டிராஃபிக்கில் சிக்கிய ஆம்புலன்ஸுக்கு ப்ளூடூத் மூலம் வழிகாட்டலாம்! #VikatanExclusive

டிராஃபிக்

சென்னை சாலைகள் காலை நேரங்களில் ஹேங் ஆன ஆண்ட்ராய்டு மொபைல் போல ஆகிவிடும். இன்று, டிராஃபிக் இன்னும் மோசம். சைதாப்பேட்டையில் இருந்து அண்ணா மேம்பாலம் வருவதற்கு இன்ச் இன்சாக நகர வேண்டியிருந்தது. அதற்கு நடுவில் மொத்தம் 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கடந்துச் சென்றன. 

சினிமாவில் சொல்வதுபோல் யாரும் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் நிற்பதாக தெரியவில்லை. அவர்களால் நகர முடிவதில்லை என்பதே யதார்த்தம். ஒவ்வொரு சிக்னலிலும் 100 மீட்டருக்கு வாகனங்கள் நெருக்கமாக நிற்கும்போது, ஆம்புலன்ஸ் மட்டும் இல்லை; ஆண்டவனே வந்தாலும் அதுதான் நிலைமை. நிச்சயம் இந்த டிராஃபிக்கால் 15 நிமிடங்களாவது தாமதமாகத்தான் மருத்துவமனையை சென்று சேர்ந்திருக்கும் ஆம்புலன்ஸ் வாகனங்கள். அப்போதுதான் இந்த யோசனை தோன்றியது.

சைதாபேட்டை சிக்னலில் ஒரு டிராஃபிக் போலீஸ் நிற்கிறார். அவர், அடுத்த சிக்னலில் இருப்பவரிடம் ஆம்புலன்ஸ் வருகிறது என்ற செய்தியைச் சொன்னாலும், அவரால் ஒன்றும் பெரிதாக செய்துவிட முடியாது. ஆனால், வழி நெடுக இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு பின்னால் ஆம்புலன்ஸ் வருகிறது என்பது தெரிந்தால், அவர்கள் ஒதுங்க முயற்சி செய்யலாம். போதுமான அவகாசம் இருந்தால், அவர்கள் வழிவிடுவார்கள் என்பதுதான் உண்மை.

ஒரு சின்ன ப்ளூடூத் இதைச் செய்துவிடும். சாலையின் நடுவில் மின்விளக்கு கம்பங்கள் வரிசையாக நிற்கின்றன. அவற்றில் ஒலி அல்லது ஒளி எழுப்பும் கருவிகள் பொருத்தலாம். 100 மீட்டருக்கு ஒன்று என வைத்துக்கொள்ளலாம். ஆம்புலன்ஸ் ஒன்று தனது சிக்னலை கடந்தால், அங்கிருக்கும் டிராஃபிக் போலீஸ் இதை அலெர்ட் செய்யலாம். அடுத்த சிக்னல் வரை இருக்கும் மின் விளக்கு கம்பங்கள் இந்தச் செய்தியை வாகன ஓட்டிகளுக்கு சொல்லிவிடும். அப்போது வாகனங்கள் சாலையின் ஒரண்டு ஓரங்களுக்கும் விலகி, நடுவே இருக்கும் லேன்(lane)-ஐ ஆம்புலன்ஸுக்கு என ஒதுக்கலாம். ஆம்புலன்ஸ் கடந்ததும், சகஜ நிலைமைக்கு திரும்பலாம். ஒரு வேளை ஆள் இல்லாத சிக்னல் என்றால், ஆம்புலன்ஸிலே இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்களை ஆக்டிவேட் செய்ய வழி செய்யலாம். கிளாஸ் 2 வகை ப்ளூடூத் டெக்னாலஜி 1.7 கி.மீ வரை வேலை செய்யும். 

இதை ஆம்புலன்ஸ்க்கு மட்டும் இல்லாமல், ஸ்பெஷல் கான்வாய் மற்றும் அவசர நிலையில் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் பயன்படுத்தலாம். 

இதற்கு ஆகும் செலவும் குறைவுதான். பிற நாடுகளில் அவசர நிலைகளில் வாகன ஓட்டிகள் ஒழுக்கமாக செயல்படுவதை சமூக வலைதளம் மற்றும் வாட்ஸ்அப் ஃபார்வர்டு வீடியோக்களில் நாம் பார்க்கிறோம். அதற்கு முக்கிய காரணம், ஒழுங்காக பயணம் செய்ய விரும்பும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்றதை அந்த அரசாங்கங்கள் செய்திருக்கும். இங்கேயும், டெக்னாலஜி உதவியுடன் இது போன்ற வசதிகளை செய்தால், நிச்சயம் கணிசமான ஆள்கள் விதிகளை பின்பற்றுவார்கள். மெல்ல, மெல்ல இதுவே நமது பழக்கமாக மாறலாம். சாலை எங்கும் குண்டும் குழியுமாக வைத்துக்கொண்டு ஹெல்மெட் ஏன் போடவில்லை எனக் கேட்டால் தான் அம்பிக்கள் அந்நியன்கள் ஆகிறார்கள். வளர்ந்த நாடுகளில் ட்ரோன் மூலம் பறக்கும் ஆம்புலன்ஸ்களே வரவிருக்கின்றன.

டிராஃபிக்

இன்னொரு சந்தேகமும் எழுவதுண்டு. உயிர் போகும் அவசரத்தில் இருப்பவர்களை ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனைக்கு ஏற்றிச் செல்லும் நேரத்தில், அருகில் இருக்கும் மருத்துவமனையில் முதல் உதவி தந்துவிட்டு, அதன் பின் அரசு மருத்துமனைகளுக்கு எடுத்துச் செல்லலாம். வரி விலக்கு போல பல சலுகைகளை பெற்று இயங்கும் தனியார் மருத்துவமனைகள் இதைச் சேவையாக செய்தே ஆக வேண்டும் என அரசு உத்தரவு போடலாம். ஒரு ஆட்டோக்காரரே பிரசவத்துக்கு இலவசம் என்னும் போது, கோடிகளில் புரளும் மருத்துவமனைகள் இந்த உதவியையாவது செய்யக்கூடாதா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!