வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (09/06/2017)

கடைசி தொடர்பு:15:37 (09/06/2017)

IMDB... Rotten tomatoes... உலக சினிமா விமர்சன தளங்கள் இப்படித்தான் செயல்படுகின்றன!

சினிமா

ஹாலிவுட் ரசிகர்கள் ஒரு படம் எப்படி இருக்கிறது என்பதை சில இணையதளங்களை வைத்தே கணக்கிடுவர். அவற்றுள் முக்கியமானவை ஐ.எம்.டி.பி மற்றும் ராட்டன் டொமாடோ. இரண்டுக்குமே அதற்கென ஒரு ரசிகர்கூட்டம் உண்டு. ஒரு கூட்டம் ஐ.எம்.டி.பி ரேட்டிங் பார்த்து தியேட்டருக்கு போகும் என்றால் மற்றொன்று ராட்டன் டொமாடோ ரேட்டிங் பார்த்து தியேட்டருக்குச் செல்லும். ஆனால் உண்மையில் எதை நம்புவது, எது துல்லியமாக இருக்கும் என்பதில் என்றுமே ரசிகர்களுக்குக் குழப்பம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அதைப்பற்றிய முடிவிற்கு வருவதற்குமுன் முதலில் எப்படி இரு ரேட்டிங் சிஸ்டமும் வேலைசெய்கிறது என்று பார்ப்போம். 

ஐ.எம்.டி.பி முழுமையும் ரசிகர்களின் கருத்தைக் கணக்கில் கொண்டு இயங்கும் ரேட்டிங் சிஸ்டம். அதாவது ரசிகர்கள் ஐ.எம்.டி.பி அக்கௌன்ட் ஒன்று ஆரம்பிக்கவேண்டும் பின் படங்களுக்கு 10 மதிப்பெண்களுக்கு ரேட்டிங் தரலாம். ஆனால், இதில் ஒரு பிரச்னை உண்டு. ரசிகர்கள் வேண்டுமென்றே ஒரு படத்துக்கு நல்ல ரேட்டிங்கும் கொடுப்பர். மோசமான ரேட்டிங்கும் கொடுப்பர். உதாரணத்திற்கு நம்ம படங்களை எடுத்துக்கொள்வோமே. அஜித் படத்துக்கு அவர் ரசிகர்கள் அதிகமாகவும் விஜய் ரசிகர்கள் கம்மியாகவும்தான் ரேட்டிங் கொடுப்பர். இதேதான் விஜய் படத்துக்கும் நடக்கும். இதற்கு ஹாலிவுட் விதிவிலக்கல்ல. இதனால் உண்மையான மதிப்பை விட ரேட்டிங் மாறிப்போக வாய்ப்புள்ளது. படம் பார்க்காமலேயே ரேட்டிங் கொடுக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் இதை சமாளிக்க ஐஎம்டிபி ஒரு வழிமுறையைக் கடைபிடிக்கிறது. 

அந்த ஃபார்முலாவை விளக்கினால் இன்னும் குழப்பம்தான் வரும் என்பதால் அந்த முறையின் அடிப்படை கொள்கையை மட்டும் பார்ப்போம். உண்மையில் ரேட்டிங் சாதாரணமான முறையில் கணக்கிடப்படாது. ஒவ்வொரு ரேட்டிங்கிற்கும் ஒரு அளவுகோல் கொடுக்கப்பட்டபின்தான் ஒட்டுமொத்த சராசரி கணக்கிடப்படும். அதாவது முந்தைய ரேட்டிங்களில் சராசரிக்கு நெருங்கிய ரேட்டிங் கொடுத்தவரின் ரேட்டிங்கிற்கு முன்னுரிமை தரப்படும். இதனால் வேண்டுமென்றே ரேட்டிங்கை கூட்டிக் குறைத்து போடுபவர்களினால் பெரியபாதிப்பு வராது. இதற்கு 'பேயெசியன் எஸ்டிமேட்'(bayesian estimate) என்று பெயர். இதுவரை ஹாலிவுட் படங்களில் 9க்கு மேல் ஐ.எம்.டி.பி ரேட்டிங் வைத்திருப்பது மூன்றே படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

ராட்டன் டொமாடோவோ இதற்கு நேரெதிர். இது மொத்தமாகவே விமர்சகர்கள் கருத்தைக் கொண்டு இயங்கும் ரேட்டிங் சிஸ்டம். அதாவது படத்துக்குச் செல்லும் சாமானியனின் கருத்து எடுத்துக்கொள்ளப்படாது. விமர்சகர்கள் ராட்டன் டொமாடோவில் பதிவுசெய்யவேண்டும்.  இதில் இணைவதற்கு சிலதகுதிகளும் எதிர்பார்க்கப்படும். அதில் ஒரு முன்னணி ஊடகத்தில் பணியாற்றியிருக்க வேண்டியதும் ஒன்று. இதுவரை வெறும் நூறுகளில்தான் பதிவுசெய்த விமர்சகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு விமர்சகர் படம் பிடித்திருந்தால் 60%க்கு மேல் ரேட்டிங் வழங்குவார். இதை 'ப்ரஷ்'(Fresh)  ரேட்டிங் என்று அழைப்பர். இல்லையென்றால் விமர்சகர் 'ரொட்டேன்'(அழுகியது என்று அர்த்தம்) ரேட்டிங் கொடுத்தாக அர்த்தம். மொத்தத்தில் எத்தனை சதவிகிதம் விமர்சகர்கள் 'ப்ரஷ்' ரேட்டிங் கொடுத்தார்கள் என்பதே ராட்டன் டொமாடோ அளவுகோல். அதாவது 100 விமர்சகர்கள் பார்த்து அதில் 50 பேர் 'ப்ரஷ் ரேட்டிங் கொடுத்தால் ராட்டன் டொமாடோ ரேட்டிங் 50% இதுவே ராட்டன் டொமாடோ கணக்கு. ராட்டன் டொமாடோ பெயரளவில் ஆடியன்ஸ் ஸ்கோர் என்ற ஒன்றை சேர்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 இப்போது எதற்கு நம்பகத்தன்மை இருக்கிறது என்று பார்க்கலாம். உண்மையில் இதுதான் சரி என்று எதையும் முடிவுசெய்ய முடியாது. ஆனால் மக்களின் பல்ஸ் பார்க்க வேண்டும் என்றால் ஐ.எம்.டி.பி தான் பெஸ்ட். இல்லை சினிமா விமர்சகர்கள் கருத்துதான் முக்கியம் என்றால் ராட்டன் டொமாடோதான். ஆனால் விமர்சகர்கள்தான் சரியாக இருக்கும் என்று சொல்லமுடியாது. சொந்த விருப்பு வெறுப்பு விமர்சகர்களுக்கும் இருக்கலாம்தானே. சில நேரங்களில் நம்மூர் மக்கள் சொல்வது போல் விமர்சகர்கள் காசு வாங்கிய சம்பவங்களும் ஹாலிவுட்டில் நடந்தேறியுள்ளது. மேலும் விமர்சகர் கருத்துக்கும் மக்கள் கருத்துக்கும் வேறுபாடு இருந்துகொண்டேதான் இருக்கிறது. ராட்டன் டொமாடோவில் 82% பெற்று ஐ.எம்.டி.பியில் 3.3 வாங்கிய ('ஷார்க்நாடோ'  என்ற படம்) படங்களும் உள்ளன. 

மேலும் ஐ.எம்.டி.பி அனைத்து மொழிபடங்களுக்கும் வந்துவிட்ட நிலையில் ராட்டன் டொமாடோ ஹாலிவுட் தாண்டவில்லை. 

எனவே எதை நம்புவது என்பது அவரவர் விருப்பம். இரண்டு ரேட்டிங்கையும் ஒன்று சேர்த்து பார்த்தால் இன்னும் ஒரு தெளிவான முடிவுக்கு ரசிகன் ஒருவன் வரலாம் என்பதே உண்மை. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்