மனப்பாடமாய் உரையாடல்கள் நிகழும் - இது தனுஷ் பாட்டு இல்ல... பாட்! #ChatBots

பாட்

என்னை நோக்கி பாயும் தோட்டா படத்துல வர்ற ”மறு வார்த்தை பேசாதே” பாட்டுல ஒரு லைன் வரும் ''மனப்பாடமாய் உரையாடல்கள் நிகழும்''. அது தான் மிகப்பெரிய நிறுவனங்களோட கம்யூனிகேஷன் டெக்னாலஜியா இருக்கு. கஸ்டமர்களோட  கேள்விகளை புரிஞ்சுக்கிட்டு மனப்பாடம் பண்ணி வைச்சிருக்குற வார்த்தைகளால உரையாடும் வேலையைத்தான் இந்த சாட் பாட்கள்(Chat bots) நிகழ்த்துகின்றன. இந்த சாட் பாட்கள் 1994ம் ஆண்டு முதல் அறிமுகத்தில் உள்ளன. சிறிய அளவில் இருந்த இந்த சாட் பாட்கள் இன்று மிகப்பெரிய அளவில் மாறி சில நிறுவனங்களின் மொத்த வாடிக்கையாளர் சந்தேகங்களையும் கையாளுகின்றன. 

இதில் பெரிய சவால் என்னவென்றால் மனப்பாடமாய் உள்ள பதில்களை சரியான கேள்விக்கு பொருத்துவது தான். இதற்கு இதனை தயார் செய்யும்போது குறிப்பிட்ட வார்த்தைகள் இருந்தால் இந்த பதில்தான் இருக்க வேண்டும் என ப்ரோக்ராம் எழுதப்பட்டிருக்கும். மேலும் இந்த கேள்விகளுக்கு அடுத்த பதில் இது தான் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். அடிப்படை கேள்விகளுக்கு 100 சதவிகித துல்லியம்  உத்திரவாதமாக அளிக்கப்படுகிறது. சிக்கலான கேள்விகளுக்கு டெம்ப்ளேட் பதில் தருவது தான் சற்று மேம்படுத்த வேண்டிய விஷயமாக உள்ளது.

இந்த பாட்கள் இப்போது தனி ஒருவரது ஃபேஸ்புக் கணக்கு துவங்கி மருத்துவம், வெள்ளை மாளிகை கேள்வி பதில், செய்தி நிறுவனங்கள் என எல்லாவற்றிலும் பரவி இருக்கிறது. சில சுவாரஸ்யமான சாட் பாட்கள் இதோ...

பாட்

கூகுள் பாட்:

 உங்கள் ட்விட்டர் கணக்கு மூலம் உங்கள் மொபைலில் இருந்து நீங்கள் விரும்பும் இமோஜியை பதிவிட்டு @google என கூகுள் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்தால் போதும். உங்கள் கணக்கை டேக் செய்து கூகுள் நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள தகவலை வழங்கிவிடும்.

உதாரணமாக நீங்கள் பர்கர் இமோஜியை டைப் செய்து அதோடு @google என கூகுள் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்ய வேண்டும். உங்கள் ஜிபிஎஸ் தகவலின் படி ''பர்கர் நியர் பை'' என கூகுள் தேடலின் லின்க்கை உங்கள் ட்விட்டர் கணக்கை டேக் செய்து கூகுள்  ட்விட் செய்யும். அப்பறம் என்ன அதன் வழியாகவே நீங்கள் ஆர்டர் செய்து சாப்பிடலாம். 

ஒயிட் ஹவுஸ் பாட்:

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு என இருந்த பேஸ்புக் பக்கத்தில் ஒபாமாவிடம் கேள்வி கேட்க ஒபாமா வெள்ளை மாளிகைக்கான பாட் தயார் செய்து வைத்திருந்தார். அதன் மூலம் ஒருவர் அமெரிக்க அதிபரிடம் கேட்க நினைக்கும் விஷயங்களை கேட்கலாம். அதிலிருந்து 10 கேள்விகளுக்கு தினமும் பதிலளித்து வந்தார் ஒபாமா. ட்ரம்ப் அதிபரான பிறகு இந்த பாட் ஆஃப் லைன் சென்று விட்டது. முழுவதுமாக மாற்றப்பட்ட  ஓயிட் ஹவுஸ் பக்கத்துக்கு இந்த சேவை தயராகி வருகிறதாம். 

அடா பாட்: 

உங்களுக்கு காய்ச்சல் என்றால் எத்தனை நாட்களாக இருக்கிறது, என்ன அறிகுறிகள் இருக்கு என்பதையெல்லாம் கேட்டு அதற்கேற்ப பரிந்துரைகளை வழங்கி மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற வேண்டிய விஷயமாக இருந்தால் அதற்கு பரிந்துரையளிக்கிறது அடா. இதில் உங்களது தகவல்களுக்கு ஏற்றவாறு கேள்விகளை கேட்கிறது. சிக்கலான கேள்விகளுக்கு மருத்துவரை பரிந்துரைக்கிறது.

இவை தவிர மருத்துவ சந்தேகங்கள், கிரிக்கெட் ஸ்கோர், செக்ஸ் சந்தேகங்கள் என பலவற்றுக்கும் பாட்கள் உருவாகி இருக்கின்றன. ஒரு காலத்தில் கஸ்டமர் கேருக்கு போன் செய்துவிட்டு எண் ஒன்றை அழுத்தவும் என்று கூறிக்கொண்டிருந்த தொழில்நுட்பம்தான் இன்று வளர்ந்து பாட்களாக உள்ளன. ஒருநாள் நிச்சயம் பாஸ் உடனான அப்ரைஸல் மீட்டிங்கும் பாட் மூலம் நடந்தாலும் நடக்கும். கொடுத்த டாஸ்க முடிக்கல உனக்கெல்லாம் இன்க்ரிமெண்டானு பாட் கேட்டாலும் கேக்கலாம்...

- ச.ஶ்ரீராம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!