40,000 புகார்தாரர்களின் மொபைல் எண்களை லீக் செய்த பெங்களூரு காவல்துறை!

காவல்

பெங்களூர்வாசியா நீங்கள்? சமீப நாட்களாக தேவையற்ற அழைப்புகளோ, விளம்பர அழைப்புகளோ நிறைய வருகிறதா? வெயிட். இதற்கு காரணம் உங்கள் ஊர்  காவல் துறைதான்.

பெங்களூரு போலீஸுக்கென்று ஒரு ட்விட்டர் பக்கம் இருக்கிறது. அந்த அக்கவுன்ட்டில் பெங்களூரைச் சேர்ந்த 40,000 பேரின் மொபைல் எண்களை தெரியாமல் வெளியிட்டு விட்டார்கள். இந்த 40000 பேரும் 2015ல் இருந்து இப்போதுவரை அவசர உதவி கேட்டு காவல்துறையை தொடர்பு கொண்டவர்கள். தெருவில் சண்டை நடக்கிறது, சூதாட்டம் நடக்கிறது, வீட்டில் திருடன் வந்துவிட்டான் என ஆபத்து நேரத்தில் அழைத்த 40000 பேரின் எண்களை தான் ட்விட்டரில் வெளியிட்டுவிட்டது பெங்களூரு நகர காவல்துறை.

பெங்களூரு காவல்துறையை ரீச் செய்ய 100க்கு அழைக்கலாம். அல்லது சுரக்‌ஷா என்ற மொபைல் ஆப் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். இப்போது லீக் ஆன நம்பர்கள் எல்லாம் சுரக்‌ஷா ஆப் மூலம் காவல்துறையை தொடர்பு கொண்டவர்கள் எனச் செய்தி வெளியாகியிருக்கிறது. இந்தத் தகவல்களை வெளியிட்ட காவல்துறையின் ட்விட்டர் ஹேண்டில் இதுதான் @BCPCR.

இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால், இந்த அக்கவுண்ட்டை மொத்தமே 66பேர் பின் தொடர்கிறார்கள். அதிலும் பெரும்பாலானோர் காவல்துறையை சேர்ந்தவர்கள் தான். இப்போது இந்த அக்கவுன்ட்டை பிரைவேட் அக்கவுன்ட்டாக மாற்றியிருக்கிறார்கள். அதனால், அந்த அக்கவுன்ட்டை பின் தொடர்பவர்கள் தவிர வேற யாரும் பார்க்க முடியாது.
தானியங்கி ட்வீட்கள் போடும் சிஸ்டம் மூலம் இந்த தகவல்கள் லீக் ஆகிவிட்டதாக சொல்கிறது பெங்களூரு காவல் துறை. மொத்தம் எத்தனை அழைப்புகள் சுரக்‌ஷா மூலம் வந்திருக்கிறது என்பதை சொல்ல நினைத்து, மொபைல் எண்களோடு முழுத்தகவல்களும் வெளியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

twitter

ஒருவேளை புகார் தந்தவர் யார் என்ற தகவல் வெளியிடப்படாதது என்றால், இந்த பிரச்னை மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கியிருக்கும். ஆனால், அனைத்து குற்றவாளிகளுக்கும் அவர் மீது யார் புகார் தந்தது என்ற விவரம் ஏற்கெனவே தெரியும் என்பதால், இது எந்தவிதமான சிக்கலையும் உண்டாக்காது என்கிறார்கள். ஆனால், எப்படி இருந்தாலும் மொபைல் எண்களும், புகார் தந்தவர்களின் பெயர்களும் லீக் ஆனது தவறுதான்.

மொபைல் ஆப்கள் மூலம் நிறைய பேர் காவல்துறையை தொடர்பு கொள்கிறார்கள் என்பதை சொல்ல நினைத்தது காவல் துறை. ஆனால், இப்போது அதுவே பாதுகாப்பற்றது என்ற செய்தியை சொல்லிவிட்டது. 

சில நாட்களுக்கு முன்புதான் ட்விட்டரில் இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் ஆதார் விவரங்கள், விண்ணப்பப்படிவத்துடன் கூடிய புகைப்படம் வெளியானது. இதுகுறித்து அவரது மனைவி சாக்‌ஷி தோனி, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சரிடம் ட்விட்டர் பதிவிலேயே புகார் அளித்தார். இந்தப் படம், அரசு பொது சேவை மையத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டப்பட்டிருந்தது. அதை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சரே கவனிக்காமல் ‘லைக்’ செய்தது சாக்‌ஷி தோனியை கேள்வி எழுப்ப வைத்தது. தனிப்பட்ட ஒருவரின் தகவல்களை வெளியிட்டது சட்டப்படி குற்றமெனவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார். பின்னர், ட்விட்டர் பக்கத்திலிருந்து அசல் புகைப்படம் நீக்கப்பட்டது

டிஜிட்டல் உலகில் அனைவருமே பாதுகாப்புடனும், கவனத்துடனும் இருக்க வேண்டியிருக்கிறது. அதிலும், காவல்துறை போன்ற அமைப்புகள், கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். 

- கார்க்கிபவா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!