'புலம்பெயர்ந்தவர்கள் இல்லையென்றால், ஐபோனே வந்திருக்காது!' ட்ரம்ப்பை சாடும் டிம் குக் | Apple CEO Tim Cook slams trump again

வெளியிடப்பட்ட நேரம்: 14:04 (18/03/2017)

கடைசி தொடர்பு:14:53 (18/03/2017)

'புலம்பெயர்ந்தவர்கள் இல்லையென்றால், ஐபோனே வந்திருக்காது!' ட்ரம்ப்பை சாடும் டிம் குக்

ட்ரம்ப் டிம் குக்

ட்ரம்ப் அகதிகள்/புலம்பெயர்ந்தவர்கள் அமெரிக்காவில் இருக்கக்கூடாது. சுமார் 10 மில்லியன் பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். அவர்களைச் சொந்த நாட்டுக்குத் திரும்ப அனுப்ப வேண்டும். இதற்காக 10 ஆயிரம் அதிகாரிகளை நியமிக்கவுள்ளதாகவும் உத்தரவிட்டுள்ளார். இதனால் வெளிநாட்டவரை அதிகம் நம்பி இருக்கும் சிலிக்கான் வேலி கலக்கத்தில் உள்ளது. 

ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றதும் டெக் சிஇஓக்கள் அதிர்ச்சியில் ஸ்டேட்டஸ் தட்டியது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஃபேஸ்புக் சிஇஓ மார்க் சக்கர்பெர்க் தனது அதிருப்தியை ஸ்டேட்டஸ் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். அடுத்ததாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். சிலிக்கான் வேலியில் உள்ள பல முன்னணி நிறுவனங்களில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் பிற நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் தான். அவர்களைத் தவிர்த்து சிலிக்கான் வேலி இயங்குவது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று டெக் நிறுவனங்கள் அபாயக்குரல் கொடுத்தன.

இந்நிலையில் க்ளாஸ்கோவில் உள்ள ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாடிய ஆப்பிள் சிஇஓ டிம் குக், ட்ரம்ப் மீதான தனது எதிர்ப்பை மீண்டும் பதிவு செய்தார். மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ட்ரம்ப்பின் இந்தத் தடை குறித்து உங்கள் கருத்து என்ன என்றதும், ஆரம்பத்தில் இருந்தே இந்த தடைக்கு நாங்கள் ஆதரவளிக்கவில்லை. காரணம் நிறைய திறமையான பணியாளர்கள் ஆப்பிள் நிறுவனத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்து பணிபுரிகிறார்கள். அவர்கள் இந்தத் தடையால் நிறைய சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். தற்போது புதிய திறமைசாலிகள் அமெரிக்காவில் நுழையவே அச்சப்படுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்றார்.

ட்ரம்ப்

மேலும் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் தந்தை சிரியாவில் இருந்து புலம்பெயர்ந்தவர். அவரை சட்டவிரோதமாக குடியேறியவர் என்று கூறியிருந்தால் ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் வந்திருக்காது. திறமைசாலிகளை மதிக்க வேண்டும் என்ற கருத்தைத்தான் அனைத்து டெக் நிறுவனங்களும் வரவேற்கிறோம். இந்த சட்டத்தை அரசு மறுபரீசீலனை செய்ய வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயத்தையும் பகிர்ந்து கொண்டார் டிம் குக்.  நாம் அனைவரும் நல்ல வேலைக்கு செல்லவே விரும்புகிறோம். வெறும் பணத்துக்காக நாம் வேலை செய்கிறோம் என்றால், நமது வேலையில் மகிழ்ச்சி இருக்காது என்று கூறினார். வேலையை நமக்கு பிடித்தவாறு பார்க்க வேண்டும். அது தான் மகிழ்ச்சி தரும், பணத்துக்காக என்றுமே வேலை செய்யக்கூடாது என்றார்.

இதற்கு முன்பு கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சையும் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தார். அவரது அறிவிப்பில் ''கூகுள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இந்த புதிய அறிவிப்பில் உள்ள சிக்கல்களை கலைய முயற்சி செய்து வருகிறோம். ஆனால் இந்த புதிய சட்டம் தொடர்ந்தால் அமெரிக்கா நிறைய‌ திறமைசாலிகளை இழக்க நேரிடும் என்று கூகுளின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கூகுளின் ஒரு அதிகாரி இந்த அறிவிப்பின் காரணமாக நியூஸிலாந்து பயணத்தை ரத்து செய்துவிட்டு அமெரிக்கா திரும்புகிறார் என்றும் கூகுள் கூறியுள்ளது. 

இந்த ஏழு நாடுகளில் உள்ள க்ரீன் கார்டு வைத்திருப்போர் உடனடியாக நாடு திரும்புங்கள். H-1B விசா வைத்திருப்பவர்களால் திரும்ப முடியாது. இது ஒரு இக்கட்டான சூழல் இதனை சமாளித்தாக வேண்டிய சூழலில் கூகுள் உள்ளது என்று கூறியிருந்தார்.

இந்த அறிவிப்புகளால் டெக் நிறுவனங்களின் பார்வை அடுத்த ஹப்பாக விளங்கும் இந்தியா பக்கம் திரும்பி வருகிறது.

- ச.ஶ்ரீராம்


டிரெண்டிங் @ விகடன்