வெளியிடப்பட்ட நேரம்: 12:52 (28/04/2017)

கடைசி தொடர்பு:14:53 (28/04/2017)

டேட்டா சேவையைத் தொடர்ந்து டி.டி.ஹெச், மொபைல்களை குறி வைக்கும் ஜியோ! #Jio

ஜியோ jio

சினிமா நிகழ்ச்சிகளில் அஜித் பேரை சொன்னாலே அதிரும் கைத்தட்டல்கள் போல ஆகிவிட்டது ஜியோ. சோஷியல் மீடியாக்களில் ஜியோ (Jio) பற்றி எழுதினாலே லைக்ஸும், ரீட்விட்டும் பறக்கின்றன. இலவச சேவைகள் முடிந்த பின்னும், இணைய வேகத்தில் அவ்வப்போது மாற்றம் இருந்தாலும், ஜியோ ரசிகர்கள் சோர்ந்துவிடவில்லை. மற்ற டெலிகாம் நிறுவனங்களும் தங்களது கட்டணத்தை குறைக்க ஜியோ ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. மொபைல் சேவையில் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்ட ஜியோ அதோடு நிற்கலாமா? அல்லது நிற்குமா? அடுத்தடுத்த மற்ற மார்க்கெட்டிலும் வெற்றி நடை போட ஜியோ நிச்சயம் திட்டம் போட்டிருக்கும். அவை என்ன என்ன சேவைகளாக இருக்கும்?

1) ஜியோ பிராட்பேண்டு:

இப்போது உங்கள் வீட்டிலிருக்கும் இணையத்தின் வேகம் என்ன? கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி கொள்ளுங்கள். 1GPBS வேகத்தில் இணையத்தை ஃபைபர் கேபிள் மூலமாக நம் வீட்டுக்கு கொண்டு வர இருக்கிறது ரிலையன்ஸ். செப்டம்பரில் ஜியோ மொபைல் சேவைகளை அறிவித்த போதே இதையும் அறிவித்தார் அம்பானி. வரும் என்றுதான் சொன்னாரே தவிர, இதன் அறிமுக தேதி மற்றும் விலை பற்றி இப்போதைக்கு எந்த தகவலும் இல்லை. ஆனால், இந்த சூப்பர்ஸ்டார் நிச்சயம் வந்துவிடுவார் என நம்பலாம். 

2) டி.டி.ஹெச் சேவை:

50 ஹெச்டி சேனல்கள் மற்றும் 350 சாதாரண சேனல்களுடன் விரைவில் ஜியோ டி.டி.ஹெச் வெளியாக இருக்கிறது. ஜியோ டி.வி ஆப், ஒரு ஜியோ சிம் மற்றும் ஜியோ பிராண்ட்பேண்ட் கனெக்‌ஷன் மூலம் இதை வீட்டுக்கு கொண்டு வரப்போகிறது ஜியோ. டி.வி. சேனல்கள் மட்டுமல்லாது ஸ்ட்ரீமிங் தளங்களையும் இதன் மூலம் பார்த்து ரசிக்கலாம். ஜியோ கிளவுட் மூலமாக வேண்டிய நிகழ்ச்சிகளை சேவ் செய்யவும் முடியும். இன்னும் நிறைய ஆச்சர்ய சேவைகளை ஜியோ தரும் என எதிர்பார்க்கலாம்.

3) ஜியோ மணி (Jio money)

பார்க்கும் பொட்டிக்கடைகளில் எல்லாம் பேடிஎம் இருக்கிறதா? அப்படியே கொஞ்ச நாள் பொறுங்க. எல்லாம் ஜியோ மணியாக மாறும். அல்லது சேரும். கமர்கட்டு தொடங்கி கம்ப்யூட்டர் வரை எதை வாங்கினாலும் ஜியோ மணியில் பணம் செலுத்தலாம் என்ற நிலைக்கு கொண்டு வர மும்முரமாக வேலை செய்கிறது ஜியோ. ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட சேவைதான் என்றாலும் இந்த ஆண்டு பவர்ப்ளே போல இறங்கி அடிக்கும் ஜியோ மணி என்கிறார்கள் மார்க்கெட் எக்ஸ்பெர்ட்ஸ்.

4) 4ஜி voLTE மொபைல்:

அட்டகாசமான ஆஃபர்களை நெட்வொர்க்குக்கு தந்துவிட்டு விலை அதிகமான மொபைல்கள் வாங்க வேண்டுமென்றால் எப்படி? அதற்காகத்தான் லைஃப் மொபைல்கள் வந்தன. இப்போது 1000 ரூபாயில் அட்வான்ஸ்டு வசதிகளுடன் 4ஜி மொபைலை களம் இறக்க ஜியோ திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. கார் நிறைய விற்க வேண்டுமென்றால் சாலைகள் நன்றாக இருக்க வேண்டுமென்பதை அறியாதவார அம்பானி?

5) ஸ்மார்ட் பொருட்கள்:

இனி எல்லாமே டேட்டாதான். ஸ்மார்ட்தான். அனைத்துக்கும் தேவை இணையம் மட்டுமே. அதில் இவ்வளவு சிறந்த சேவைகள் இருக்கும்போது மற்ற ஸ்மார்ட் விஷயங்களை கொடுப்பதுதானே அடுத்தக்கட்டம்? நிறைய டேட்டா பயன்படுத்துங்கள். நிறைய ஜியோ சேவைகளை வாங்குங்கள் என்பதுதான் வியாபார மந்திரம். அதற்காக ஸ்மார்ட் பொருட்கள் தயாரிப்பிலும் ஜியோ இறங்கும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்