சாலையை மறிக்கும் மாடுகள்... டிரைவருக்கு உதவும் ‘ரியல் டைம் அலர்ட்’!

மாடு சாலை

இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் பலர் சாலையில் பயணிக்கும் போது வியந்து பார்க்கும் ஒரு விஷயம் நமது வாகனம் ஓட்டும் திறமையைத்தான். நமது ஊர் சாலைகளில் அவர்களால் கொஞ்ச நேரம் கூட தாக்குப்பிடிக்க முடியாது. இந்தியாவின் சாலைகள் அவ்வளவு சவால் நிறைந்தவை. அதில் ஒன்று கேட்பாரற்று சுற்றித்திரியும் மாடுகள், நாய்கள் மற்றும் பிற விலங்குகள். அதை சமாளித்து வாகனத்தை ஓட்டுவதற்கே தனித்திறமை வேண்டும்.

இந்தியாவின் பெரும்பாலான நகரங்களின் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் கார் ஓட்டுபவர்களுக்கு பெரிய பிரச்னையாக இருக்கின்றன. வேகமாக செல்லும் கார்களுக்கு  இடையே மாடுகள் இடைப்படுவதால் வாகனம் விபத்துக்குள்ளாகும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. இது போன்ற சம்பவங்களில் சில சமயங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படும் வாய்ப்புள்ளது. ஏற்பட்டும் இருக்கின்றன.

இதைப் போன்ற விபத்துக்களை தவிர்ப்பதற்காக புதிய தொழில்நுட்பம் ஒன்றை கண்டறிந்துள்ளனர் அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள். இந்த தொழில்நுட்பம் மூலமாக இந்தப் பிரச்னைக்கு எளிதில் தீர்வு காண முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த தொழில்நுட்பத்தில் கார்களில் முன்னால் இருக்கும் டேஷ் போர்டில் ஒரு கேமரா பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் விலங்குகளின் அசைவு கண்டறியப்பட்டு அது விலங்குதான் என்று உறுதியானவுடன் வாகனத்தை ஓட்டுபவருக்கு எச்சரிக்கை அளிக்கும். ஓட்டுநர் அதை கவனத்தில் கொள்ளாமல் இருந்தால் தானாகவே பிரேக்கை இயக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

பரிசோதனை முயற்சியில் 80 சதவிகிதம் விலங்குகளை இந்த தொழில்நுட்பம் கண்டறிந்து வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.  இது தொடர்பான கட்டுரை இந்தோனேசியாவின் ஆராய்ச்சி இதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது. இது போன்ற சர்வதேச அங்கீகாரங்கள்  தங்களது ஆராய்ச்சிக்கு கிடைத்த வெற்றி என தொழில்நுட்பத்தை கண்டறிந்த சச்சின் ஷர்மா மற்றும் தர்மேஷ் ஷா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.இதை அனைத்து வகை கார்களிலும் பயன்படுத்தலாம் என்றும் அதற்கு மிகக் குறைந்த செலவே ஆகும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.

இரவு நேரங்களில் சாலைகளில் உணவு தேட வரும் விலங்குகள் அடிபட்டு இறப்பது அடிக்கடி நிகழ்வதுதான். மலைப்பகுதிகளில் உள்ள சாலைகளில் குரங்குகள் போல பல விலங்குகள் அடிபட்டு இறப்பது நமது கவனக்குறைவால் மட்டுமே நிகழ்கிறது. அதைக் குறைக்க இந்த தொழில்நுட்பம் உதவும்.

தற்பொழுது கார்களில் மட்டுமே பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் ரயில்களிலும் பயன்படுத்தும் வகையில் சற்று மேம்படுத்தலாம்.  கோவை போன்ற இடங்களில் யானைகள் ரயிலில் அடிபட்டு இறப்பது ,மத்திய பிரதேசத்தில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 35 புலிகள் ரயிலில் அடிபட்டு இறந்தது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கலாம்.

டெக்னாலஜியால் இன்னும் பல மாற்றங்களை நிகழ்த்த முடியும்.

-மு.ராஜேஷ்
மாணவப்பத்திரிகையாளர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!