புதுசா லேப்டாப் வாங்கப் போறீங்களா..!? இதைப் படிக்காம வாங்காதீங்க! #LaptopBuyingGuide

இன்றைய டிஜிட்டல் உலகில் அலுவலகம் செல்பவர்கள் முதல் கல்லூரி, பள்ளி மாணவர்கள் வரை அனைவருக்கும் அத்தியாவசியமாக தேவைப்படும் ஒன்றாக லேப்டாப் மாறிவிட்டது. வேலை விஷயமாக இருந்தாலும் சரி பொழுதுபோக்குக்காக இருந்தாலும் சரி. அனைவருக்கும் மடிக்கணினிகள் ஏதேனும் ஒரு வகையில் தேவைப்படக்கூடிய ஒன்றாகவே இருக்கின்றன.

லேப்டாப்

லேப்டாப் வாங்கிய பின்பு நமது தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்று வருத்தப்படுவதை விட வாங்குவதற்கு முன்பே திட்டமிட்டால் சரியான விலையில் நிறைவான வசதிகளுடன் மடிக்கணினிகளை வாங்கலாம்..

லேப்டாப் வாங்க நினைப்பவர்கள் எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக சில ஆலோசனைகள்..

1.திரை அளவு

மடிக்கணினிகள் வாங்க நினைப்பவர்கள் முதலில் முடிவு செய்ய வேண்டியது திரையின் அளவுதான். அடிக்கடி பயணம் செய்பவர்கள் எடுத்துச்செல்ல எளிதாக 12-14 இன்ச் அளவை தேர்ந்தெடுக்கலாம்.வீடியோ எடிட்டிங்,போட்டோஷாப் போன்ற வேலை தொடர்பாக வாங்க நினைப்பவர்கள் 15 இன்ச்க்கு மேல் சற்று பெரிய திரையை தேர்ந்தெடுக்கலாம்.

2.மடிக்கணினியின் வகை

மடிக்கணினியில் இரு வகைகள் இருக்கின்றன. பழைய வடிவமைப்பில் உள்ளது தவிர திரையை மட்டும் தனியே எடுத்து டேப்லெட் ஆக பயன்படுத்தும் வகையிலான மடிக்கணினிகள் தற்பொழுது சந்தையில் கிடைக்கின்றன. நமது தேவைக்கு ஏற்றபடி இதைத் தேர்வு செய்யலாம்.

3.போர்ட்களின் வகை மற்றும் எண்ணிக்கை..

தகவல்களை இன்புட் செய்யவும் அவுட்புட் செய்யவும் அவசியமானவை போர்ட்கள். எல்லா மடிக்கணினிகளிலும் குறைந்தபட்சமாக மூன்று USB போர்ட்கள் இருப்பது நல்லது, USB 3.0 வசதி உள்ள போர்ட்களை தேர்ந்தெடுத்தால் அதன் மூலம் வேகமாக டேட்டாக்களை பரிமாற்றம் செய்யலாம்  மேலும் தற்பொழுமு ஸ்மார்ட்போன்   Type-C போர்ட்டை கொண்டிருப்பதால் அதற்கேற்ற வசதிகள் மடிக்கணினியில் இருப்பது அவசியம்.இணைய வசதியை அளிக்க ஈதர்நெட் போர்ட் அவசியம் மேலும் HDMI,VGA, போர்ட்களின்  தேவை இருந்தால் மட்டும் அவை இருக்கும் மடிக்கணினிகளை தேர்ந்தெடுக்கலாம்.

4.ஹார்ட்டிஸ்க்,சிடி டிரைவ்

மடிக்கணினி வாங்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் ஹார்ட்டிஸ்க். மடிக்கணினியின் இதயம் போன்றது இதைப்பொறுத்தே ஒட்டுமொத்த செயல்திறன் அமையும் என்பதால் ஹார்ட்டிஸ்க் தேர்வில் கவனமாக இருக்க வேண்டும். சிடிக்கள் தற்பொழுது வழக்கொழிந்து வருவதால் எப்போதாவது மட்டுமே சிடி டிரைவ் தேவைப்படலாம் அல்லது வாங்கிய பின்பு தனியாக பொருத்திக்கொள்ளலாம்.

5.திரையின் வகை

தொடுதிரை வசதி அடுத்த தலைமுறை மடிக்கணினிகளில் புதிய வரவு. உங்களுக்கு கீபோர்டு மூலம் இயக்குவதற்கு சலிப்பு ஏற்பட்டால் திரையை தொடுவதன் மூலம் கணினியை இயக்கலாம். ஆனால் இந்த வகை மடிக்கணினிகள் விலை சற்று அதிகம் என்பதாலும் தொடுதிரை வசதியை அதிகம் பயன்படுத்த முடியாது என்பதாலும் சாதாரண வகை திரையை தேர்ந்தெடுக்கலாம். அது சற்று விலை குறைவாகவும் கிடைக்கும்.

6.பிராசசர்,ரேம் மற்றும் கிராபிக்ஸ் கார்ட்

பிராசசர் மற்றும் ரேம் ஆகியவற்றை பொறுத்தே மடிக்கணினியின் வேகம் அமையும் குறைந்தபட்சமாக 4 ஜி.பி ரேம் மடிக்கணினிக்கு தேவைப்படும்.கிராபிக்ஸ் கார்டுகள் திரையில் தெரியும் காட்சியின் தரத்தை மேம்படுத்த உதவும் ஆனால் விலை சற்று அதிகம்.

7.பேட்டரி திறன் மற்றும் எடை

குறைந்தபட்ச பேட்டரி திறன் 6 மணி நேரத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகுத்தன்மைதான் மடிக்கணினிகளின் சிறப்பம்சமே
எடை குறைந்த மடிக்கணினிகளே பயன்படுத்த எளிதாக இருக்கும்.பேட்டரியின் திறன் அதிகமாக இருந்தாலும் எடை குறைவான மடிக்கணினிகள் தற்பொழுது கிடைக்கின்றன.

8.இயங்குளம்
விண்டோஸ் இயங்குதளம் சிறப்பாக இருந்தாலும் அதன் விலை அதிகம் எனவே ஓப்பன் சோர்ஸ் இயங்குதளங்களை தேர்வு செய்வதால் செலவை குறைக்கலாம்.

-மு.ராஜேஷ்
மாணவப்பத்திரிகையாளர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!