வெளியிடப்பட்ட நேரம்: 21:05 (14/03/2017)

கடைசி தொடர்பு:21:04 (14/03/2017)

இந்த மெஷின் இருந்தா இனிமே கிஃப்டே வாங்க வேணாம் பாஸ்!

மெஷின்

காலண்டர்ல இருக்குற 365 நாளுக்கும் ஏதோ ஒரு நாள்னு பேர் வைச்சுடுற அளவுக்கு ஸ்பெஷல்  நாட்களோட எண்ணிக்கை அதிகமாகிட்டே இருக்கு. பானிபூரிக்கெல்லாம் டே இருக்குனு ஃபேஸ்புக்ல  ஃபார்வர்டுகள் வருது. இதுல பிறந்த நாள், கல்யாண நாள், லவ் புரபோஸ் பண்ண நாள்ல்லாம் வேற. இந்த எல்லா நாளுக்கும் கிஃப்ட் வாங்கி கொடுக்க சொல்லி கேட்கும் உங்கள் அன்பானவர்களுக்கு இனி கிஃப்ட்டுக்காக காசு செலவழிக்கவே வேணாம். ஒரு மெஷின் வாங்குனா போதும்னு சொன்னா எவ்வளவு ஜாலியா இருக்கும். அப்படி ஒரு மெஷின் தான் எக்ஸ் பிளாட்டர். 

எக்ஸ் ப்ளாட்டர்ங்கறது ஒரு த்ரீ-இன்-ஒன் மிஷின். இந்த மிஷின் மூலமா படம் வரைய முடியும், எழுத முடியும், லேசர் மூலம் பொருட்களை வெட்டவும் முடியும். இதில் உள்ள ரோபாட்டிக் கைகள் மூலமாக ப்ரோக்ராம் செய்யப்பட்ட விதத்தில் இயங்கி எழுத்துக்களை நிர்ணயிக்கப்பட்ட வடிவத்தில் எழுதும். அதனை பேப்பர், மேட் என எதில் வேண்டுமேனாலும் எழுதும் வடிவில் இதன் ரோபாட்டிங் ஆர்ம்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாழ்த்து அட்டைகளை இனி யாரோ பிரிண்ட் செய்த வடிவத்தில் பெற வேண்டாம். உங்களுக்கு பிடித்த வார்த்தைகளை பிடித்த வடிவத்தில் நீங்களே பிரிண்ட் செய்யலாம். 

எக்ஸ் ப்ளாட்டர்

அடுத்ததாக இந்த கருவியால் படம் வரைய முடியும், எழுத்துக்களை போலவே படத்தின் தன்மைகேற்ப அதனை இந்த கருவியால் வரைய முடிகிறது. இதில் நாம் எந்த மாதிரியான படத்தைக் கொடுத்தாலும் அதனை அப்படியே வரைந்து கொடுக்குமாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் துல்லியத்தன்மை என்பது கிட்டத்தட்ட கைகளால் வரைந்த படத்துக்கு இணையாக உள்ளது . மேலும் கைகளால் வரையும் போது உள்ள சிறிய மாற்றங்கள் கூட இதில் இருப்பதில்லை என்கிறது இந்நிறுவனம்.

மூன்றாவதாக என்க்ராவ் அதாவது தளங்களின் மீது வடிவங்களை ஏற்படுத்துதல், செதுக்குதல் போன்ற விஷயங்களை இதில் உள்ள லேசர் கன் செய்கிறது. இதன் மூலம் செல்போன் கேஸ்கவர்கள் மீது படங்களை பொதிப்பது. 3டி இமேஜிங் தொழில்நுட்பத்தில் பிரின்டிங் செய்வது. அதன் மூலம் அழகான பொருட்களை உருவாக்குவது என ஒரு கிஃப்ட் ஷாப்பாகவே மாறுகிறது இந்த மெஷின். மிகவும் கஸ்டமைஸ்டாக இருக்கும் இந்த மிஷின் மூன்று வேலைகளையும் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை 599 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 39000 ரூபாய். மேலும் இதன் மூலம் வர்த்தக ரீதியான படங்களை வரைவதும், மரம், அலுமினியம், போன்றவற்றிலும் லேசர் கன் மூலம் பதிவுகளை ஏற்படுத்தவும் முடியுமாம். இது தனித்தனியாக மூன்று கருவிகளை வாங்குவதற்கு பதிலாக இருக்கும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பத்தில் ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மெஷினுக்கு பதில் தனித்தனியாக மூன்று மிஷின்களை வாங்கினால் 2.5 மடங்கு அதிக செலவாகுமாம். சிறு தொழில் புரிபவர்களுக்கு இந்த மெஷின் அதிக அளவில் பயன்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அப்பறம் என்ன பாஸ், இனிமே 365 நாள் முழுக்க உங்களுக்கு புடிச்சவங்களுக்கு எதாவது ஒரு கிஃப்ட் கொடுத்துட்டே இருங்க...இல்லையா ஒரு மிஷின வாங்கி போட்டு, அதன் மூலம் வருஷம் முழுக்க வருமானம் பாருங்க.

 

 

-ச.ஸ்ரீராம்


டிரெண்டிங் @ விகடன்