வெளியிடப்பட்ட நேரம்: 21:49 (27/06/2017)

கடைசி தொடர்பு:11:24 (28/06/2017)

1 நாள்... 1 லட்சம் விதைகள்... பறவையைப் போல தூவிச் செல்லும் ‘தனிஒருவன்’..! #Drone

விதைகள்  PC: ABC News

ட்ரோன்கள். சில வருடங்களுக்கு முன்னால் வரை அவை எதிர்கால தொழில்நுட்பமாக இருந்தன. உலகின் முன்னேறிய நாடுகளின் கைகளில் மட்டுமே அந்தத் தொழில்நுட்பம் இருந்தது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் ராணுவ பயன்பாட்டிற்காகவே அதிகமாக ட்ரோன்களை பயன்படுத்தின. ஆனால் இன்றோ ட்ரோன்களின் நிலைமை வேறு. சினிமா எடுப்பது முதல் டோர் டெலிவரி செய்வது, கால்நடைகளை மேய்ப்பது, அவசர உதவி என அனைத்துத் துறைகளிலும் கோலோச்சத் தொடங்கிவிட்டன ட்ரோன்கள். இதுவரை மனிதர்களுக்காக உதவி செய்த ட்ரோன்கள் அடுத்து இயற்கைக்கு உதவி செய்யப்போகின்றன. ஆம், இனி ட்ரோன்கள் மரம் நடப்போகின்றன. அதற்கு விதைகள் தூவப்போகின்றன

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் சூசன் கிரகாம் என்பவருக்கு இப்படி ஒரு யோசனை தோன்ற உலகின் மிகப்பெரிய ட்ரோன்கள் தயாரிக்கும் BioCarbon engineering என்ற நிறுவனத்தோடு இணைந்து வடிவமைத்ததுதான் விதைகளைத் தூவும் ட்ரோன். இந்த ட்ரோன் மூலமாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் விதைகளை நிலத்தில் விதைக்க முடியும் என்கிறார்கள். அதை செயல்படுத்தி நிரூபித்தும் காட்டியிருக்கிறார்கள்.

மரம் நடுவது பார்ப்பதற்கு வேண்டுமானால் எளிதான காரியமாகத் தெரியலாம். ஆனால் மிகப்பெரிய பரப்பளவில் விதைகளைத் தூவுவதற்கு பெரியளவில் மனிதஉழைப்பு தேவைப்படும். ஆனால் இந்த ட்ரோன்கள் எவ்வளவு பெரிய இடமாக இருந்தாலும் விதையைத் தூவி வேலையை எளிதாக்கி விடும். 

முதலில் ஒரு நிலத்தை அளவிட ட்ரோன்களை பறக்க விட்டு நிலத்தின் பரப்பளவு, எத்தனை வரிசைகள் விதைகளைத் தூவலாம், எவ்வளவு விதைகள் தேவைப்படும் என்பது போன்ற அடிப்படை தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த டேட்டா கிடைத்தவுடன் விதைகள் தயார் செய்யப்படுகின்றன. விதைகளைப் பொறுத்தவரை நமது ஊரில் தற்போது பயன்படுத்தப்படும் விதைப்பந்து தொழில்நுட்பத்தைதான் அவர்களும் பின்பற்றுகிறார்கள், ஆனால் சற்று வித்தியாசமாக. விதைகள் முதலிலே முளைக்க வைக்கப்பட்டு, செடி வளர தேவையான சத்துகள் அடங்கிய ஒருவித ஜெல்லால் மூடப்பட்டு இந்த விதைப்பந்துகள் உருவாக்கப்படுகின்றன.

பின்பு விதைகளைத் தூவும் ட்ரோன்கள், ஏற்கெனவே உருவாக்கி வைத்த பாதையில் சென்று விதைகளைத் தூவுகின்றன. மண்ணில் விழுந்த விதைகள் ஜெல்லுக்குள் இருப்பதால் பாதுகாப்பாக இருக்கின்றன. தேவையான சத்துகளையும் ஈரப்பதத்தையும் கொண்டிருப்பதால் அதிலிருந்து செடி வளர்கிறது. ஒரு முறை பறந்தால், 150 விதைகளை எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட ஒரு லட்சம் விதைகளைக் கூட விதைத்து விடுகிறது இந்த ட்ரோன் .

நிலக்கரி சுரங்கங்கள், கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட இடங்கள், மனிதர்களால் கைவிடப்பட்ட இடங்கள் ஆகியவற்றில் கூட இந்த ட்ரோன்களால் சென்று விதைகளைத் தூவ முடியும்.

விதைகள்

PC: ABC News

இதை வடிவமைத்த பொறியாளர் இதற்கு முன்னால் நாசாவின் முக்கியத் திட்டமான செவ்வாயில் மனிதர்கள் வசிக்க முடியுமா என்ற ஆராய்ச்சியில் இருந்தவர். சுற்றுச்சூழல் மாசுபாட்டால் எதிர்காலத்தில் நமது பூமிக்கும் அத்தகைய ஆராய்ச்சி தேவைப்படலாம் என யோசித்தவர் உடனடியாகக் களத்தில் இறங்கி பணியாற்றத் தொடங்கிவிட்டார்.

இந்த ட்ரோன்கள் மூலமாக அதிகளவில் வேகமாக மரங்களை வளர்க்க முடியும். மரங்களை வளர்ப்பதன் மூலமாக வளமையை மீட்டெடுக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

நம் ஊரில் விதைப்பந்துகள் மூலமாக காடுகளை உருவாக்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. ஆனால் விதைப்பந்தை தூவுவதற்கு ஆட்கள் அதிகமாகத் தேவைப்படுகிறார்கள். மேலும் சில இடங்களுக்கு நம்மால் சென்று விதைகளை வீச முடியாது. எனவே விதைப்பந்துகளை வீசுவதற்கு ட்ரோன் தொழில்நுட்பம் அருமையாகப் பயன்படக்கூடியது. இதன் மூலம் அதிகப் பரப்பளவிலும் மிக விரைவாக விதைப்பந்துகளைத் தூவுவதற்கும் பயன்படுத்தலாம்.

இயற்கையாகவே பறவைகள் விதைகளை நெடுந்தொலைவு சுமந்துச் சென்று, பரப்பும் தன்மை உடையவை. அந்தப் பறவைகளின் எண்ணிக்கையும் மனிதர்களால் குறைந்துக்கொண்டே வருகிறது. இந்த ட்ரோன், பறவைகளின் வேலையைச் செய்யும். நிச்சயம், பறவைகளுக்கு மாற்றாக இந்த ட்ரோன் இருக்க முடியாது. ஆனால், விதைகளைத் தூவும் முக்கிய வேலையைச் செய்ய உதவுவதால் இந்த ட்ரோன் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

 


டிரெண்டிங் @ விகடன்