”விண்டோஸ்” கதவுகளை அடைக்க வருகிறது ஆண்ட்ராய்டு..! #WindowsVSAndroid | Android may soon beat windows OS in worldwide internet usage #WindowsVSAndroid

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (08/03/2017)

கடைசி தொடர்பு:16:19 (08/03/2017)

”விண்டோஸ்” கதவுகளை அடைக்க வருகிறது ஆண்ட்ராய்டு..! #WindowsVSAndroid

பரேட்டிங் சிஸ்டம் என்றாலே விண்டோஸ்தான் அதில் சூப்பர்ஸ்டார்; அதில் சந்தேகமே இல்லை. ஆனால் இந்த விஷயத்தில் அடுத்த சூப்பர்ஸ்டாராக மாறியிருக்கிறது ஆண்ட்ராய்டு. உலக அளவில் விண்டோஸ் மூலம் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை விடவும், ஆண்ட்ராய்டு மூலம் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருவது தற்போது தெரியவந்துள்ளது. 

ஆண்ட்ராய்டு மொபைல் ஆப்ஸ்கள்

ஸ்டேட்கவுன்ட்டர் என்னும் வெப் அனலிடிக்ஸ் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் இது தெரியவந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் உலகம் முழுவதும் இணையம் பயன்படுத்தியவர்களில் 38.6 % பேர் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் மூலம் இணையம் பயன்படுத்தியுள்ளனர். 37.4 % பேர் ஆண்ட்ராய்டு ஓ.எஸ் மூலம் இணையம் பயன்படுத்தியுள்ளனர். இணையப் பயன்பாட்டைப் பொறுத்தவரை இன்னும் விண்டோஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் ஆண்ட்ராய்டு முதலிடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது என்பதுதான் அடிக்கோடிட்டுக் காட்டவேண்டிய விஷயம். 

 

Source: StatCounter Global Stats - OS Market Share

2012-ம் ஆண்டு இணையப் பயன்பாட்டில் விண்டோஸின் பங்கு 82% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு ஒப்பிட்டுப் பார்த்தாலே ஆண்ட்ராய்டின் வளர்ச்சி நமக்கு புரியும். இதற்கு காரணம் மொபைல் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுதான் . கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல்முறையாக உலகம் முழுவதும் கணினி மூலம் இன்டர்நெட் பயன்படுத்தியவர்களை விடவும் மொபைல் மற்றும் டேப்லட் மூலம் இன்டர்நெட் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உலக அளவில் டெஸ்க்டாப் மூலம் இன்டர்நெட் பயன்படுத்தியவர்களின் சதவீதம் 48.7% ஆகவும், மொபைல் மற்றும் டேப்லட் மூலம் இன்டர்நெட் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 51.3 % ஆகவும் இருந்தது. இந்த விஷயத்தில் இந்திய அளவில் புள்ளிவிவரங்களைப் பார்த்தால் இன்னொரு ஆச்சர்யமும் காத்திருக்கிறது. அதாவது இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் 61.9 % பேர் ஆண்ட்ராய்டுதான் உபயோகிக்கின்றனர். விண்டோஸ் மூலம் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 19.4 சதவீதம்தான். இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆண்ட்ராய்டு பயனாளர்கள் அதிகமாகிவிட்டனர் என்பதையே இது காட்டுகின்றது.

 

Source: StatCounter Global Stats - OS Market Share

மொபைல்தான் முக்கிய டார்கெட்:

சில ஆண்டுகளுக்கு முன்னர் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டுமென்றால் பிரவுசிங் சென்டர்கள்தான் பலருக்கும் இருந்த ஒரே ஆப்ஷன். ஆனால் இன்று உங்கள் மொபைலில் டேட்டா பேக் போட்டாலே நம் தேவை முடிந்துவிடும். அந்த அளவிற்கு இன்டர்நெட் பயன்பாடு என்பது மொபைலில் எளிமையாகவும், வேகமானதாகவும் மாறிவிட்டது. எனவே இன்று வணிக ரீதியாக இணையதளங்களை துவங்கும் பலரும், தங்கள் இணையதளங்கள் மொபைல் ஃப்ரெண்ட்லியாக இருக்கும்படியே வடிவமைக்கின்றனர். இதன் அடுத்தகட்ட பாய்ச்சல்தான் ஆப்ஸ்களின் பயன்பாடு. கணினியில் இணையதளங்கள் என்றால், மொபைலில் ஆப்தான் கில்லி. இன்று பெரும்பாலான சேவை நிறுவனங்கள் தங்கள் மொபைல் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் சலுகைகள் அளிக்கின்றன. அத்துடன் இன்று 10,000 ரூபாய்க்குள் உங்களால் 3 GB ரேம் உள்ள போன்களைக் கூட வாங்கமுடியும். எனவே அதிகமான ஆப்ஸ்களை டவுன்லோட் செய்து வைத்திருப்பதோ, அவற்றைப் பயன்படுத்துவதோ சிரமமான காரியம் கிடையாது. இந்த விஷயங்கள்தான் மொபைல் இன்டர்நெட்டின் வெற்றி. 

அதேபோல இலவச வைஃபை வசதிகள், டெலிகாம் நிறுவனங்களின் 4G சேவைகள் ஆகியவை நிறைய பேரை சென்றடைகிறது. இதனாலும் புதிதாக இணையத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மொபைல் இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வருவதால், நிறைய நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை மொபைலில் வெளியிடவே விரும்புகின்றன. காலம் ஒவ்வொரு முறையும் தன்னைப் புதுப்புது தொழில்நுட்பங்கள் கொண்டு அப்டேட் செய்துகொண்டேதான் இருக்கின்றது. நேற்று கணினி; இன்று மொபைல்; நாளை இதை விடவும் அசத்தலான தொழில்நுட்பங்கள் நம் கைகளில் தவழலாம்!

- ஞா.சுதாகர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்