இது சின்ன பசங்க காலம்... பெருசுகளை இன்ஸ்டாகிராம் தோற்கடித்த கதை! #StartUpBasics அத்தியாயம் 18 | Story of instagram beating big names in the industry

வெளியிடப்பட்ட நேரம்: 12:18 (26/07/2017)

கடைசி தொடர்பு:12:18 (26/07/2017)

இது சின்ன பசங்க காலம்... பெருசுகளை இன்ஸ்டாகிராம் தோற்கடித்த கதை! #StartUpBasics அத்தியாயம் 18

வீன யுகத்தில் ஒரு தொழில் நடத்துவது என்பது ஒவ்வொரு நாளும் மிகச் சவாலான விஷயம். ஒவ்வொரு நாளும் ஒரு புது தொழில்நுட்பம் பிறந்துகொண்டே இருக்கிறது. நம் தொழிலில் நடக்கும் புதிய நுட்பங்களை தேடித் தேடி கற்று நம்மை மேம்படுத்திக் கொள்ளாவிட்டால் சின்னப் பசங்க கூட ஓவர்டேக் பண்ணிக்கொண்டு போய்க்கொண்டே இருப்பார்கள் என்பதற்கு இளையதலைமுறை சாட்சி கெவின் சிஸ்ட்ரோம்.

இன்ஸ்டாகிராம் இணை நிறுவனர் கெவின் சிஸ்ட்ரோம்

ஒரு நூற்றாண்டுக்கு மேல் புகைப்படத் துறையில் ஆண்டு வந்த பல பெரிய நிறுவனங்கள் இன்று காணாமல் சென்றுவிட்டன. அந்த புகைப்படத்துறை மக்கள் கையில் ஒரு மொபைல் போனாக சுருங்கி புது அவதாரம் எடுக்கும்போது சில பல ஜிம்மிக்ஸ் வேலைகளைப் பார்த்து அதை இணையத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் பகிரச் செய்து அதன்மூலம் பெரிய அளவில் வெற்றி பெற்ற ஸ்டார்ட்அப் தான் இன்ஸ்டாகிராம்.

இன்று இன்ஸ்டாகிராம் எந்தளவுக்கு எல்லோரையும் வியாபித்து இருக்கிறது என்றால் டிவிட்டர், ஸ்னாப்சாட் போன்ற சீனியர்களையும் ஓரங்கட்டி முன்னணி வகிக்கிறது. இருபத்தாறு வயதே கொண்டே இளைஞர் கெவின் ஒரு முன்னாள் கூகிள் ஊழியர். படித்து முடித்த பின் கூகிளில் வேலை கிடைக்கிறது. அங்கு இரண்டு வருடம் வேலை செய்கிறார்.

கூகிள் மாதிரியான நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம். வேறு நிறுவனத்தை பற்றியோ சம்பள உயர்வை பற்றியோ கவலைகொள்ள வேண்டியதில்லை. உலக அளவில் பணியாளர்களுக்கு உச்சபட்ச சம்பளம் கொடுக்கும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. சம்பளம் மட்டுமல்ல பலதரப்பட்ட இதர வசதிகள் உண்டு. ஆனாலும் கெவினுக்கு கூகிள் போரடிக்கிறது. Gmail, Google Calendar, Google Docs என்று வேற வேற டீம்களில் சேர்ந்து பார்க்கிறார். ஆனாலும், அவரின் தேடலுக்கு தீனி கிடைக்கவில்லை. விலகி விடுகிறார்.

Instagram

Nextstop என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் சேர்கிறார். நண்பர்கள் இவனுக்கு என்னாச்சு? கூகிளை விட்டுவிட்டு ஊர் பெயர் தெரியாத நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறானே என்று அங்கலாய்த்தார்கள். எதையும் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. அங்கு வேலை செய்யும்போது இவருக்கு சில ஐடியா கிடைக்கிறது. உடனே ஒரு மாடல் அப்ளிகேஷனை செய்கிறார். அதை ஒரு பார்ட்டியில் வைத்து இரண்டு வென்ச்சர் கேபிட்டல் முதலீட்டாளர்களிடம் காண்பித்து முதலீட்டை கோருகிறார். அந்த ஐடியா பிறந்த கதையையும் சொல்கிறார். அவரது தோழியுடன் மெக்சிகோ சென்றிருந்தபோது ஐபோனில் இவர்கள் எடுத்த போட்டோ அவ்வளவு சரியாக வரவில்லை. நல்லபோன் தான். ஹை பிக்ஸல் கேமராதான். இருந்தாலும் எதோ ஒரு குறை. சில Filter கள் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறார். அங்கிருந்து பிறந்ததுதான் அந்த முதல் ஐடியா. அதன் பெயர் பர்ப்பின். இது முதலீட்டர்களை ஈர்த்தது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர்களிடம் இருந்து பதில் வருகிறது.

கெவினுக்கு மூன்று கோடி ரூபாய் முதலீடு கிடைக்கிறது. வேலையை விட்டுவிட்டு ஸ்டார்ட்அப் பயணத்தைத் தொடங்குகிறார். நண்பர் மைக் க்ரிக்கருடன் இணைந்து அவர்களின் முதல் ஆப்பை கொண்டுவருகிறார்கள். அது எதிர்பார்த்த வெற்றியை பர்ப்பின் கொடுக்கவில்லை. என்ன காரணம் என்று அலசி ஆராயும்போதுதான் உண்மை புரிகிறது. தேவையில்லாத நிறைய வசதிகளை அந்த அப்ளிகேஷன் கொண்டிருக்கிறது. அவற்றை எல்லாம் களைந்துவிட்டு போட்டோ ஷேரிங் வசதியை மட்டும் கூர் தீட்டுகிறார்கள். தேவையில்லாதவற்றை களைந்த பின் இயல்பாகவே அதன் வடிவமைப்பு எளிதாக மாறுகிறது. அதற்கு ஒரு புதிய பெயரை சூட்டுகிறார்கள். Instant Camera Telegram. அது ரொம்பவும் நீளமாக தெரியவே அதைச் சுருக்கி Instagram என்று வைத்து வெளியிடுகிறார்கள். ஒரே மாதத்தில் பத்து லட்சம் பயனாளர்கள் அதை பயன்படுத்த தொடங்கினார்கள். இதுபோன்ற ஆப்கள் கொஞ்சம் ஹிட் அடித்தாலும் போதும் மிச்சத்தை பயனாளர்களே பார்த்துக் கொள்வார்கள். ஒரே வருடத்தில் ஒரு கோடி பயனாளர்கள் பயன்படுத்த தொடங்க இண்டஸ்டிரியில் பல முக்கிய தலைகளின் கண்ணை உறுத்துகிறது இந்த குட்டி டீம்.

Kevin Systrome

நிறைய பெரு நிறுவனங்கள் விலைக்கு வாங்க பேச்சைத் தொடங்கின. 2012-ல் ஒரு வழியாக பேஸ்புக் இன்ஸ்டாகிராமை ஒரு பில்லியன் டாலர்கள் கொடுத்து விலைக்கு வாங்குகிறது. இவற்றில் முப்பது சதவிகிதத்தை பணமாகவும், மீதியை பேஸ்புக் பங்குகளாகவும் கொடுத்து வாங்குகிறார்கள். 

பேஸ்புக் இதை வாங்கினாலும் அதை தன்னுடன் இணைக்காமல் தனியான ஒரு ஆப்பாகவே இன்றும் வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் இன்ஸ்டாகிராமிற்கு என்று தனியான குணம் இருக்கிறது. அதைக் கெடுத்துவிடக் கூடாது என்று திட்டமிட்டார்கள். அதன் லோகோ மற்றும் ஐகானை மட்டும் மாற்றினார்கள். இன்ஸ்டாகிராம் பில்லியன் டாலர் ஆப் என்றாலும் அதில் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. 2012-ல் பேஸ்புக்குடன் இணைந்தபோது இருபதுக்கும் குறைவான ஊழியர்கள் கொண்ட டீம் இன்று அதிகபட்சமாக 450 பேர்களை மட்டுமே கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை உலகம் முழுக்க அறுபது கோடி பேர்கள் பயன்படுத்துகிறார்கள். 

கெவின் சிஸ்ட்ரோம்மை இன்று போர்ப்ஸ் பத்திரிகை பில்லியன் டாலர் பேபி என்று வர்ணிக்கிறது. ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை ஆரம்பித்து இரண்டே வருடத்தில் ஒரு பில்லியன் டாலர்க்கு விற்ற ஒரே தொழில்முனைவோர் இவர் மட்டுமே.

ஸ்டார்ட்அப் பாடங்கள் :

மாறிவரும் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு காலத்துக்கு ஏற்ப தன்னை வடிவமைத்துக்கொள்ளும் நிறுவனங்கள் மட்டுமே நிலைத்து நிற்கும். புகைப்படத் துறையில் நூற்றாண்டுகளாக கோலோச்சி கொண்டிருந்த கோடாக்(KODAK) நிறுவனம் 2010க்குப் பிறகு என்ன செய்வதென்றே தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது. செப்டம்பர் 2011-ல் அதனுடைய பங்கு 0.54 டாலர் அளவுக்கு விழுந்தது. TOP 500 கம்பெனிகள் பட்டியலில் இருந்து வெளியில் வந்தது. இதே காலகட்டத்தில் தான் கெவின் சிஸ்ட்ரோம் என்ற இந்த பொடியன் தன்னுடைய 20 பேர் கொண்ட டீமை வைத்து உலகத்தைக் கைப்பற்றினார். கருவிகளின் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்திய நிறுவனங்களைவிட மக்களின் தேவையில் உள்ள தொழில்நுட்பத்தை கவனம் செலுத்திய நிறுவனங்கள் தான் காலத்தை வென்று வெற்றி அடைகின்றன. இது இளையவர்களின் காலம். அவர்களின் கரங்களை அவிழ்த்து புதிய தொழில் சிந்தனைகளை வளர்க்கும் நாடுகளே உலகத்தின் சிறந்த நாடாக வர முடியும். மத, இன, சாதிய சிந்தனைகளை வளர்க்கும் நாடுகளில் புதிய தொழில் சிந்தனைகொண்ட இளைஞர்கள் வருவது அரிதே!

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க க்ளிக் செய்யவும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்