வெளியிடப்பட்ட நேரம்: 12:41 (18/05/2017)

கடைசி தொடர்பு:16:21 (18/05/2017)

சீன ஆதிக்கம், 4G மோகம், பட்ஜெட் அதிகம்... இந்தியர்களின் ஸ்மார்ட்போன் ரிப்போர்ட்! #Q1

ந்திய ஸ்மார்ட்போன் சந்தை மிகப்பெரியது மட்டுமல்ல முக்கியமானதும் கூட! இதைக் குறிவைத்தே பல நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களில் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்துகின்றன. ஜியோ ஏற்படுத்திய 4G அலை, கடந்த ஆண்டு இறுதியில் வெளியான பணமதிப்பிழப்பு அறிவிப்பு, 'மேக் இன் இந்தியா' கொள்கை போன்றவை இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் எந்த அளவுக்குத் தாக்கம் ஏற்படுத்தியிருக்கின்றன என்பதைப் பார்ப்போமா?

ஸ்மார்ட்போன் ரிப்போர்ட்

வெறும் விற்பனையோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், உற்பத்தியும் இந்தியாவில் நடந்தால் வேலை வாய்ப்புகளும், பொருளாதாரமும் உயரும் என்ற நோக்கத்தோடு 'மேக் இன் இந்தியா' கொள்கையை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. பல நிறுவனங்களையும் இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கும்படி மத்திய அரசு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. ஐபோன் கூட விரைவில் இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்குவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில், 2017-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீன நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன என்பது தெரியவந்துள்ளது.

2017-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் நடைபெற்ற ஸ்மார்ட்போன் விற்பனை குறித்த தகவல்களை, இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேசன் (International Data Corporation) வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல் காலாண்டில் இந்தியாவில் 2.7 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளன. அதில், 51.4 சதவிகித விற்பனையை சீன மொபைல் நிறுவனங்களே மேற்கொண்டுள்ளன. ஜியோமி, விவோ, லெனோவா, ஒப்போ போன்ற சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள்தான் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன. தென் கொரிய நிறுவனமான சாம்சங், விற்பனையில் முதல் இடத்தைப் பிடித்தாலும், அதற்கு அடுத்த இடங்களை சீன நிறுவனங்களே ஆக்கிரமித்திருக்கின்றன.

4G

ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப்பின் இந்தியாவில் 4G நெட்வொர்க் சேவையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே! 4G நெட்வொர்க் வளர்ச்சி அடைந்துள்ளதால், 4G சிம் பயன்படுத்தக்கூடிய மொபைல்களைத் தேடி வாங்கும் ஆர்வம் அனைவரிடமும் அதிகரித்திருக்கிறது. இந்த வருடத்தின் முதல் காலாண்டில் நடந்த ஸ்மார்ட்போன் விற்பனையில், 94.5 சதவிகித அளவுக்கு 4G ஸ்மார்ட்போன்கள் தான் விற்பனையாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போன் வாங்கும்போது கவனிக்கும் முக்கியமான விஷயங்களில் கேமராவும் ஒன்றாக மாறியுள்ளது. மெகா பிக்சல் அதிகமான கேமராக்களுக்கே அதிகம் முக்கியத்துவம் தருகின்றனர். முதல் காலாண்டு விற்பனையில், பத்தில் ஐந்து ஸ்மார்ட்போன்கள் 13 மெகா பிக்சல் மற்றும் அதற்கும் அதிகமான கேமரா திறன் கொண்டவையாக இருந்திருக்கின்றன.

சராசரி விற்பனை விலையும் முந்தைய ஆண்டின் முதல் காலாண்டைவிட அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 8,400 ரூபாய் என்றிருந்த சராசரி விற்பனை விலை, தற்போது சுமார் 10,000 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. விலை கொஞ்சம் அதிகமானாலும் சரி, தரமான மொபைல் வாங்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்திருக்கிறது.

MI Note 4

ஜியோமி நிறுவனம் அறிமுகப்படுத்திய ரெட்மி சீரிஸ் விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது. குறைந்த விலையில் அதிக வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன் என்பதால், ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. ரெட்மி நோட் 4 தான், முதல் காலாண்டில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இணையத்தின் மூலம் நேரடியாக ஸ்மார்ட்போன் விற்பனை செய்வதும் அதிகரித்திருக்கிறது. ரெட்மி நோட் 4 உள்ளிட்ட பல மொபைல் மாடல்கள், ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற ஆன்லைன் விற்பனை மையங்களில் தான் நேரடியாக விற்பனை செய்யப்பட்டன. மேலும், சில மொபைல் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது இணையதளத்திலிருந்தும் நேரடியாக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்தன. எதிர்காலத்தில் இணையத்தின் மூலம் நடக்கும் நேரடி விற்பனை இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்த விலையில் நிறைந்த வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகின்றன. 4G சிம் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட்போன் தான் இளைஞர்களின் முதல் சாய்ஸாக இருக்கிறது. மெயின் கேமரா 8 மெகா பிக்சல் என்றால் கூட வேறு சாய்ஸைத் தேடி நகரத் தொடங்கிவிடுகின்றனர். 4G பயன்படுத்துவதால் அதிக நேரம் சார்ஜ் இருக்க வேண்டுமென்பதற்காக, பேட்டரி திறன் அதிகம் கொண்ட ஸ்மார்ட்போன்களை அதிகம் தேட ஆரம்பித்துவிட்டனர். 

மொபைல் கம்பெனீஸ்...நோட் பண்ணுங்கப்பா...!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்