சீனாவுக்காக தனியே ஒரு விக்கிபீடியா...இது சீன அரசின் அட்டாக்! | China government is creating a special encyclopedia page for their citizens

வெளியிடப்பட்ட நேரம்: 21:47 (08/05/2017)

கடைசி தொடர்பு:09:37 (09/05/2017)

சீனாவுக்காக தனியே ஒரு விக்கிபீடியா...இது சீன அரசின் அட்டாக்!

விக்கீபீடியா சீனா

உலகம் முழுதும் கூகுள்,பேஸ்புக்,ட்விட்டர், வாட்ஸ்அப் என நாம் தினசரி எதையெல்லாம் அதிகம் பயன்படுத்தி கொண்டிருக்கிறோமோ அதையெல்லாம் சீனா தடை செய்து பல வருடங்கள் ஆகிவிட்டன. சீனாவில் மக்கள் எதைப் பார்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது அரசு தான்.

சீனப் பெருஞ்சுவரை பற்றி உலகமே அறிந்திருக்கும். ஆனால் யாருமே அறியாத ஒரு சுவர் இருக்கிறது.அது “தி கிரேட் பயர்வால் ஆப் சைனா” என அழைக்கப்படும் பயர்வால் பாதுகாப்பு அமைப்பு. சீனாவில் இருக்கும் சர்வர்கள் அனைத்தையும் இது கண்காணிக்கும்.
சமூக வலைதளங்கள் முதல் தேடல் முடிவுகள் வரை கடுமையான தணிக்கை செய்யப்பட்ட பிறகே மக்கள் பயன்பாட்டுக்கு வரும். ”தலாய் லாமா” போன்ற பல கீ வேர்டுகளை அரசு தடைச் செய்திருக்கிறது. நெட்டிசன்ஸ் என்ன படிக்கலாம் என்பதையும் அரசுதான் அங்கே தீர்மானிக்கிறது.

கூகுளுக்கு பதிலாக பெய்டோ ,வாட்ஸ்அப்பிற்கு பதிலாக வீசாட், ட்விட்டருக்கு பதிலாக வெய்போ என சீன அரசாங்கம்
தனிப்பாதையில் செல்கிறது. கூகுளும்,ஃபேஸ்புக்கும் எவ்வளவோ முயன்றும் தடையை நீக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டது சீனா அரசு. இந்நிலையில் இணையதளத்தில் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவிற்கு மாற்றாக தனக்கென ஒரு புதிய இணையதளத்தை உருவாக்கும் முயற்சியை தொடங்கியுள்ளது சீன அரசாங்கம்.

விக்கிபீடியா என்பது லாப நோக்கின்றி செயல்படும் ஒரு தளமாகும் இதில் தனிநபர்களால் ஒரு பக்கத்தை உருவாக்கவும், மாற்றியமைக்கவும் முடியும். அதுவே விக்கிப்பீடியாவின் பலம். ஆனால் அதையே ஒரு பலவீனமாக கருதுகிறது சீனா. இதற்காகவே தனியாக ஒரு கலைக்களஞ்சியத்தை உருவாக்க நினைக்கிறது. இதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கி விட்ட நிலையில் பல்கலைக்கழகங்களில் பணிபுரிபவர்கள்,பல துறையில் பட்டம் பெற்றவர்கள் என சுமார் இருபதாயிரம் நிபுணர்களை பணியில் அமர்த்தியுள்ளது. மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள், நூற்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் உருவாக்கப்பட்ட பின்னர் 2018 ஆண்டிலேயே பொதுமக்களின் பயண்பாட்டிற்கு வரவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

2011 ஆம் ஆண்டு விக்கிபீடியா தளத்தை தடை செய்த போது மக்களின் அடிப்படையான கற்கும் சுதந்திரத்தை கூட பறிக்கிறது என சீன அரசின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் கட்டுப்பாடில்லாத சுதந்திரம் என்றுமே ஆபத்தானது என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கும் சீன அரசாங்கம் அதை கவனத்தில் கொண்டே செயல்படுகிறது. தப்பித்தவறி கூட புரட்சிகரமான கருத்துக்கள் மக்களை சென்றடைந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளது. நாட்டில் புரட்சி படை உருவாக கூடாது என்பதுதான் சீன அரசின் நோக்கம்.

பட்டம் பெற்றவர்கள், பல துறை அறிஞர்கள் என அவர்களின் திறமையை பயன்படுத்துவதில் அனைத்து நாடுகளுக்கும் ஒரு வகையில் முன்னோடியாக திகழ்கிறது சீனா. இந்தியாவின் பழமையான ஓலைச்சுவடிகள் பல கரையான்களால் அரிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. பாதிக்கும் மேற்பட்ட  கல்வெட்டுகள் இன்னும் மொழிபெயர்க்கப்படாமல் இருக்கின்றன. அவைகளை டிஜிட்டல் முறையில் மாற்றினால் அவை அழியாமல் பாதுகாக்கலாம்.

எதற்கெடுத்தாலும் டிஜிட்டல் இந்தியா என கூவும் இந்திய அரசாங்கம் இதைப் போன்ற முன்னோடியான திட்டங்களை செயல்படுத்தினால் இந்தியாவில் பல துறைகளில் பட்டம் பெற்றுள்ள அறிஞர்களின் திறமையை பயன்படுத்தவும் செய்யலாம். அவர்களுக்கென வேலைவாய்ப்பையும் உருவாக்கலாம்..

 


டிரெண்டிங் @ விகடன்