ஜியோ செட் டாப் பாக்ஸ்... டி.டி.எச் சேவையிலும் அதிரடியா?!

ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஜியோ சேவையை அறிமுகப்படுத்தியது. டிசம்பர் மாத இறுதி வரை இலவச கால் மற்றும் இன்டர்நெட் சேவைகளைப் பயன்படுத்தலாம் என முதலில் அறிவித்தது. அதன்பின் இந்த இலவச சேவைகளை மார்ச் இறுதி வரை நீட்டித்தது. தற்போது இந்த இலவச சேவைகளுக்கான கால அவகாசம் வரும் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

ஜியோ

10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்று இந்திய தொலை தொடர்புத் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஜியோ ஏற்படுத்தியிருக்கிறது. தொலைதொடர்பு நிறுவனங்கள் போட்டியை சமாளிப்பதற்காக போட்டி போட்டுக்கொண்டு விலைக் குறைப்பு செய்தன. இந்த அசுர வளர்ச்சியை அடுத்து ஜியோ என்ன செய்யப் போகிறது என வாடிக்கையாளர்கள் குதூகலத்திலும், நெட்வொர்க் சேவை நிறுவனங்கள் கவலையிலும் முகேஷ் அம்பானியின் பக்கம் கன்னத்தில் கை வைத்து காத்துக் கிடந்தனர்.

இந்நிலையில், ஜியோ டி.டி.எச் (DTH) சேவையிலும் ஈடுபடப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த டி.டி.எச் சேவையில் 360 சேனல்கள் ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது. இதில், 50 ஹெச்.டி சேனல்களும் அடக்கம். இதை உறுதிப்படுத்தும் வகையில், ஜியோ என எழுதப்பட்ட செட் டாப் பாக்ஸ் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வழக்கமான கேபிள் கனெக்ட்டர் உடன், HDMI, USB கேபிள் போன்றவைகளை இணைத்துக் கொள்ளும் போர்ட்கள் இந்த செட் டாப் பாக்ஸில் இடம்பெற்றுள்ளன.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை தேவைக்கேற்ப ரெக்கார்ட் செய்து, பின்னர் விருப்பப்படும் நேரத்தில் கண்டுகளிக்கும் வசதியும் ஜியோவின் டி.டி.எச் சேவையில் இடம்பெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இவ்வாறு ரெக்கார்ட் செய்யப்படும் நிகழ்ச்சியானது சர்வரில் சேமிக்கப்பட்டு, அதிலிருந்தே யூசர்கள் பயன்படுத்த முடியும்.

சோஷியல் மீடியாவில் வைரல் ஆகும் புகைப்படம்

நெட்வொர்க் சேவையில் வாடிக்கையாளர்களுக்கு அதிரடியாக இலவச ஆஃபர்களை அறிவித்த ஜியோ, டி.டி.எச் சேவையிலும் இலவச ஆஃபர்களை வழங்கும் என எதிர்பார்க்கலாம். அதன்பின், தற்போதைய சந்தை நிலவரத்தை விட மிகக்குறைந்த விலைக்கு தனது சேவைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்களை கவர்ந்தபின், ப்ரைம் சேவையை அறிவிக்கலாம். முதல் கட்டமாக மும்பையில் தனது டி.டி.எச் சேவையை ஜியோ தொடங்கவிருக்கிறது.

'ஜியோ டிவி' அப்ளிகேஷனில் தொடக்கத்தில் 200 சேனல்கள் மட்டுமே இருந்தன. இந்த எண்ணிக்கையை படிப்படியாக உயர்த்தி தற்போது 15 மொழிகளைச் சேர்ந்த 432 சேனல்களை தற்போது இலவசமாக வழங்கி வருகிறது. ஹாட்ஸ்டார் பிரீமியம் வீடியோ சேவையையும் யூசர்கள் இலவசமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும், 'ஜியோ-சினிமா' அப்ளிகேஷன் சேவைக்காக பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான 'ஈரோஸ் நவ் (Eros Now)' உடனும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

டி.டி.எச் சேவையைப் போன்று 'ஜியோ ஃபைபர்' என்ற பெயரில் அதிவேக இணைய சேவையிலும் ஜியோ தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1 ஜி.பி.பி.எஸ் அதிவேகம் கொண்ட இன்டர்நெட் கொண்டது என்பதால், இதன் மூலம் அதிக அளவிலான வீடியோக்களையும் எளிதாக ஸ்ட்ரீமிங் செய்ய முடியும்.

இலவச சேவைகள் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்தாலும், அதன் பின்னரும் குறைந்த விலைக்கு அதிக அளவிலான சேவைகளை ஜியோ வழங்கிவருகிறது. களமிறங்கும் மற்ற சேவைகளிலும் இதே யுக்தியை கடைப்பிடித்தால் ஜியோ அசுர வளர்ச்சி காணும் என்பதில் சந்தேகம் இல்லை.

- கருப்பு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!