பூமியிலிருந்து நிலாவுக்கு லிஃப்ட்... சென்னை மாணவனின் ஐடியாவைப் பாராட்டிய நாசா!

பூமி நிலா

ஷாப்பிங் மால்களிலும், பெரிய அடுக்குமாடி கட்டடங்களிலும் ஒரு தளத்தில் இருந்து இன்னொரு தளத்துக்குச் செல்ல லிஃப்ட் பயன்படுத்தியிருப்போம். ஆனால் இந்த மாணவன் கொஞ்சம் வித்தியாசமாக பூமியில் இருந்து நிலவுக்கு லிஃப்ட் வைக்க ஐடியா கொடுத்துள்ளார். "இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு பாஸ்" என நீங்கள் கேட்கலாம். ஆனா இது ஒரு நல்ல ஐடியான்னு நாசா பாராட்டி இரண்டாம் பரிசு கொடுத்திருக்கு,

நாசா ஏம்ஸ் ஆராய்ச்சி நிலையம், சான் ஜோன்ஸ் ஸ்டேட் பல்கலைக்கழகம் மற்றும் நேஷனல் ஸ்பேஸ் சொசைட்டியோடு இணைந்து 12-ம் வகுப்புக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியை நடத்தியது. இதன் தலைப்பாக மனிதர்கள் நிலாவில் வாழத்தகுதியான சாத்தியக்கூறுகளை அமைப்பது என அறிவித்திருந்தது. 

இதில் உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள மாணவர்கள் தங்களது ஐடியாக்களை அனுப்பி வைத்து போட்டியில் கலந்து கொண்டனர். இதில் சிங்கப்பூரில் வாழும் சென்னையை பூர்வீகமாக கொண்ட சாய் கிரண் என்ற மாணவன் கொடுத்த ஐடியாவைக் கண்டு வியந்துள்ளது நாசா. 

நாசா சாய் கிரண்

சாய் கிரண் 2013-ம் ஆண்டில் இருந்து தனது ஐடியாவைக் கூறி வருகிறார். அவரது ஆராய்ச்சிக்கு ‘Connecting Moon, Earth and Space’ and ‘HUMEIU Space Habitats’ என்று பெயரிட்டுள்ளார். இதன் முக்கிய அம்சமே பூமியையும், நிலவையும் லிஃப்ட் போன்ற அமைப்பின் மூலம் இணைப்பது தான். இதன் முதல்கட்டமாக நிலவுக்கும், பூமிக்கும் இடையே மனித போக்குவரத்துக்குப் பாதை அமைக்க வேண்டும். அப்போதுதான் அங்கு மனிதர்கள் வாழத் தேவையான விஷயங்களை ஏற்படுத்த முடியும் என்கிறார்.

இதில் முக்கியமான விஷயம் ஈர்ப்பு விசை, இது இல்லாமல் மனிதர்கள் அங்கு இருப்பது சாத்தியமற்றது. அதற்கான விஷயங்களோடு இந்த எலிவேட்டரை தயாரிக்க வேண்டும். வெறும் நிலவுக்குச் செல்வது மட்டும் இந்த திட்டத்தின் நோக்கமல்ல, அங்கு மறு உருவாக்கம், பொழுதுபோக்கு, ஆட்சியமைப்பு, விவசாயம் ஆகியவற்றையும் ஏற்படுத்த வேண்டும். ராக்கெட் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அணுப்புவது அதிக செலவு எடுக்கும் விஷயம். இன்னமும் இந்த லிஃப்ட் போன்ற அமைப்பு பொருளாதார ரீதியாக தற்போதைக்கு சாத்தியமற்றது என்றாலும், பிற்காலத்தில் இது சாத்தியமாகலாம். மொத்தமாக 3.8 லட்சம் கிலோ மிட்டர் தொலைவு கொண்ட இந்த திட்டத்தை பூமியிலிருந்து நிலவுக்கு அல்லது நிலவிலிருந்து பூமிக்கு என்ற அடிப்படையில் செய்யலாம் என்ற திட்ட வடிவத்தை சமர்பித்தார் சாய் கிரண்.

மேலும் உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் வந்த திட்டங்களில் சாய் கிரண் சமர்பித்த திட்டத்தில் மனித வாழ்வாதாரங்கள், தொழில்நுட்ப ரீதியான மேம்பாடுகள் மட்டுமின்றி மனித வாழ்வியல் சார்ந்த விஷயங்களுக்கும் இடம் அளித்திருந்தார். இதுதான் மற்ற திட்டங்களில் இருந்து அவரது திட்டத்தை தனித்துக் காட்டியுள்ளது. சென்ற மார்ச் மாதத்திலிருந்து சென்னையில் குடியேறி இந்த ஆராய்ச்சியைத் தொடர்கிறார் சாய் கிரண். ஏற்கெனவே இந்திய விண்வெளித்துறையை கண்டு வியக்கும் நாசா. தற்போது தமிழனின் திட்டத்தைக் கண்டு வியந்துள்ளது. 

இந்த திட்டத்தைக் கண்டு வியந்த நாசா இவருக்கு இரண்டாவது பரிசளித்து கெளரவித்துள்ளது. ஒருவேளை இந்த திட்டம் நடைமுறை படுத்தப்பட்டால் உண்மையாலுமே ஹனிமூனுக்கு மூனுக்கே செல்லலாம். நிலவிலிருந்து விளைவிக்கப்பட்ட பழங்கள் என்று கூட விற்பனை செய்யப்படலாம்... இவையெல்லாம் நடக்கும்போது இதற்கு அடித்தளமிட்டது ஒரு தமிழன் என்று உலகம் வியந்து பேசும்...

வாழ்த்துகள் தமிழா...

- ச.ஶ்ரீராம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!