விண்டோஸ் சரத்பாபு... ஆண்ட்ராய்டு ரஜினி... நம்பர் 1 ரேங்க் மாறிய கதை! | Android overtakes Windows for first time in terms of Internet usage

வெளியிடப்பட்ட நேரம்: 09:19 (05/04/2017)

கடைசி தொடர்பு:09:31 (05/04/2017)

விண்டோஸ் சரத்பாபு... ஆண்ட்ராய்டு ரஜினி... நம்பர் 1 ரேங்க் மாறிய கதை!

ஆண்ட்ராய்டு

ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட்களின் இயங்குதளங்களின் பட்டியலில் கூகுள் நிறுவனத்துக்குச் சொந்தமான ஆண்ட்ராய்டு தான் நம்பர்-1 இடத்தில் உள்ளது. கணினியைப் பொறுத்தவரை, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் தான் முடிசூடா மன்னனாக இருந்து வருகிறது. டிஜிட்டல் புரட்சி காரணமாக ஸ்மார்ட்போன் பயன்பாடும், இணையப் பயன்பாடும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மொபைலில் இருந்தே இணையதளங்களை ப்ரெளஸ் செய்வோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் இணையதளத்தைப் பயன்படுத்துவோரின் அடிப்படையில் விண்டோஸை பின்னுக்குத் தள்ளி ஆண்ட்ராய்டு முதலிடம் பிடித்துள்ளது.

உலகில் அதிகமான பேர் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இருந்து தான் இணையதளத்தைப் பயன்படுத்துகிறார்கள் என ஸ்டேட்கவுன்டர் (statcounter) இணையதளம் அறிவித்திருக்கிறது. இதன் மூலம், முதன் முதலாக விண்டோஸை முந்தி ஆண்ட்ராய்டு முதலிடம் பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் சுமார் 25 லட்சம் முன்னணி வெப்சைட்களில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், ஸ்டேட்கவுன்டர் இந்த முடிவை வெளியிட்டுள்ளது.

android

Source: StatCounter Global Stats - OS Market Share

டெஸ்க்டாப், லேப்டாப், டேப்லட் மற்றும் மொபைல் ஆகிய அனைத்து டிவைஸ்களில் இருந்தும் இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட டிவைஸ்களில் இருந்து 37.93 சதவீதம் பேரும், விண்டோஸ் இயங்குதளம் கொண்ட டிவைஸ்களில் இருந்து 37.91 சதவீதம் பேரும் இணையத்தைப் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. வெறும் 0.02 சதவீத வித்தியாசத்தில் விண்டோஸை பின்னுக்குத் தள்ளி முதன்முறையாக ஆண்ட்ராய்டு முதலிடம் பிடித்திருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை பெருமளவில் ஆண்ட்ராய்டு டிவைஸ்கள் மூலமாக தான் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். மார்ச் மாதத்தில் மட்டும் 61.78 சதவீதம் பேர் ஆண்ட்ராய்டு டிவைஸ்கள் மூலமாகவும், 18.74 சதவீதம் பேர் விண்டோஸ் டிவைஸ்கள் மூலமாகவும் இணையதளத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

ஆண்ட்ராய்டு Vs. விண்டோஸ்

எதிர்காலத்தில் ஆண்ட்ராய்டு மூலமாக இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. 4ஜி, 5ஜி என நெட்வொர்க் சேவை ஒருபக்கம் அதிகரிப்பதும், ஸ்மார்ட்போன் ஆதிக்கமும் இதற்கு மிக முக்கியமான காரணங்களாக இருக்கும். கணினி மூலமாக இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதும், ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி அதற்கு நேரெதிராக அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியா, சீனா போன்ற நாடுகளிலும், ஆப்பிரிக்க கண்டத்தின் பெரும்பாலான நாடுகளிலும் ஆண்ட்ராய்டு முன்னிலை வகிக்கிறது. இந்த நாடுகளில் ஸ்மார்ட்போன் மூலமாகவே அதிகப் பேர் இணையதளத்தைப் பயன்படுத்துவதே ஆண்ட்ராய்டு முன்னிலை வகிக்க முக்கியமான காரணம்.

ப்ரெளசர்களைப் பொறுத்தவரை கூகுள் நிறுவனத்தின் குரோம் பயன்படுத்துபவர்களே அதிகம் எனத் தெரிய வந்துள்ளது. ஆனால் இந்தியாவில் குரோமை இரண்டாம் இடத்துக்குத் தள்ளி யூசி ப்ரெளசர் (UC Browser) முதலிடம் பிடித்துள்ளது.

கணினியை விட மொபைல் வாங்குவது மிகவும் சிக்கனமானது என்பதால் வளரும் நாடுகளில் ஸ்மார்ட்போன் வாங்கவே மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைந்த விலையில் வேகமான இன்டர்நெட் வசதி கிடைப்பதால், மொபைலில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, வரும் காலங்களில் மிக அதிக அளவிலான பேர் ஸ்மார்ட்போன் வழியாகவே தங்கள் இணைய தேவையை பூர்த்தி செய்துகொள்வர்.

- கருப்பு

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்