அடுத்த குறி டி.டி.ஹெச் சேவை! ஆரம்பமே அமர்க்களப்படுத்தப்போகிறது ஜியோ

ஜியோ நிறுவனம், தனது அடுத்த முயற்சியாக குறைந்த விலையில் டி.டி.ஹெச் மற்றும் ப்ராட்பேண்ட்  சேவையில் இறங்கத் திட்டமிட்டுள்ளது. இதனால், மற்ற நிறுவனங்கள் 'கிலி'யில் உள்ளன. 


முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தொலைத்தொடர்புத் துறையில் தன்னுடைய காலைப் பதித்தது. 2016-ம் ஆண்டின் பாதியில், ஜியோ நிறுவனம் மொபைல் போன்களுக்கு இலவச இணையம் மற்றும் அழைப்புச் சேவையை வழங்கியது. இதன்காரணமாக, ஜியோ நிறுவனத்துக்கு இந்தியாவில் 7 மில்லியன் வாடிக்கையாளர்கள் வரை சேர்ந்தனர். இதனால் ஏர்டெல், வோடபோன், ஏர்செல் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் சரிவைச் சந்தித்தன. சுமார் 6 மாத காலத்துக்கு ஜியோ நிறுவனம் அழைப்பு மற்றும் இணைய சேவையை இலவசமாக வழங்கியது.

தற்போது ஜியோ நிறுவனம், ப்ராட்பேண்ட் மற்றும் டி.டி.ஹெச் சேவையில் கால் பதிக்க உள்ளது. டி.டி.ஹெச் சேவையின்மூலம், 350-க்கும் மேற்பட்ட சேனல்களை வழங்க உள்ளது. அதில், 50 சேனல்கள் உயர் தரத்தில் கிடைக்கும் வகையில் ஜியோ டி.டி.ஹெச் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டி.டி.ஹெச்சை பயன்படுத்துவதற்கு நமது மொபைல் போனில் ஜியோ சிம் மற்றும் வீட்டில் ஜியோ ப்ராட்பேண்ட் சேவையைக் கொண்டிருக்க வேண்டும் என்பது அவசியம். இந்த டி.டி.ஹெச்சில் நேரலை நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்து பார்க்கும் வசதியும் முன்னர் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளைத் திரும்பப் பார்க்கும் வசதியும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், குரல்மூலம் டி.டி.ஹெச்சை கட்டுப்படுத்தும் வசதியும் வீடியோ கேம் வசதியும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சேவையை ஜியோ பல இடங்களில் சோதனைசெய்துவருகிறது. மேலும், ஜியோ ப்ராட்பேண்ட் சேவை வழங்குவதுகுறித்து சோதனை செய்துவருகிறது. 1 ஜிபி வேகத்தில் இணையவசதியை அளிப்பதற்கான முயற்சிகளிலும் ஜியோ நிறுவனம் ஈடுபட்டுவருகிறது. ஜியோ நிறுவனம், ப்ராட்பேண்ட் மற்றும் டி.டி.ஹெச் சேவையைக் குறைந்த விலையில் அளிக்கும்பட்சத்தில், மற்ற நிறுவனங்கள் மிகப் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்பது நிதர்சனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!