டூயல் கோர்... க்வாட் கோர்...மொபைல் ப்ராசஸர்களைப் பற்றிய முழுமையான ரிப்போர்ட்..! | A to Z about mobile processors and its manufacturers

வெளியிடப்பட்ட நேரம்: 12:51 (03/07/2017)

கடைசி தொடர்பு:20:37 (05/07/2017)

டூயல் கோர்... க்வாட் கோர்...மொபைல் ப்ராசஸர்களைப் பற்றிய முழுமையான ரிப்போர்ட்..!

ப்ராசஸர்

ஸ்மார்ட்போன்கள் வாங்கும் பலரும் சமீப காலமாக அதில் எந்த வகை ப்ராசஸர் பயன்படுத்தப்படுகிறது, அதை எந்த நிறுவனம் தயாரிக்கிறது, அதன் வேகம் என்ன ஆகியவற்றையெல்லாம் கவனித்துதான் வாங்குகிறார்கள். ஆனால் பலருக்கும் அதைப் பற்றிய விஷயங்கள் முழுமையாகத்  தெரிவதில்லை.

உண்மையில் ப்ராசஸர் என்றால் என்ன?அது எதற்காக பயன்படுகிறது? எந்த நிறுவனத்தின் ப்ராசஸர் சிறந்தது, எதைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

ப்ராசஸர்  என்றால் என்ன..?
கணிணிக்கு இயங்குவதற்கு எப்படி CPU தேவைப்படுகிறதோ அப்படி ஸ்மார்ட்போன் இயங்குவதற்கு ப்ராசஸர். ஒரு சின்ன நாணயத்தின் அளவே இருக்கும் இந்த பிராஸசர்கள்தான் ஸ்மார்ட்போனின் அனைத்து இயக்கங்களையும் கட்டுப்படுத்துகின்றன. எளிமையாகச் சொல்லப்போனால் ஸ்மார்ட்போனின் மூளை என்பது ப்ராசஸர்தான்.

நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் ஒருவருக்கு போன் செய்ய வேண்டும் என்றாலும், புகைப்படம் எடுக்க வேண்டும் என்றாலும், ஜிபிஎஸ், வைஃபை என எதைப் பயன்படுத்த வேண்டும் என்றாலும் ப்ராசஸர்  உத்தரவு கொடுத்த பிறகே வேலை நடக்கும். ஏனென்றால் ஸ்மார்ட்போனில் ஒரு வேலையைச் செய்ய எதை எதைப் பயன்படுத்த வேண்டும் அதற்கு எதையெல்லாம் ஒருங்கிணைக்க வேண்டும் என்பது ப்ராசஸர் முடிவு செய்யக் கூடிய விஷயம்.

எடுத்துக்காட்டாக உங்களுக்கு ஜிபிஎஸ் வசதி தேவைப்படுகிறது. அதை ஆன் செய்கிறீர்கள். அது நீங்கள் திரையில் செய்யும் உள்ளீடு மூலமாக ப்ராசஸருக்குத் தெரிவிக்கப்படும். அதன் பின்பே ப்ராசஸர் ஜிபிஎஸ் ஆன்டெனாவிற்கு மின்சாரத்தை அனுப்பி அதை உயிர்ப்பிக்கும். அதன் பின் ஜிபிஎஸ் செயற்கைகோளிலிருந்து கிடைக்கும் சிக்னலை ஆராய்ந்து தனக்குக் கிடக்கும் அனைத்தையும் ப்ராசஸருக்கு அனுப்பும். ப்ராசஸர்  அதை ஆராய்ந்து உங்களுக்கு எது தேவையோ அதை திரையில் காட்சிப்படுத்தும்.

இந்த மொத்தச் செயல்பாடும் எவ்வளவு சீக்கிரமாக நடைபெறுகிறது என்பதில்தான் ப்ராசஸரின்  வேகம் அடங்கியிருக்கிறது.
ப்ராசஸரின் வேகத்தைக் குறிப்பிட GHz என்ற SI குறியீடு பயன்படுகிறது.

ப்ராசஸர்  அடுக்குகள் (core)
ட்யூவல் கோர் (Dual core), குவாட் கோர் (Quad core), ஆக்டா கோர் (Octa core) போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், உண்மையாகவே அதில் உள்ள core என்ற வார்த்தை அடுக்குகளை குறிப்பிடுவதில்லை. ஆக்டா கோர் பிரசஸர்களில் எட்டு அடுக்குகள் இருக்கும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. மாறாக  அந்த வார்த்தைக்கு இங்கே ப்ராசஸர்களில் இருக்கும் வழிகள் என்று புரிந்துகொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, ஒரு அறை இருக்கிறது, அங்கே வேலை செய்வதற்காகப் பல பணியாளர்கள் இருக்கிறார்கள், உள்ளே செல்ல பலரும் வரிசையில் காத்திருக்கிருக்கிறார்கள். அறைக்குள் செல்ல ஒரு வாசல் மட்டும் இருந்தால் எப்படி இருக்கும்? அந்த வழியே ஒருவர் சென்று வேலையை முடித்து விட்டு வரும் வரை மற்றவர்கள் காத்திருக்க வேண்டும் அல்லவா இந்த நிலையை ட்யூவல் கோர் பிராஸசர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். மாறாக அந்த அறைக்கு எட்டு வாசல்கள் இருந்தால் எந்த வழியாக வேண்டுமானாலும் சென்று எந்த வழியில் வேண்டுமானாலும் வெளியில் வரலாம். வேலையும் வேகமாக நடக்கும். காத்திருக்கும் தேவையும் ஏற்படாது. இதை ஆக்டா கோர் ப்ராசஸர் என்று கணக்கில் கொள்ளலாம்.

அடுக்குகள் அதிகமாக இருந்தால் மின்சாரம் சற்று அதிகமாகத் தேவைப்படும். ஆனால் வேலை சீக்கிரமாக நடக்கும். அதிகமான அடுக்குகள் செயல்பாட்டில் இருப்பதால் சில சமயங்களில் வெப்பம் உருவாகலாம்.

ஆக்டா கோர், ஹெக்சா கோர் என்று ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் முழு வீச்சில் முன்னேறி சூடேறிக் கொண்டிருக்க ஆப்பிளோ ட்யூவல் கோர் Apple A9 ப்ராசஸர்களை மட்டுமே பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்திக் கூலாக இருக்கிறது. போனால் போகட்டும் என்று கடந்த வருடம்தான் தனது முதல் குவாட் கோர் ப்ராசஸரான  Apple A10 ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ல் அறிமுகப்படுத்தியது. 

ஸ்னாப்ட்ராகன்

ஸ்நாப்டிராகன், மீடியாடெக்.. எது பெஸ்ட்?
ஸ்மார்ட்போன்களில் ஸ்நாப்டிராகன், மீடியாடெக் என்ற இரண்டு நிறுவனங்களின் ப்ராசஸர்கள்தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. 
ஸ்நாப்டிராகன் ப்ராசஸரை குவால்காம் என்ற அமெரிக்க நிறுவனம் தயாரிக்கிறது. விலை அதிகம் என்றாலும் செயல்திறனில் அதிகமாகவே ஸ்கோர் செய்கிறது. ஹைஎன்ட் ஸ்மார்ட்போன்கள் என்று குறிப்பிடப்படும்  விலை அதிகமான ஸ்மார்ட்போன்களில் இந்த ப்ராசஸர்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

மீடியாடெக் ப்ராசஸர்களை தைவானை சேர்ந்த நிறுவனம் தயாரிக்கிறது. விலை மிகவும் குறைவு, செயல்திறன் அதிகம் என்பது இதன் சிறப்பு. விலை குறைவான மொபைல்களில் மீடியாடெக் ப்ராசஸர்  அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஸ்மார்ட்போனில் ப்ராசஸர் என்றாலே இந்த இரண்டு நிறுவனங்கள்தான் என்ற நிலை தற்பொழுது மாறிவிட்டது. ஆப்பிள், சாம்சங், ஹீவேய் எனப் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுக்கென சொந்த ப்ராசஸர்களை வடிவமைத்து பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். ஜியோமி நிறுவனம் கூட சொந்தமாக ப்ராசஸர்களை உருவாக்கத் தொடங்கிவிட்டதாக அண்மையில் அறிவித்தது.

ப்ராசஸர்களின் அடுக்குகளைத் தயாரிக்கும் நிறுவனம் மட்டுமே ஒரு ஸ்மார்ட்போனின் செயல்திறனை தீர்மானித்து விடாது. ப்ராசஸரின் வேகத்துக்குத் தகுந்தவாறு ஈடு கொடுக்கும் வகையில் ரேம், கிராபிக்ஸ் ப்ராசஸிங் யூனீட்கள், மென்பொருள் ஆகியவை தேவைப்படும்.
இவையெல்லாம் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே ஸ்மார்ட்போனின் செயல்திறன் அதிகரிக்கும். 


டிரெண்டிங் @ விகடன்