நம்புங்க... ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த கண்டுபிடிப்பு பீட்சா பாக்ஸ்..! #ApplePizzabox

ஆப்பிள் பீட்சா பாக்ஸ்

ஐபோன், மேக்புக், ஐபாட் என ஆப்பிளின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் டெக் வரலாற்றில் தவிர்க்க முடியாத மாற்றத்தை உருவாக்கியிருக்கின்றன. அடுத்த தயாரிப்பில் புதிதாக என்ன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தப்போகிறதோ என்று உலகமே காத்துக்கொண்டிருக்க ஆப்பிள் சமீபத்தில் காப்புரிமை பெற்றிருக்கும் பொருளை சொன்னால் நம்புவதற்கு கொஞ்சம் கடினம். காரணம் அது ஒரு பீட்சா பாக்ஸ்.

சாதாரணமாக பாக்ஸில் இருக்கும் சூடான பீட்சாவில் உள்ள பிரச்சனை என்னவென்றால் சாப்பிடுவதற்கு கொஞ்சம் தாமதமானால் நீர் ஆவியாகி பீட்சா மீதே விழுந்துவிடும்.அதன் வடிவம் மாறிவிடும். மேலும் அதன் சுவையும் கெட்டுவிடும். அந்தப் பிரச்சினை இந்த ஆப்பிளின் பீட்சா பாக்ஸில் கிடையாதாம். எவ்வளவு நேரம் வைத்திருந்தாலும் பீட்சா அப்படியே இருக்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

சரி ஆப்பிள் எதுக்கு இத கண்டுபிடிக்கனும்? ஏதாவது ஒரு விஷயம் இருக்கனுமே என்கிறீர்களா? இருக்குது ஆப்பிள் அலுவலகத்தில் வேலை பாக்குறவங்க கேன்டீன்ல இருந்து பீட்சா வாங்கிட்டு வந்து வேலையெல்லாம் முடிச்சிட்டு சாப்பிடலாம்னு பார்த்தா... அவ்ளோதான். அது பீட்சா மாதிரியே இல்லைனு புகார் கூற அதை சரி  செய்வதற்காகவே புதிய வடிவிலான பீட்சா பாக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டதாம். கலிபோர்னியாவில் புதிதாக கட்டப்பட்ட ஆப்பிள் பார்க் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் அனைவருக்கும் இந்த பீட்சா பாக்ஸை வழங்கப்போகிறார்கள்.

ஆப்பிள் நிறுவனத்தில் புதுப்புது தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க மட்டுமில்லாமல் உணவுகளை தயாரிக்க, உணவில் ஏற்படும் குறைகளை களைவதற்கு, புதிய உணவு வகைகளை கண்டுபிடித்து அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு வழங்க என ஒரு தனி டீமே இயங்குகிறது. நம்ம ஊர் கேன்டீன்ல இன்னமும் வடையும், பஜ்ஜியும் தான் கிடைக்குது. நாம இன்னும்  முன்னேறனும் பாஸ்..

பீட்ஸா

இது மட்டுமில்லாமல் கண்ணாடி படிக்கட்டுகள், ஐபாட் ஸ்டேன்ட், மேஜிக் கிளவுஸ், பேப்பர் பேக் என பட்டியல் நீள்கிறது. இவையெல்லாம் வெளி உலகிற்கு அறிமுகம் ஆகாமல் ஆப்பிள் காப்புரிமை வாங்கி வைத்திருக்கும் கண்டுபிடிப்புகள். ஆப்பிள் மொபைல்கள் பேக்கேஜிங் செய்யப்படும் முறைக்கு கூட ஆப்பிள் காப்புரிமை வாங்கி வைத்திருக்கின்றதாம்.

சாம்சங் நிறுவனத்தோடும் இதர நிறுவனங்களோடும் பிரச்சினைகள் வந்த பின்னர் காப்புரிமை விஷயத்தில் ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்கிறது ஆப்பிள் நிறுவனம். அதனாலேயே எதைக் கண்டுபிடித்தாலும் உடனே காப்புரிமை வாங்க விடுகிறது. அது சாதாரண பீட்சா பாக்ஸாக இருந்தாலும்.

ஆப்பிளின் புதிய அலுவலகம்:

எப்படி ஆப்பிளின் கேட்ஜெட்ஸில், ஒவ்வொரு பகுதியும், பார்த்துப் பார்த்து துல்லியமாக வடிவமைக்கப்படுகிறதோ, அதைப் போலவே புதிய ஆப்பிள் கட்டடத்தின் ஒவ்வொரு பகுதியும் இழைக்கப்படுகிறது. இந்தக் கட்டுமானப் பணியில் மட்டும் சுமார் 13,000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் சுற்றளவு சுமார் 1 மைல். இந்த வளாகத்தில் மொத்தம் 8 கட்டடங்கள் அமையவுள்ளன. 1000 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியமும் இங்கே உருவாகி வருகிறது. இந்த அலுவலகம் திறந்தபின்பு ஆப்பிளின் கீ-நோட் நிகழ்ச்சிகள் இங்கேயே நடக்கவும் வாய்ப்பு அதிகம். ஏற்கனவே கூறியபடி இந்த அலுவலகத்தின் மொத்த மின்சக்தியும் மரபுசாரா ஆற்றல் மூலமே உற்பத்தி செய்யப்படுகிறது. வெறும் அலுவலகமாக மட்டும் காட்சியளிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அலுவலகத்தை சுற்றிலும் 80% அளவுக்கு மரங்கள் நடப்படுகின்றன. இதனால் வெறும் கட்டடமாக இல்லாமல், பச்சைப் பசேல் என குட்டி வனம் போல காட்சியளிக்க உள்ளது இந்த டெக் கேம்பஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!