வெளியிடப்பட்ட நேரம்: 11:02 (20/05/2017)

கடைசி தொடர்பு:11:02 (20/05/2017)

ஃபைல் அளவைக் குறைக்க, விளம்பரமில்லா பிரின்ட், தற்காலிக மின்னஞ்சல்... உதவும் தளங்கள்! #UsefulWebsites

இணையதளங்கள்

தினமும் நிறைய இணையதளங்களில் உலவுகிறோம். ஆனால், தேவையான, முக்கியமான விஷயங்களைக் கொடுக்கும் பல இணையதளங்கள் எப்போதும் நம் கண்களில்படுவதே இல்லை. அப்படிப்பட்ட இணையதளங்களின் தொகுப்பு இது.

Mailinator.com
எந்த இணையதளத்துக்குச் சென்றாலும் நமது மின்னஞ்சல் முகவரியைத்தான் முதலில் கேட்பார்கள். கொடுத்தால், விளம்பர மெயில்களாக அனுப்புவார்கள். இதற்குத் தீர்வு தருகிறது Mailinator.com. இத்தளத்தில் உருவாக்கப்படும் மின்னஞ்சல் முகவரிக்கு ஆயுள் சில மணி நேரங்களே. ஆக்டிவேஷன் மெயில் வந்ததும், தானாக இந்த மின்னஞ்சல் முகவரி டெலீட் ஆகிவிடும். இதன் மூலம் மெயில் ரிசீவ் செய்யலாம். ஆனால், அனுப்ப முடியாது.

disposablewebpage.com
மின்னஞ்சல் போல சில சமயம் தற்காலிக இணையதளமும் நமக்குத் தேவைப்படலாம். பிறந்த நாள் பார்ட்டி, திருமணம் போன்ற விஷயங்களுக்காக. இந்தத் தளத்தில் கோடிங் எதுவும் தெரியாமலே எளிதில் ஓர் இணையதளத்தை நாமே உருவாக்கலாம். 90 நாள்களில் சிட்டி ரோபோ போல தானே அந்த இணையதளம் அழிந்துவிடும்.

privnote.com
சில விஷயங்களை அவசரத்துக்குச் சிலருடன் ஷேர் செய்வோம். ஆனால், அவை எங்கும் பதிவாகக் கூடாது என நினைப்போம். உதாரணமாக ஏடிஎம் பின், பாஸ்வேர்டு , காதல் கடிதம் போன்றவை. அதற்கு உதவும் தளம் இது. இதன் மூலம் அனுப்பப்படும் டெக்ஸ்ட் படிக்கப்பட்டதும் தானாக டெலீட் ஆகிவிடும். அல்லது, டைம் பாம் போல நேரம் செட் செய்து டெலீட் செய்யலாம்.

simplynoise.com
சிலருக்கு டிரெயின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தால்தான் வேலை ஓடும். சில குழந்தைகளுக்குப் பறவைச் சத்தம் கேட்டால்தான் தூக்கம் வரும். நமக்கு என்ன தேவையோ அந்தச் சத்தத்தை இலவசமாகத் தருகிறது இந்த வெப்சைட்.

manualslib.com
எந்தப் பொருள் வாங்கினாலும் உள்ளே ஒரு மேனுவல் இருக்கும். ஆனால், அவற்றை நாம் பத்திரப்படுத்தி வைப்பதே இல்லை. ஏதேனும் ஒரு பிரச்னை வரும்போதுதான் அதைத் தேடுவோம். கிடைக்காது. இந்தத் தளத்தில் கிட்டத்தட்ட அனைத்து மேனுவல்களையும் சேமித்து வைத்திருக்கிறார்கள். சிம்பிளான சர்ச் பாக்ஸ் மூலம் வேண்டிய மேனுவலை எளிதில் கண்டறியலாம்.

newsmap.jp
உலகில் தினமும் ஏகப்பட்ட விஷயங்கள் நடக்கின்றன. எல்லாச் செய்திகளையும் ஒரே இடத்தில் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? அதைத்தான் செய்கிறது இந்த இணையதளம். விதவிதமான கேட்டகிரி. வேற வேற நிறங்கள். செய்தியின் முக்கியத்துவம் பொறுத்து பாக்ஸின் அளவு அதிகரிக்கும். பிடிக்காத கேட்டகிரிகளை நீக்கவும் முடியும்.

AccountKiller.com
சமூக வலைதளங்களை விட்டு விலகுவது சாதாரண விஷயமல்ல. நாமே அக்கவுன்ட்டை மூடினாலும் விட மாட்டார்கள். இந்தத் தளத்துக்குச் சென்றால் எல்லா சமூக வலைதளங்களைப் பற்றியும் எடுத்து சொல்கிறார்கள். வெள்ளை நிறம் என்றால் அக்கவுன்ட்டை மூடுவது எளிது. க்ரே நிறமென்றால் சற்று சிரமம், கருப்பு என்றால் முடியவே முடியாது. அந்தந்த பாக்ஸை க்ளிக்கினால் அக்கவுன்ட்டை மூடுவது எப்படி என்பதை லிங்க் உடன் சொல்லும்

twofoods.com
எதைச் சாப்பிடுவது, எதை விடுவது என்பதுதான் இந்த நூற்றாண்டில் பெரும்பான்மையானவருக்குத் தெரிய வேண்டிய ரகசியம். இந்தத் தளத்தில் உணவின் பெயரைச் சொன்னால், அதன் கலோரிகளையும், மூலப்பொருள்களையும் சொல்லிவிடுகிறது. இரண்டாவது உணவின் பெயரைச் சொன்னால் இரண்டையும் ஒப்பிட்டு ரிப்போர்ட்டே தந்துவிடுகிறது.

இணையதளம் தளங்கள்

zamzar.com
ஃபைல் டைப்பை மாற்றுவதுதான் டிஜிட்டல் உலகில் பெரிய சவால். அதை அசால்ட்டாக செய்கிறது இந்தத் தளம். எந்த ஃபைலையும் அப்லோடு செய்து, நாம் விரும்பிய ஃபார்மட்டைத் தேர்வு செய்தால் போதும். 50 எம்.பி வரை மட்டுமே இலவசம். அதை விட பெரிய சைஸ் என்றால் காசு கேட்பார்கள்.

savr.com
உங்கள் மொபைலுக்குக் குறுஞ்செய்தி மூலம் ஒரு டெக்ஸ்ட் வருகிறது. அதை லேப்டாப்புக்கு அனுப்ப வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள்? உங்களுக்கு நீங்களே மின்னஞ்சல் அனுப்புவீர்கள். அல்லது ஃபேஸ்புக் மெஸெஜ் அனுப்பிக்கொள்வீர்கள். இந்தச் சுத்து வேலையெல்லாம் வேணாம். இந்தத் தளத்தைத் திறந்து பாக்ஸில் பேஸ்ட் செய்தால் போதும். லேப்டாப்பில் இதே தளத்தைத் திறந்தால், பாக்ஸில் உங்கள் டெக்ஸ்ட் தயாராக இருக்கும்.

Printfriendly.com
இணையதளத்திலிருந்து நேராக பிரின்ட் கொடுப்பது போன்ற கொடுமை எதுவுமில்லை. இருக்கும் அனைத்து விளம்பரங்களும் சேர்ந்து வரும். அந்தக் கொடுமைக்கு விடிவு இந்தத் தளத்திலிருக்கிறது. பிரின்ட் கொடுக்க வேண்டிய URL-ஐ இங்கே கொடுத்தால் போதும். தேவையானவற்ற மட்டும் அழகாய் பிரித்து பிரின்ட் கொடுத்துவிடும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்