வாட்ஸ் அப்பில் பாகுபலி... திருட்டு டி.வி.டியை விட ஆபத்தான “லீக்” கலாசாரம்..!

பாகுபலி

ஒரு படம் வெளியானால் திருட்டு சிடி வருவதையே தடுக்க முடியாமல் திணறி வருகிறது சினிமா உலகம். டோரண்ட் தளங்களை தயாரிப்பாளர்கள் நேரிடையாக மிரட்டியும், எச்சரித்தும் வருகிறார்கள். அவர்களும் பதிலுக்கு சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகிறார்கள். திரையுலகுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் இந்த பைரஸி, யாரோ ஒருவரின் லாபத்துக்காக நடத்தப்படுகிறது. ஆனால், திரையுலகில் இருக்கும், குறிப்பிட்ட படங்களில் வேலை செய்பவர்களே செய்யும் வேலை இன்னும் மோசமானதாக இருக்கிறது.

இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று பாகுபலி -2. அதன் டீசர்களும், புகைப்படங்களுமே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் அதன் டிரெயிலருக்காக காத்திருக்க, இன்று காலை அதன் ஹெச்.டி டிரெயிலர் வீடியோ வாட்ஸ் அப் மூலம் பரவ ஆரம்பித்துவிட்டது. எப்படியும், கோடிகளில் ஹிட்ஸ் அடிக்கக்கூடிய படம்தான் பாகுபலி. வாட்ஸ் அப்பில் பரவுவதால் பல லட்ச பார்வைகளை அது தவறவிடும். அதன் மூலம் மட்டுமே பல லட்ச ரூபாய் பாகுபலி குழுவுக்கு வருவாய் இழப்பு நிச்சயம். இந்த டிரெயிலரை பாகுபலி படக்குழுவில் இல்லாத ஒருவர் லீக் செய்திருக்கும் வாய்ப்பு மிகக்குறைவு. அல்லது அவர் மூலம் யாருக்கோ அது கிடைத்து, அவர் லீக் செய்திருக்க வேண்டும்.

ஒரு சினிமாவில் பல நூறு பேர் வேலை செய்தே ஆக வேண்டும். அவர்கள் கதையைகூட வெளியே சொல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆனால், இப்படி கோடிக்கணக்கான பணம் வியாபரமாகும் ஒரு விஷயத்தை, யாருக்கும் எந்தப் புண்ணியமும் இல்லாமல் வெளியிடுவதில் என்ன கிடைக்கப்போகிறது எனத் தெரியவில்லை. இத்தனைக்கும் வாட்ஸ்அப் மூலம் பரவும்போது வெளியிட்டவருக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை.

பாகுபலி முதல் பலி கிடையாது. இதற்கு முன் ரஜினி முதல் விஜய் படங்கள் வரை பாடல்களோ, ஒரு காட்சியோ அல்லது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரோ.. என எதாவது ஒன்று லீக் ஆகிக் கொண்டேயிருக்கிறது. திரையுலகை சாராதவர்கள் வெளியிடும் பைரஸியை விட இது மிகவும் ஆபத்தானது.

பாகுபலி

அனிருத் தான் இணையத்தில் லீக் ஆகும் விஷயத்துக்கு ஆரம்பம். அவரது முதல் பாடலான கொலைவெறியை யாரோ இணையத்தில் வெளியிட, வேறு வழியில்லாமல் ஆடியோ லான்ச்சுக்கு முன்பே யூட்யூபில் வெளியிட்டார்கள். அதுவே, அவருக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்று தந்தது தனிக்கதை. ஒரு பேட்டியில் கூட அனிருத் “அந்தப் பாட்டை நெட்ல ரிலீஸ் பண்ண ஆள் யாருன்னு தெரிஞ்சா, என் சொத்துல பாதில் தந்துடுவேன்” என்றார். இணையத்தில் அது லீக் ஆகவில்லையெனில், யூட்யூபில் பாடல் ரிலீஸ் செய்திருக்க மாட்டோம் என்பது அவரது கருத்து.

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடித்த அத்தரிண்ட்டிக்கி தாரேதி என்ற படத்தின் முதல் பாதி முழுவதுமே நெட்டில் வெளியானது. படமே வெளியாகாத நிலையில் இது மிகப்பெரிய பின்னடவை ஏற்படுத்தியது. ஆனால், அத்தனை தடைகளையும் தாண்டி அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது தனி சக்ஸஸ் கதை. 

இது போல லீக் ஆகும் படங்களுக்கு அதுவே ஒரு பெரிய விளம்பரமாக அமைந்தது என்பதும் உண்மை. அதனால், சில படக்குழுக்கள் அவர்களாகவே இணையத்தில் லீக் செய்வதாகவும் கோடம்பாக்கம் சொல்கிறது. ஆனால், பல சமயம் அது அவர்களுக்கு பின்னடவையே தந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

இதை டெக்னாலஜி மூலம் மட்டுமே தடுக்க முடியும். படக்குழுவினர் கூகுள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களுடம் கைகோத்து இவற்றை சமாளிக்கலாம். அல்லது ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்டுக்கு தனித்தனி code number தந்து அதன் மூலம் எங்கிருந்து வெளியாகிறது என்பதை கண்காணிக்கலாம். ஃபாரின் சாங்குக்கு பல லட்சம் செலவு செய்யும் சினிமாக்காரர்கள், இதற்கும் கொஞ்சம் செலவழித்தே ஆக வேண்டும். டிஜிட்டல் உலகில் இது தவிர்க்க முடியாதது.

-கார்க்கிபவா

இணையத்தில் வெளியானதால் பாகுபலி டிரெயிலரை அதிகாரப்பூர்வமாக இப்போது வெளியிட்டு விட்டார்கள்

 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!