டிரைவரே இல்லாமல் பறக்கும் ஆம்புலன்ஸ்..! 'வாவ்’ ட்ரோன் டெக்னாலஜி

ட்ரோன்

பெருநகரங்களில் வாழ்பவர்கள் அன்றாடம் பார்த்து வருத்தப்படும் ஒரு விஷயம் ஆம்புலன்ஸ். வாகன் நெரிசலில் சிக்கிக்கொள்ளும் ஆம்புலன்ஸூக்கு வழிவிடவே பெரும்பாலானோர்  விரும்புகிறார்கள். ஆனால், அந்த நெரிசல் அத்தனை சீக்கிரம் வழியை ஏற்படுத்தி தருவதில்லை. செய்வதறியாமல் திகைக்கிறார்கள். சில வினாடிகள் அவருக்காக பிரார்த்தனை செய்துவிட்டு அலுவலகத்துக்கு விரைவதை தவிர வேறுவழியில்லை.

ஆனால், தொழில்நுட்பம் அப்படி இருக்காது. இது போன்ற பல சிக்கல்களை தீர்க்கவல்லது. பறந்து பறந்து படம் பிடிக்க அதிகம் பயன்பட்டு வந்த ட்ரோன் டெக்னாலஜியை, இந்தப் பிரச்னைக்கு தீர்வாக யோசித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.அதற்காக ட்ரோன் ஆம்புலன்ஸை கண்டுபிடித்திருக்கிறார்கள். விளைவு, பல உயிர்கள் இதனால் காப்பாற்றப்பட இருக்கின்றன.

நோயாளியையும், உடன் ஒரு மருத்துவ உதவியாளரையும் சுமந்துக்கொண்டு பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த ட்ரோன் ஆம்புலன்ஸ். இதன் உள்ளே லைவ் கேமரா வசதியும், ஆடியோ கனெக்‌ஷனும் இருப்பதால், மருத்துவமனைக்கு வந்து சேர்வதற்குள் மருத்துவர் நிலைமையை ஆராய்ந்து, தகுந்த கட்டளைகளை மருத்துவ உதவியாளருக்கு கொடுக்கலாம். 

ட்ரோன் ஆம்புலன்ஸ் இன்னும் புரோட்டோ ஸ்டேஜில் தான் இருக்கிறது. விரைவில் பொது பயன்பாட்டுக்கு வரலாம். ஆனால், அதற்கு முன் ட்ரோனை இன்னும் ஒரு நல்ல விஷயத்துக்கு பயன்படுத்துகிறார்கள் இங்கிலாந்து மருத்துவர்கள்.

இந்த ட்ரோன் ’குட்டி’ ஆம்புலன்ஸ் நோயாளியை சுமந்து செல்லாது. மாறாக தேவையான முதலுதவி மருந்துகளை விரைவாக தேவையான இடத்துக்கு கொண்டு செல்லும்.

இதயம் செயலிழந்த பிறகு 4-6 நிமிடங்கள் கழித்தே மூளை செயலிழக்கும். அதற்குள் அவர்கள் இதயத்தை மீண்டும் துடிக்க செய்துவிட்டால் உயிர் பிழைத்துவிடுவார்கள். சிவாஜி படத்தில் ரஜினி, ரகுவரனை இப்படித்தான் காப்பாற்றுவார். அதற்கு உதவும் கருவிதான் defibrillators. ஆனால், மாரடைப்பு நேர்ந்த 6 நிமிடத்துக்குள்  அவர்கள் மருத்துவமனைக்கு வருவது சாத்தியமில்லை. அதற்கு இந்த ட்ரோன் பயன்படுகிறது. 

இந்த ட்ரோன்,  மணிக்கு 100கி.மீ வேகத்தில் பறக்கும். அதாவது 12 சதுர கிலோமீட்டருக்குள் இருக்கும் இடத்துக்கு ஒரே நிமிடத்தில் சென்று சேர்ந்துவிடும். ஆபத்து நேரத்தில் சிட்டாய் பறக்கும் கோடம்பாக்கம் ஹீரோக்களுக்கு கூட இதைவிட சற்று அதிக நேரம் ஆகும் என்பது தான் ஹைலைட். இந்த டிரோனுக்கு டிரைவரும் தேவையில்லை என்பது அடுத்த ஸ்பெஷல் விஷயம். ஜி.பி.எஸ் வைத்து லொகேஷனை அடையாளம் கண்டு, தானாக பறந்து செல்லும் ட்ரோன் ஆம்புலன்ஸ். 

இப்போதே இந்த ட்ரோன் சந்தையில் கிடைக்கிறது. விலை சற்று அதிகம் தான். 24000 அமெரிக்க டாலர்கள். ஆனால், நிறைய நாடுகளில் இது பயன்பாட்டுக்கு வந்ததும், விலை கணிசமாக குறையும். விலைமதிப்பற்ற பல மனித உயிர்கள் இதனால் காப்பாற்றப்படும்.

ட்ரோன் நிச்சயம் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு. அதை மனிதர்களுக்கு எப்படியெல்லாம் பயன் உள்ள வகையில் மாற்ற முடியுமோ, அதை செய்ய வேண்டும். உங்களுக்கு அப்படி ஏதாவது ஐடியா தோன்றினால், கமெண்ட்டில் சொல்லுங்களேன்.

-கார்க்கிபவா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!