வெளியிடப்பட்ட நேரம்: 10:41 (11/04/2017)

கடைசி தொடர்பு:12:50 (15/04/2017)

ஆதார் எண்ணை பான் எண்ணோடு இணைப்பது எப்படி? #StepByStepProcedure

ஆதார்

“ஆண்டவன் புண்ணியத்தில் ஆதார் வாங்கிட்டேன்” என மக்கள் விடும் நிம்மதிப் பெருமூச்சு புரிகிறது. ஆனால், நம் கடமையை அதோடு முடிய விட மாட்டேன் என்கிறது மத்திய அரசு. “ஆதார் எல்லாம் கட்டாயம் இல்லை” என ஒரு பக்கம் உச்ச நீதிமன்றம் தொடர்ந்து சொல்லி வருகிறது. இன்னொரு பக்கம், எல்லாவற்றுக்கும் ஆதார் அவசியம் என அறிவித்தபடி இருக்கிறது மத்திய அரசு. காவிரியில் தண்ணீர் விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொன்னதை மாநில அரசே கேட்கவில்லை. மத்திய அரசு மட்டும் என்ன மாங்காய்த் தொக்கா? இதோ… பான் நம்பரோடு ஆதார் எண்ணை இணைக்கவில்லையென்றால், பான் நம்பரே செல்லாமல் போய்விடும் எனச் சொல்லிவிட்டார்கள். அரசு சொல்லும் விஷயத்தைச் செய்ய நினைத்தாலும் செய்ய விடுமா அவர்கள் சிஸ்டம்? “உங்க அப்பாரு பேரு ரெண்டு சுழியா? இதுல மூணு இருக்கே”, “உங்க கண்ணுக்கு மேல என்ன இமை இருக்கு”னு ஏதேதோ காரணம் சொல்லி அலைக்கழிக்கும். அப்படியெல்லாம் ஆகக் கூடாது என முதல் வரியில் சொன்ன ஆண்டவனை வேண்டிக்கொண்டு மேலே படியுங்கள். பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி என விளக்குகிறேன்.

வருமான வரித்துறையின் லாக் இன் பக்கத்துக்கு முதலில் வரவும்.

Income tax page

இதற்கு முன் எப்போது இங்கே வந்தோம் எனப் பலருக்கும் நினைவில்லாமல் இருக்கலாம். அல்லது பழைய மொபைல் எண்ணைப் பதிவு செய்திருக்கலாம். லாக் இன் ஐடி, பாஸ்வேர்டு நினைவில் இருப்பவர்கள் லாக் இன் செய்யலாம். மற்றவர்கள் Forgot Password க்ளிக் செய்து அடுத்த பக்கத்துக்குத் தாவவும்.

reset password

உங்கள் பான் நம்பர்தான் உங்கள் யூஸர் ஐடி. அதையும் captcha code-ஐயும் டைப் செய்து அடுத்த பக்கத்துக்குத் தாவவும்.

otp page

இங்கே டிராப்டவுன் பாக்ஸில் நான்கு ஆப்ஷன்கள் இருக்கும். இதில் மூன்றாவது OTP ஆப்ஷனை செலக்ட் செய்யவும். அடுத்த பக்கத்தில் நமது மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி தந்தால், அதற்கு அனுப்புவார்கள். அதை வைத்து பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளலாம். மொபைல் எண் பழைய எண்ணாக இருந்தால், புதிய எண்ணைக் கொடுத்து அதையும் இங்கே மாற்றிக்கொள்ளலாம்.

பாஸ்வேர்டு மாற்றிய பின் 12 மணி நேரம் கழித்தே பான் நம்பரோடு ஆதார் எண்ணை இணைக்க முடியும்.

12 மணி நேரம் கழித்து லாக் இன் செய்ததும், ஒரு பாப் அப் விண்டோ வரும். அதில், ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமா எனக் கேட்கும். அந்த பாப் அப்பை விட்டுவிட்டால், புரொபைல் செட்டிங்குக்குப் போய்க்கூட ஆதார் எண்ணை இணைக்க முடியும்.

profile setting

இங்கே உங்கள் பெயர், பிறந்த தேதி ஆகிய தகவல்களை கவனமாகப் பதிவு செய்யவும். அனைத்துத் தகவல்களும் முன்னர் கொடுத்த தகவல்களோடு பொருந்தினால், ஆதார் எண்ணைக் கேட்கும். அதையும் டைப் செய்து “Link now” கொடுத்தாlல் பான் எண்ணோடு ஆதார் எண் இணைக்கப்பட்டுவிடும்

aadhar

“your aadhar number is successfully linked with pan card” என மெசெஜ் வந்தால், முதல் வரியில் சொன்ன ஆண்டவனுக்கு நன்றி சொல்லுங்கள். உங்கள் பெயரோ, இனிஷியலோ மேட்ச் ஆகவில்லை என மெசெஜ் வந்தால், உடனடியாக ஆதார் உதவி எண்ணைத் (1800-300-1947 அல்லது 1947) தொடர்பு கொண்டு என்ன செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், உச்ச நீதிமன்றத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடக்கும் போட்டியில் ஜெயிக்கப்போவது மத்திய அரசுதான். அதனால், சசிகலா அணியும், ஓ.பி.எஸ் அணியும் இணைகிறார்களோ இல்லையோ.. உங்கள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை எப்படியாவது இணைத்தே ஆக வேண்டும்.

-கார்க்கிபவா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்