செங்கல் சைஸ் முதல் செம ஸ்லிம் வரை... மொபைல்களின் பரிணாம வளர்ச்சி! #MobileMania #GadgetRewind

செங்கல் அளவில் அறிமுகமாகி இன்று கைக்குள் அடங்கும்படி ஸ்மார்ட்போன் அளவு மாறியிருக்கிறது. சில நிமிடங்கள் மட்டுமே கால் செய்ய முடியும் என்ற நிலையிலிருந்து, இன்று ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் அத்தனை வேலைகளையும் செய்யமுடியும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. மொபைலில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் நிகழ்ந்திருக்கின்றன என்பதைப் பற்றிய தொகுப்பு இது.
1980-களில் மொபைல் அறிமுகமானபோது குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே பேசக்கூடியதாக இருந்தது. 0G-யில் அனலாக் சிக்னல்கள் மூலம் ஒருவருடன் ஒருவர் ஒயர் இல்லாமல் பேசும் வசதியை மட்டுமே உருவாக்கிக் கொடுத்தது. இது படிப்படியாக வளர்ச்சியடைந்து விரைவில் 5G சேவை அறிமுகமாகவுள்ளது.


Motorola DynaTAC 8000X :

DynaTAC 8000X மொபைல்

எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய வகையில் வர்த்தக ரீதியில் வெளியான முதல் மொபைல் ஃபோன் இது தான். அதுவரை கார்களில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய பெரிய அளவிலான ரேடியோ டெலிபோன்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தன. 1973-ம் ஆண்டு மொபைல் ஃபோன் கண்டுபிடிக்கப்பட்டாலும், 1984-ம் ஆண்டில் இருந்துதான் வர்த்தகரீதியாக இந்த மொபைல் விற்பனைக்கு வந்தது. 10 மணி நேரம் சார்ஜ் செய்தால் 30 நிமிடம் மட்டுமே பயன்படுத்தக்கூடிய அளவுக்குதான் இதன் பேட்டரி ஆரம்பத்தில் இருந்தது.


MicroTAC 9800X :

MicroTAC 9800X மொபைல்

மோட்டோரோலா நிறுவனத்தின் தயாரிப்பான இது 1989-ம் ஆண்டு வெளியானது. 'உலகின் எடைகுறைந்த மற்றும் சிறிய மொபைல்' என இந்த மொபைல் அறிமுகமானபோது, 350 கிராம் எடையும், 9 இன்ச் உயரமும் கொண்டதாக இது இருந்தது.


The Motorola International 3200 :

The Motorola International 3200 மொபைல்

ஒரு கையால் மட்டும் பயன்படுத்தக்கூடிய அளவில் உலகின் முதல் டிஜிட்டல் ஃபோனான இது 1992-ம் ஆண்டு வெளியானது. அதுவரை அனலாக் முறையில் தான் மொபைல் ஃபோன் பயன்படுத்தப்பட்டது.

 

Nokia 1011 :

Nokia 1011 மொபைல்

GSM சிம் வசதி கொண்ட உலகின் முதல் மொபைல் ஃபோன் நோக்கியா 1011 மாடல் தான். 1992-ம் ஆண்டில் தான் இந்த மொபைல் அறிமுகமானது. தற்போது நாம் பயன்படுத்தும் GSM வகை மொபைல்களின் ஆரம்பப் புள்ளியாக இதுதான் அமைந்தது.

 

IBM Simon :

IBM Simon மொபைல்

ஸ்மார்ட்போனுக்கான ஆரம்ப விதையை இந்த மொபைல் தான் விதைத்தது. உலகின் முதல் தொடுதிரை வசதி கொண்ட இந்த மொபைல் 1994-ம் ஆண்டு வெளியானது. இதில் தான் முதன்முதலாக அப்ளிகேஷன்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டன. அமெரிக்காவில் மட்டுமே இது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

 

Motorola StarTAC :

Motorola StarTAC மொபைல்

உலகின் முதல் ஃப்ளிப் டைப் மொபைலான இது 1996-ம் ஆண்டு தான் அறிமுகமானது. அதுவரை நிலைத்த வடிவத்துடனே மொபைல் இருந்துவந்தது. மூடித்திறக்கும் இதன் வடிவமைப்புக்காகவே உலகம் முழுவதும் 60 மில்லியன்களுக்கும் மேல் விற்பனையாகி சாதனை படைத்தது.

 

Nokia Communicator :

Nokia Communicator மொபைல்

ஐ.பி.எம் Simon மாடலை அறிமுகப்படுத்தியபின், 1996-ம் ஆண்டு முதல் நோக்கியா 'கம்யூனிகேட்டர்' சீரிஸ் மொபைல்களை அறிமுகப்படுத்தியது. வெளியிலிருந்து பார்ப்பதற்கு சாதாரண மொபைல் போலத் தெரிந்தாலும், மொபைலைத் திறந்தால் உள்ளே எல்.சி.டி திரை மற்றும் சிறிய கீபோர்டு வசதியுடன் திகழ்ந்தது.

 

Ericsson R380 :

Ericsson R380 ஸ்மார்ட்போன்

Ericsson R380 மாடல் உலகின் முதல் 'ஸ்மார்ட்போன்' என்ற அடைமொழியுடன் 2000-ம் ஆண்டில் விற்பனைக்கு வந்தது. அளவில் சிறியதாகவும் அதே நேரத்தில் அதிக வசதிகளையும் கொண்டிருந்தது. நோக்கியா பின்நாளில் அதிகம் பயன்படுத்திய சிம்பியன் இயங்குதளம் முதன்முதலாக இந்த மொபைல் மாடலில் தான் அறிமுகமானது.

 

Nokia 3310 :

Nokia 3310 மொபைல்

நோக்கியா நிறுவனத்தின் விற்பனையில் நோக்கியா 3310 மாடலுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. 90-களில் அறிமுகமாகி மில்லியன் கணக்கில் விற்றுத்தீர்ந்தது. இந்த மாடலுக்கு இன்னும் ரசிகர்கள் இருக்கும் காரணத்தினாலேயே பல்வேறு மாறுதல்களுடன் மீண்டும் இந்த மாடலை ஸ்மார்ட்போனாக நோக்கியா களமிறக்குகிறது.

 

Nokia 1100 :

Nokia 1100 மொபைல்

உலகில் இதுவரை அதிகம் விற்ற மொபைல் போன் நோக்கியா 1100 மாடல் தான். விலை குறைவு என்பதால் வளரும் நாடுகளில் இதன் விற்பனை சக்கை போடு போட்டது. குறைந்த விலை காரணமாக மொபைல் உலகின் சூப்பர்ஸ்டாராக இந்த மாடல் திகழ்ந்தது. உண்மையில் இந்த மாடல் அறிமுகமான பின்தான் பல நாடுகளில் தொலை தொடர்பு துறை வளர்ச்சியடையத் தொடங்கியது.

 

Samsung SPH-M100 :

Samsung SPH-M100 மொபைல்

சாம்சங் நிறுவனத்தின் இந்த மொபைல் 2000-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. MP3 வசதியுடன் வெளியான உலகின் முதல் மொபைல் இது தான். ஆனால் இந்த மொபைல் அறிமுகமான போது தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மட்டுமே பாடல் கேட்கும் அளவுக்குதான் இதன் பேட்டரி அளவு இருந்தது.


Sanyo SCP-5300 :

Sanyo SCP-5300 மொபைல்

2000-களின் தொடக்கத்தில் கேமரா வசதி கொண்ட மொபைல்கள் அறிமுகமாகிவிட்டன. ஆனால் அதுவரை மொபைல் கேமரா மூலம் புகைப்படம் எடுத்தால், அதை கணினியுடன் இணைத்துதான் அந்தப் புகைப்படத்தைப் பார்க்க முடியும். இந்த Sanyo SCP-5300 மாடல் தான் மொபைலில் எடுத்த புகைப்படங்களைப் பார்க்கும்படி டிஜிட்டல் ஸ்க்ரீனை அறிமுகப்படுத்தியது.

 

iPhone :

iPhone 1 ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன் விற்பனையில் தற்போது முன்னணியில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் 2007-ம் ஆண்டு முதன்முதலாக ஐபோனை அறிமுகப்படுத்தியது. பயனாளர்கள் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் இதன் வடிவமைப்பு இருந்ததால் விற்பனையில் சாதிக்கத் தொடங்கியது. மேலும், இதற்கு முன்னர் தொடுதிரை வசதி கொண்ட மொபைல் அறிமுகமாகிவிட்டாலும், விரல்களைக் கொண்டே இயக்கும் தொடுதிரை இதில் தான் முதன்முதலில் அறிமுகமானது.

இதன் பின் கற்பனைக்கும் எட்டாத வகையில் ஸ்மார்ட்போன் வளர்ச்சியடைந்து வருகிறது. 5ஜி, வயர்லெஸ் சார்ஜிங் என புதுப்புது வசதிகள் தொடர்ந்து அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன.

- கருப்பு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!