவுள்ளது தானியங்கி பஸ், என்னது ஆளில்லா பஸ்ஸா? உள்ள உட்கார்ந்திருக்கும் ஆளுங்களோட நிலைமை அப்படினு யோசிக்கறீங்களா? பயப்படத் தேவையில்லாத பாதுகாப்பான பஸ்ஸை தயாரித்து வருகிறது ப்ரான்ஸைச் சேர்ந்த தனியார் நிறுவனமான ஈஸி மைல். 

இந்த நிறுவனம் ஒரு கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் ஒரு ஜோடி பேருந்துகளைத் தயாரித்து சான் ஃப்ரான்சிஸ்கோவில் உள்ள காலியான தெருக்களில் சோதனைக்குட்படுத்தியது. இதன் அடுத்தகட்டமாக கலிஃபோர்னியாவில் மக்கள் உள்ள தெருக்களில் சோதனை செய்யப்படும் என்று இந்நிறுவனம் கூறியுள்ளது. 

சமீபத்தில் கலிஃபோர்னியா தொழில்நுட்பங்களை சோதித்து பார்க்கும் மையமாக மாறிவருகிறது. இந்த சோதனை எதிர்காலத்தில் போக்குவரத்து பிரச்னைகளை எதிர்கொள்ள ஏதுவாக இருக்கும். இதுபோன்ற பெரிய வாகனங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான் ஆட்டோமேஷனில் பெரிய சவால்.. அதில் தான் ஈஸி மைல் அதிக கவனம் செலுத்தியுள்ளதாம்.

நிறைய தானியங்கி கார்களில் இன்னமும் ஒரு கண்காணிப்பாளர் இருப்பார். அதற்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் ஸ்டியரிங் இல்லாத கார்களை 2015-ம் ஆண்டின் ஆரம்பத்தில் டெக்ஸாஸ் மற்றும் ஆஸ்டினில் சோதித்து பார்த்தது நினைவிருக்கலாம்.

பஸ்

தானியங்கி பஸ்ஸின் ஆல்பத்தை காண க்ளிக் செய்க

சான் ராமன் பிஷப் ரான்ச் ஆபீஸ் பார்க் எனுமிடத்தில் உருவாகும் இந்த திட்டத்தில் 12 பயணிகள் பயணிக்கக்கூடிய பேருந்தை வடிவமைத்துள்ளது. இந்த திட்டம் பொதுப்பயன்பாட்டுக்கு வரும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை வடிவமைத்துள்ள திட்ட மேலாளர் ஓடும் பேருந்துக்கு முன் ஒருவர் நகரும்போது அவரை அடையாளம் கண்டு பேருந்து தன் இயக்கத்தை நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

கலிஃபோர்னியாவில் சென்ற வருடம் நீதிமன்றம் இந்த வாகனத்தை மெதுவான வேகத்தில் சோதித்துப் பார்க்க அனுமதி வழங்கியது. இன்னும் சில மாதங்களில் நிறைய சோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளது இந்த ஈஸி மைல் ”இ.இஸட்10” மாடல் பேருந்துகள். இவை சான் ஃப்ரான்சிஸ்கோ நகரில் சோதிக்கப்பட்டதற்கு பின் கலிஃபோர்னியாவின் மற்ற நகரங்களில் சோதிக்கப்பட்டு 2018ல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் இரண்டு விஷயங்களைக் கவனத்தில் கொண்டு செயல்படுவதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. முதலில். மக்கள் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தெருக்களில் இருக்கும் ட்ராஃபிக்கிற்கு ஏற்ப வேகம் மாறும் வசதி, முழுக்கட்டுப்பாடு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இரண்டாவது முழுக்க முழுக்க தொழில்நுட்பத்தில் இயங்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கமாக உள்ளது. அதனால் தான் மனித கட்டுப்பாடே இல்லாத பஸ்ஸாக இதனை வடிவமைத்து வருகிறது ஈஸி மைல்.

அப்படி ஒருவேளை வந்தால் உலகின் முதல் மேம்படுத்தப்பட்ட ஸ்டியரிங் மற்றும் ஆளில்லா பேருந்தாக இது இருக்கும் . இனிமேல் யாரையும் மாடி பஸ்ல ஏறி அய்யோ ட்ரைவர் இல்லனு ஏமாத்துற மாதிரி ஏமாத்த முடியாது. நான் தான் ட்ரைவரே இல்லாத பஸ்ல போறேனேனு சொல்லுற அளவுக்கு மாறிடும். அந்த கன்டக்டர் நிலைமை தான் பாவம்...வர்லாம்..வர்லாம்...வானு யார்கிட்ட சொல்லுவாரு?

- ச.ஸ்ரீராம்


டிரெண்டிங் @ விகடன்