வாட்ஸ்அப் பண்ணும்போது இந்த விஷயங்களை மறக்காதீங்க..! #WhatsappEtiquettes

வாட்ஸ்அப்

இன்றைய நாளின்... ஏன் இந்த நிமிடத்தின் பரபரப்பைத் தீர்மானிக்கும் அதிரடி ஊடகமாக உருவெடுத்திருக்கிறது வாட்ஸ்அப்! 

நெடுவாசல் போராட்டம் ஏன், மீனவர்கள் பிரச்னை என்ன ... என வாட்ஸ்அப்பில் பயன்தரக்கூடிய எத்தனையோ தகவல்களும் வரத்தான் செய்கின்றன. ஆனால், ஒட்டுமொத்த அளவுடன் ஒப்பிடும்போது அவை சொற்பம். ஆபாசமும் அசிங்கமுமே அதிகம் பகிரப்படுகின்றன. செல்போனில் அதிவேக இணையம் சாத்தியமான பிறகு, இதற்காக கம்ப்யூட்டரைத் தேடிச் செல்லவேண்டிய அவசியம்கூட இல்லாமல் போய்விட்டது. அலுவலகம், வீடு, டீக்கடை, பேருந்து, ரயில், கோயில், நடுத்தெரு... என எங்கிருந்தும் இந்த வீடியோ, புகைப்படங்களைப் பார்க்கவும் அனுப்பவும் முடியும். இதனால் சாலைகளில், செல்போன் திரையில் முகத்தைப் புதைத்துக்கொண்டே நடக்கிறார்கள். காதில் இருக்கும் இயர்போனில் என்ன ஆடியோ ஒலிக்கிறது என்பது நமக்குக் கேட்பது இல்லை. ஆனால், அவர்களின் முகங்களில் நவரசம் மிளிர்கின்றன.

வாட்ஸ்அப் க்ரூப்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறன. “ஒரு திருமணம் நிச்சயம் ஆனால் வாழைமரம் கட்டுவதற்கு முன் வாட்ஸ்அப் குரூப் ஆரம்பிக்கப்படுகிறது” என்ற வைரல் ட்வீட் சொல்லும் சேதி நூறு சதவிகிதம் உண்மை. அப்படி நாமும் பல க்ரூப்களை உருவாக்கியிருப்போம் உறுப்பினராய் இருப்போம்.வாட்ஸ்அப் க்ரூப்புக்கு என தனிப்பட்ட விதிகள் எதுவும் இல்லைதான். ஆனால், ஒரு சில அடிப்படை விஷயங்களை எல்லோரும் பின்பற்றி ஆக வேண்டியிருக்கிறது. அவற்றில் சில...

1) டிபி (Display picture) என்பது பார்ப்பதற்காகத்தான்.. அதை டவுன்லோடு செய்து உங்கள் இஷ்டப்படி பயன்படுத்துவது தவறு.

2) வாட்ஸ்அப் என்பதே பெர்சனல் விஷயங்களுக்காக என்று இருந்தது. இப்போது வாட்ஸப் அலுவலக மற்றும் அதிகாரபூர்வ விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அங்கே அதிக எமோஜிக்கள் பயன்படுத்துவது தவறான சிக்னலை கொடுக்கலாம். எனவே அனுப்புபவர் அல்லது க்ரூப்பின் தன்மை அறிந்து அதற்கேற்ப உங்கள் பதில்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

3) ஒருவர் ஆன்லைனில் இருப்பதாலே உங்களுடன் பேச நேரம் இருப்பதாக நினைக்க வேண்டாம். உங்கள் மெசெஜை பார்த்துவிட்டு பதில் அனுப்பாமல் இருக்கவும் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். எனவே, அடிக்கடி மெசெஜ் அனுப்பி தொல்லை செய்யாதிருங்கள்.

4)  உங்களுக்கு கிடைக்கும் எல்லா ஃபார்வர்டுகளையும் க்ரூப்பில் போட்டு நிரப்பாதீர்கள். உங்களின் ஃபார்வர்டுகளுக்கு யாருமே ரிப்ளை அனுப்பவில்லை என்றால், அது போன்ற ஃபார்வர்டுகளை தவிர்ப்பது நலம்.

5) ஃபார்வர்டுகளில் வரும் செய்திகள்/உதவிகள் அனைத்துமே உண்மையாக இருப்பதில்லை. அதன் நம்பகத்தன்மை, எப்போது வந்தது போன்ற தகவல்கள் தெரியாமல் அதை மற்றவர்களுக்கு அனுப்பாதீர். வதந்திகளின் இன்றைய பிறப்பிடம் வாட்ஸ்அப் தான்

6) எதாவது ஒரு க்ரூப்பில் ஒருவரை சேர்க்கும் முன், அவரிடம் தனி மெசேஜில் கேட்டுவிட்டு சேர்க்கவும்,. க்ரூப்பில் இருக்கும் யாரோ ஒருவருக்கு அவரைப் பிடிக்காமல் இருக்கலாம். அதுவே எல்லோரையும் சங்கடத்தில் ஆழ்த்தக்கூடும்.

7) பிரபலங்களில் எண் உங்களிடம்  இருப்பதாலே அவரை க்ரூப்பில் சேர்த்துவிடாதீர். மொபைல் எண் என்பது பலருக்கும் பிரைவசி சார்ந்த விஷயம்.

8) எல்லோருமே wifi மூலம் இணையத்தை மேய்வதில்லை. ஜியோ வந்த பிறகும் பலரும் மாதம் பல நூறு ரூபாய்கள் கட்டி நெட்பேக் போடுகிறார்கள். எனவே தேவையற்ற வீடியோக்களை க்ரூப்புக்கு அனுப்பாதீர்கள். 

இன்னும் ஏகப்பட்ட விஷயங்களை நாம் எச்சரிக்கையோடு பின்பற்ற வேண்டியிருக்கிறது. உங்களுக்குத் தோன்றும் விஷயங்களை கமெண்ட்டில் சொல்லுங்கள்.

- கே

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!