ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன், பி.எஸ்.என்.எல்... யாருடைய டேட்டா பிளான் பெஸ்ட்?

டேட்டா

மொபைல் போன் நம் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்தை விட ஜியோ, மொபைல் போன் வரலாற்றில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் மிகப்பெரியது. ஒரே நெட்வொர்க் நம்பர்களுக்கு அழைக்க ஒரு பேக், மற்ற கால்களுக்கு ஒரு பேக், குறுஞ்செய்திகளுக்காக ஒரு பேக், ரோமிங்குக்கு தனி, இண்டர்நெட் டேட்டாவுக்கு தனி என மாதம் பிறந்தால் புதிப்பிக்க வேண்டிய பேக்குகளே அத்தனை. இதில் ஒரு மாதம் என்பது 28 நாட்கள் மட்டுமே என்பது தனிக்கணக்கு. இந்த சிக்கல்கள் அனைத்துக்கும் முடிவு கொண்டு வந்தது ஜியோ. மாதம் 309 ரூபாய். மாதம் முழுக்க அழைப்புகள், இண்டெர்நெட், ரோமிங் என அனைத்தும் 309ல் அடக்கம் என்றது. 

ஜியோ இலவசமாக இருந்தபோது கூட “இது சில மாதத்துல முடிஞ்சிடும்” என வேடிக்கைப் பார்த்த மற்ற டெலிகாம் நிறுவனங்கள், இந்த ஆஃபரை கண்டு ஆடித்தான் போயிருக்கின்றன. கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் இப்படி ஒரு ஆல் இன் ஆல் பேக்கை அறிமுகப்படுத்தியிருக்கின்றன. இதில் யார் பெஸ்ட், யாரை நம்பலாம்? ஒரு சின்ன ஒப்பீடு தான் இந்தப் பதிவு.

பிள்ளையார் சுழிப் போட்ட ஜியோவில் இருந்தே தொடங்கலாம்.

jio

புதிய பிளான்படி மாதம் 309 ரூபாய் கட்டினால் ஒரு நாளைக்கு 1 ஜிபி 4G டேட்டா, அன்லிமிட்டட் எஸ்.எம்.எஸ், கணக்கில்லா கால்கள் மற்றும் ஜியோ ஆப்ஸ்களையும் தருகிறார்கள். முதல் மூன்று மாதங்களுக்கும் சேர்த்து 309 ரூபாய்தான் என்றாலும், அதன் பிறகு மாதம் 309 ரூபாய். இந்தப் பிளான் சிறப்பு தான். ஆனால், 509 ரூபாய் பிளானில் தினமும் 2 ஜிபி வரை டேட்டா கிடைக்கிறது. வீட்டில் இருக்கும் பிராண்ட்பேண்ட் அல்லது மற்ற நெட் சேவைகளை துண்டித்துவிட்டால் 509 ரூபாயில் நமது மொத்த நெட் மற்றும் மொபைல் சேவைகளுக்கான செலவு முடிந்துவிடும். 

ஆனால் இதில் ஒரு பிரச்னை இருக்கிறது. ஜியோவின் வேகம் விஜய் சேதுபதியின் கிராஃப் போல. ஒரு நாள் ஸ்பீடு காட்டும். அடுத்த நாள் பிரேக் போடும். அதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்த இடம் ஏர்டெல்லுக்கு

ஏர்டெல்

ஏர்டெல் 349 ரூபாய்க்கு கிட்டத்தட்ட ஜியோ தரும் அதே சேவைகளை வழங்குகிறது. ஒரு நாளைக்கு 1 ஜிபி (4G) டேட்டா, கணக்கற்ற கால்கள் உண்டு. ஆனால், இந்த அன்லிமிட்டட் கால்கள் என்பதற்கு ஏர்டெல் ஒரு விளக்கம் தருகிறது. ஒரு நாளைக்கு 300 நிமிடங்களையும், வாரத்துக்கு 1200 நிமிடங்களையும், 28 நாளில் 3000 நிமிடங்களையும் தாண்டக்கூடாது. குறுஞ்செய்திகளும் ஏர்டெல்லில் இலவசம் கிடையாது. மேலும், இந்தச் சேவைகளை கமர்ஷியல் பயன்பாட்டுக்கு உட்படுத்தக்கூடாது.

இதே பிளானில் 28 நாட்களுக்கு 2ஜிபி டேட்டாவை மட்டும் குறைத்து 149 ரூபாய்க்கும் தருகிறது ஏர்டெல். 

ஜியோவில் இருக்கும் எஸ்.எம்.எஸ், ஆப்ஸ் கிடையாது என்பதும் தினசரி கால்கள் லிமிட் போன்றவையும் ஏர்டெல்லில் குறை. விலையும் 40 ரூபாய் அதிகம். ஆனால், நீண்ட நாட்கள் ஏர்டெல்லிலே இருந்தவர்கள், ஜியோவுக்கு மாறாமல் இருக்க இந்த ஆஃபர் நிச்சயம் உதவும்.

இதில் இருக்கும் இன்னொரு பிரச்னை 4ஜி மொபைல் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த ஆஃபர் என்கிறது ஏர்டெல். ஜியோ டெக்னாலஜியே 4ஜி நெட்வொர்க் மட்டுமே என்பதால் ஏர்டெல்லும் அதை பின்பற்றுகிறது.

அடுத்து வோடோஃபோன்

vodofone


ஏர்டெல் தரும்349 பிளானை அப்படியே ஜெராக்ஸ் போட்டு 347 ரூபாய்க்கு தருகிறது வோடோஃபோன். முதலில் 346க்கு தந்தது. மார்ச் 15 அன்றுடன் அந்த ஆஃபர் முடிந்தது. இப்போது முதல் மாதம் மட்டும் 349ரூபாயும், அதன் பின் 347 ரூபாயும் கேட்கிறார்கள். 

பி.எஸ்.என்.எல்

bsnl


தனியார் நிறுவனங்களை சமாளித்தே ஆக வேண்டிய கட்டாயம் பி.எஸ்.என்.எல்லுக்கு. அவர்களும் 339 ரூபாய்க்கு ஒரு பிளானை அறிமுகம் செய்திருக்கிறார்கள். இந்தப் பிளான் படி 28 நாட்களுக்கு தினமும் BSNL to BSNL அழைப்புகள் முற்றிலும் இலவசம். பி.எஸ்.என்.எல் - மற்ற நெட்வொர்க்குக்கு தினமும் 25 நிமிடங்கள் இலவசமாக பேசிக்கொள்ளலாம். அதன் பிறகு ஒரு நிமிடத்துக்கு 25 காசுகள். 4ஜி நெட்டுக்கு பதிலாக 3ஜி தருகிறார்கள். ஆனால், 339 ரூபாயிலே தினமும் 2ஜிபி டேட்டாவை அள்ளித் தருகிறது பி.எஸ்.என்.எல். 3ஜி வேகம் என்பதைத் தவிர, மற்ற அனைத்து விஷயங்களிலும், பிற டெலிகாம் நிறுவனங்களுக்கு இது சவாலான விஷயம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

உங்களுக்கு எது உகந்த சேவை என்பதை நீங்களே இப்போது முடிவு செய்துகொள்ளலாம்.

-கார்க்கிபவா


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!