வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (05/04/2017)

கடைசி தொடர்பு:13:40 (05/04/2017)

புதிய வசதிகளுடன் இந்தியாவில் அறிமுகமாகும் ’YouTube Go’

யூடியூப், புதிய வடிவில் 'YouTube Go' என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகமாகிறது. முக்கியமான வீடியோ தளமாக விளங்கும் யூடியூப்,  வீடியோக்களின் முன்னோட்டம், டேட்டா இல்லாமல் வீடியோ பகிர்தல் உள்ளிட்ட பல புதிய அம்சங்களுடன் வருகிறது, 'யூடியூப் கோ ஆப்!'

வீடியோக்களைக் காண பயன்படுத்தப்பட்டுவந்த யூடியூப், புதிய பரிமாற்றத்தில் அறிமுகமாகிறது. இதுகுறித்து, யூடியூப்  நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்ட தகவலில், 'அடுத்த தலைமுறைக்கான வீடியோ தளமாக யூடியூப் செயலியை வடிவமைக்கும் பணி நடைபெற்றது. உலகின் மிகச் சிறந்த வீடியோ தளமாக விளங்கும் யூடியூப்பில் பல புதிய வசதிகள் சேர்க்கப்பட்டால்தான் நிலைத்து நிற்கும். இதையடுத்து, யூடியூப் கோ என்ற ஆப் இந்தியாவில் அறிமுகமாகிறது.

இதன்மூலம், வீடியோக்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முன்னோட்டக் காட்சிகளைப் பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது, யூடியூப். மேலும், முகப்புப் பக்கத்தில் பயன்படுத்துவோருக்கு ஏற்ப வீடியோக்கள் பரிந்துரை, டேட்டா கட்டணம் இல்லாமல் வீடியோ ஷேரிங் உள்ளிட்ட புதிய வசதிகள் யூடியூப் கோ செயலியில் உள்ளன. பயன்படுத்துவோரின் விருப்பத்துக்கேற்ப டேட்டா செலவுகளைக் கட்டுப்படுத்தவும் முடியும் எனக் கூறியுள்ளது யூடியூப்  நிறுவனம்.

ஜியோவின் வருகையால் இந்தியாவில் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதையடுத்து, தனது வாடிக்கையாளர்களை அதிகரிக்க, புதிய அம்சங்களை வழங்குகிறது யூடியூப்.