வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (26/05/2017)

கடைசி தொடர்பு:14:55 (26/05/2017)

இந்தியா காலாவை மட்டுமா தேடியது..?! இந்தச் சில குறியீடுகளையும்தான்! #GoogleTrends

காலா

ஒரு பிரபல நடிகர் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறது என்றால் அதைப் பற்றி அடுத்த நிமிடமே ஆன்லைன் பேசத் துவங்கிவிடும். விவேகம் டீஸராக இருந்தாலும் சரி, விஜய் 61-ல் விஜய் எப்படி இருப்பார் என்ற புகைப்படமாக இருந்தாலும் சரி ஆன்லைன் சட்டென்று ட்ரெண்டாகிவிடும். இந்த ட்ரெண்டிங் யுத்தத்தில் ரஜினிகாந்த கிங் மேக்கர். தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தின் பெயர் காலா என்று நேற்று அறிவிப்பு வெளியானது. உடனே பற்றிக்கொண்டது இணையம். 

காலா படத்தின் பெயரை காலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரிலீஸ் செய்தார் தனுஷ். பின்னர் மாலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்தார். ரஜினி படம் ரஜினியைதான் இந்தியா தேடும் என்றால் இல்லை. இதில் ரஜினியைத் தாண்டி பல விஷயங்களை இந்தியாவைத் தேடவைத்துள்ளார் ரஞ்சித்.

நேற்றைய கூகுள் இணைய தேடலில் ''காலா'' என்ற வார்த்தையைதான் அதிகம் தேடியிருப்பார்கள் என்று பார்த்தால் காலையில்தான் காலா தேடல் அதிகமாக இருந்துள்ளது. மாலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காலா தேடலைச் சட்டென்று மாற்றியுள்ளது. காலா போஸ்டரில் தாராவி பகுதியின் பின்னணி இடம் பெற்றிருக்கும், ரஜினி கருப்புச் சட்டை அணிந்திருக்கிறார். அவரது கார் நம்பர் MH 01 BR 1956 எனப் பல்வேறு குறியீடுகளைக் கொட்டிவந்தனர் நெட்டிசன்கள்.

இணையத் தேடல் வித்தியாசமான தகவல்களைத் தந்தது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மட்டுமே காலா தேடல் அதிகமாக இருந்தது. அதைத் தாண்டி இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் இந்தப் போஸ்டரைப் பார்த்து அம்பேத்காரைத் தேடத் துவங்கிவிட்டன. BR என குறிப்பிடப்பட்டிருக்கும்  வார்த்தை அம்பேத்காரைக் குறிக்கிறது. இந்தக் குறியீடுதான் அம்பேத்காரைத் தேடக் காரணம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

அடுத்ததாக 1956 என்ற வண்டியின் எண்ணை அதிகமாக தேடியுள்ளார்கள் அதில் 1956ம் ஆண்டு இயற்றப்பட்ட சாதி தொடர்பான சட்டங்கள் பற்றியும், அம்பேத்கார் இறந்த வருடம் என்ற தகவலையும் தேடியுள்ளனர். இவற்றுக்கும் மேலாக இந்தக் கதை ஹாஜித் மஸ்தான் என்ற மஹாராஷ்ட்ராவில் வாழ்ந்த கேங்ஸ்டர் பற்றியது என்ற தகவல் வெளியானாதால் அவரையும் அதிகம் தேடியுள்ளனர். 

ஒரு படம், அதன் ஃபர்ஸ்ட் லுக் என்பதையெல்லாம் தாண்டி இவ்வளவு விஷயங்களைத் தேடும் அளவுக்கு இன்றைய இணைய உலகின் தேடல் உள்ளது. ரஞ்சித் படங்களும், குறியீடுகளும் சேர்ந்தேதான் இருக்கும் என்ற நெட் ரவுண்ட்ஸை உண்மையாலுமே தேடி நிருபித்திருக்கிறார்கள் நெட்டிசன்கள். 

ஃபர்ஸ்ட் லுக்தான் இது... இன்னும் டீஸர், ட்ரைலர், ஆடியோ லான்ச், படம் ரிலீஸானால் கூகுள் என்ன ஆகுமோ?


டிரெண்டிங் @ விகடன்