இந்த 8 விஷயங்களை உங்கள் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து டெலீட் செய்துவிடுங்கள்! #SafeBrowsing | You must delete these 8 things on your facebook page

வெளியிடப்பட்ட நேரம்: 14:36 (27/06/2017)

கடைசி தொடர்பு:14:36 (27/06/2017)

இந்த 8 விஷயங்களை உங்கள் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து டெலீட் செய்துவிடுங்கள்! #SafeBrowsing

ஃபேஸ்புக்

உலகைச் சமாளிக்க ஒரே ஒரு தம்ப் ரூல்தான். எவையெல்லாம் பலமிக்க விஷயங்களாக இருக்கின்றனவோ அவற்றிடம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இன்றைய உலகின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த ஒரு விஷயம் ஃபேஸ்புக். நாம் ஃபேஸ்புக்கில் எந்த அளவுக்கு கவனத்துடன் இருக்கிறோம்? நமது ப்ரைவசி விஷயத்தில் ஃபேஸ்புக் அதிக அக்கறைக் காட்டுவதாகச் சொல்கிறது. இருந்தாலும், அங்கே பகிரக்கூடாத எத்தனையோ விஷயங்களை நாம் பகிர்ந்துகொண்டுதான் இருக்கிறோம்.

"Ask me anything" போன்ற விஷயங்களை நம் டைம்லைனில் அடிக்கடி பார்க்க முடியும். அதில் ஏராளமான பேரை டேக் வேறு செய்திருப்பார்கள். நமது செல்லப்பெயரில் தொடங்கி செல்லப்பிராணிகள் பெயர் வரை அனைத்தும் இருக்கும். இந்தத் தகவல்களை வைத்தே நிறைய பேரின் பாஸ்வேர்டை என்னால் கண்டுபிடிக்க முடியும் என்கிறார் ஒரு ஹேக்கர். உண்மைதானே? நமது பாஸ்வேர்டில் நாம் வைத்திருக்கும் விஷயங்களை நாம் ஃபேஸ்புக்கில் எந்த வகையிலாவது பகிர்ந்துகொண்டுதானே இருக்கிறோம்?

அப்படியென்றால், நமது ப்ரைவசி ஃபேஸ்புக்கில் எந்த அளவுக்கு இருக்கிறது? ஃபேஸ்புக்கில் பகிரக்கூடாத விஷயம் என ஏதும் இருக்கிறதா? போன்ற கேள்விகள் நமக்கு எழலாம். சில அடிப்படை விஷயங்களை இதற்குப் பதிலாகச் சொல்லலாம். கீழ்க்கண்ட விஷயங்களை ஃபேஸ்புக்கில் பகிராமல் இருக்க வேண்டும். அப்படி ஏற்கெனவே செய்திருந்தால், அவற்றை டெலீட் செய்யலாம். “எனக்கு ஃபேஸ்புக் அத்துப்படி. என் சேஃப்ட்டியை நான் பார்த்துப்பேன்” என்பவர்கள் வேற ரகம். இணையத்தில் என்ன நடக்குதென்றே தெரியாத ஆட்கள் இவற்றை உடனடியாக டெலீட் செய்வது நல்லது.

1) பிறந்த நாள்:

Protected Pdf வருமா உங்களுக்கு? உங்கள் பே ஸ்லிப், வங்கி ஸ்டேட்மென்ட்போல பல விஷயங்களுக்கு உங்கள் பிறந்த நாள்தான் பாஸ்வேர்டாக இருக்கும். அதைப் பொதுவில் வைப்பது சரியா? முதலில் அதை டெலீட் செய்யுங்கள். அல்லது, பிறந்த வருடத்தையாவது மாற்றி வையுங்கள்.

2) மொபைல் நம்பர்:

நீங்கள் செய்யும் தொழிலுக்குத் தேவையென்றால், உங்கள் எண்ணை ஃபேஸ்புக்கில் பகிரலாம். பெர்சனல் எண்ணை பகிர்வது? நிச்சயம் இது தொல்லைதரும் பல விஷயங்களுக்கு அடித்தளமிடும்.

3) நண்பர்கள் பட்டியல்:

ஃபேஸ்புக்கை ஒரு பிளாக்போல பயன்படுத்துபவர்கள் ஓகே. ஆனால், பெர்சனல் தகவல்களை மட்டுமே பகிர்பவர்களுக்கு எதற்கு 1,000 கணக்கில் நண்பர்கள்? ஆக்ஸ்ஃபோர்டு ஆராய்ச்சிப்படி ஒருவர் 150 பேருடந்தான் ஒரு நேரத்தில் நண்பராக இருக்க முடியும் என்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் வெறும் எண்கள்தான். உங்கள் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டை ஒருமுறை பார்த்து குறைத்துக்கொள்ளுங்கள்.

4) குழந்தைகளின் படங்கள்:

இதுவும் ஆபத்தானதுதான். அப்படியே பகிர வேண்டும் என்றால் “Public" ஆப்ஷன் வைக்காமல், யாரெல்லாம் பார்க்க வேண்டும் என நினைக்கறீர்களோ, அவர்களுடன் மட்டும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

5) குழந்தைகள் பற்றிய தவல்கள்:

சென்ற தலைமுறையைவிட இந்தத் தலைமுறையில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்திருக்கிறது. இந்தக் குற்றங்களில், குற்றவாளிகள் குழந்தைகளின் பள்ளி, அவர்கள் வெளியே செல்லும் நேரம் ஆகியவற்றை அறிய ஃபேஸ்புக்தான் உதவியிருக்கிறது. இந்தத் தகவல் யு.கே.வில் எடுக்கப்பட்டதுதான். ஆனால், கவனிக்க வேண்டியது.

ஃபேஸ்புக்

6) லொகேஷன் சர்வீஸஸ்:

மேனேஜரிடம் சொந்த ஊருக்கு மாரியம்மன் கோயில் திருவிழாவுக்குப் போவதாகச் சொல்லிவிட்டு, கோவா போனவர்கள் பலர் ஃபேஸ்புக் லொகேஷன் மூலம் சிக்கியிருக்கிறார்கள். மேனேஜர் மறந்துவிடுவார். ஆனால், திருடர்கள்? நீங்கள் எங்கே போகிறீர்கள் என்பதை ஊருக்கே சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமா?

7) ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ்:

நம்புங்கள். ஜென் இஸட் இளைஞர்களுக்கு பிரேக் அப்பைவிட, ஃபேஸ்புக்கில் `In a relationship’ என்பதிலிருந்து `single’ என மீண்டும் மாற்றுவதுதான் அதிக மன உளைச்சலைத் தருகிறதாம். காதலோ பிரேக் அப்போ... ஃபேஸ்புக்கில் சொல்ல வேண்டாம் தோழர்.

8) கிரெடிட் கார்டு:

சொல்லவும் வேண்டுமா? எந்தக் காரணம் கொண்டும் பகிராதீர்கள். இருந்தால், டெலீட் செய்துவிடுங்கள்.

டிஜிட்டல் உலகம் திக்குத்தெரியாத காடுபோல. முடிந்தவரை மடியில் கணமில்லாதவர்களுக்கு அங்கே ஆபத்துகள் அதிகம் இருப்பதில்லை. இங்கே உங்களைப் பற்றிய தகவல்கள்தான் கணம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்