அட... இந்தியாவில் அதிக எல்இடி பல்புகள் விநியோகம் இந்த மாநிலத்திலா? #VikatanInfographics

இந்தியாவில்  எல்இடி பல்புகளை வீட்டிலும், தெருக்களிலும் பயன்படுத்தினால், ஆண்டுக்கு 5 பில்லியன் kWh மின்சாரமும், 3,000 கோடி ரூபாயும் மிச்சமாகும் என்பதுதான் மத்திய அரசின் உஜாலா திட்டத்தின் அடிப்படை. க்ளீன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா அளவுக்கு இந்த திட்டத்துக்கு ஆர்வம் காட்டியது மத்திய அரசு. ஆனால் அந்தத் திட்டம் எந்த நிலையில் உள்ளது. இது இந்தியாவின் மின் தேவைக்கு எந்த அளவுக்கு உதவியுள்ளது என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்காமல் மூன்று ஆண்டுகளைக் கடந்துவிட்டது இந்தத் திட்டம். 

இந்தியாவில் மின்பற்றாக்குறை அரசின் நடவடிக்கையால் சரி செய்யப்பட்டு வருகிறது என்று மத்திய மின்சக்தி அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தாலும், கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகும் மின்விநியோக நிர்வாகங்கள், தயாரிக்கப்படும் மின்சாரத்தை பரிமாற்றம் செய்யும்போது ஏற்படும் மின் இழப்பு இவற்றால் தடுமாற்றத்திலேயே உள்ளது மின்சாரத்துறை. 

மின்சார பயன்பாட்டை  குறைக்க வீடுகளுக்கு  மானிய விலையில் எல்இடி பல்புகள் கொடுக்கும் உஜாலா என்கின்ற திட்டத்தைக் கொண்டு வந்தது பா.ஜ.க. அரசு. 24.11.2016 வரை 5,98,81,104 வீடுகளுக்கு பல்புகள் வழங்கயிருக்கிறது அரசு. இதில் எல்இடி பல்புகள் அதிகம் பெறப்பட்ட மாநிலங்களில் முதலிடம் குஜராத்துக்குத்தான்.  அங்கு  91,27,351 வீடுகள் இந்த வசதியை பெற்றுள்ளன. இந்தியா முழுவதும் வழங்கப்பட்ட மொத்த எண்ணிக்கையில் இது 15.24 % சதவிகிதமாகும்.  மகாராஷ்ட்ராவில்  66,70,198 வீடுகளுக்கும்(11.14%) ராஜஸ்தானில் 39,60,070 வீடுகளுக்கும் (6.61%) உத்திர பிரதேசத்தில் 37,11,546 வீடுகளுக்கும் (6.2%) மத்திய பிரதேசத்தில் 29,36,282 வீடுகளுக்கும் (6.2%) ஜார்கண்டில்  25,10,156 வீடுகளுக்கும்(4.19%) ஹரியானாவில்  24,92,251(4.16%) வீடுகளுக்கும், சத்தீஸ்கரில்  18,99,408 வீடுகளுக்கும் (3.17%) உத்திரகாண்டில்  11,26,317 வீடுகளுக்கும்(1.88%) அதிகபட்சமாக வழங்கபட்டுள்ளது. இவை அனைத்துமே பிஜேபி ஆளும் மாநிலங்களாக உள்ளது. தமிழகத்தில் பெறப்பட்ட இந்த எண்ணிக்கை வெறும் 20,339 இது மொத்த எண்ணிக்கையில் வெறும் 0.03% சதவிகிதமாகும். இந்திய அளவில் விநியோகம் செய்யப்பட்ட பெரும்பாலான பல்புகள் நிறுவனங்களுக்கான விநியோகமாகவே(Institutional Distribution) இருந்துள்ளது.

இதன் மூலம் மிச்சமாக்கப்படும் மின்சாரத்தின் அளவு அதிகமாக இருக்கும், இந்தியாவில் மின் தேவையை இந்தத் திட்டம் பூர்த்தி செய்யும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனாலும் இந்தியாவின் மின் தேவையை அரசு சரிவர பூர்த்தி செய்யவில்லை. அரசு இந்தத் திட்டத்தின் மூலம் 32 பில்லியன் கிலோவாட் மின்சாரம் வருடத்துக்கு சேமிக்கப்பட்டுள்ளது. 25 மில்லியன் டன் கார்பன் டை ஆக்ஸைடு குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 600 மில்லியன் மரங்களுக்கு இணையான அளவு கார்பன் டை ஆக்ஸைடு வெளியீடு குறைக்கப்பட்டுள்ளது. 124 பில்லியன் மின்கட்டணத்தை மக்கள் சேமித்துள்ளதாக அரசு கூறியுள்ளது. ஆனால், இந்தியாவில் இன்னும் 400 மில்லியன் மக்களுக்கு மின்சார வசதியே சென்று சேரவில்லை. இந்தியாவில் உள்ள மாநில மின்சார வாரியங்கள் இன்னமும் நெருக்கடியில்தான் இயங்கி வருகின்றன. இப்போது இருக்கும் வளங்களைக் கொண்டு மின் தேவையைப் பூர்த்தி செய்வது மின் துறையின் சவாலாகவே உள்ளது.

மின்சாரம் இந்தியா

 

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆட்சிகளாக மின்சாரம் என்பது பிரச்னையாகவே உள்ளது. சிலமாவட்டங்கள் 8 மணி நேர மின் தடையை எதிர்கொண்ட நிலையும் நாம் அறிந்ததே. மின்மிகை மாநிலமாக மாற்றுவோம் என்ற வாக்குறுதி மட்டுமே இருந்துள்ள நிலையில் இந்தத் திட்டத்தின் மூலம் கூறப்படும் விவரங்கள் அளவுக்கு இந்தியாவின் மின்தேவையை பூர்த்தி செய்யப்படவில்லை என்பது உண்மையாகிறது. இன்னமும் விவசாயத்துக்கான மின்சாரம், தொழிற்சாலைகளின் மின்சார பயன்பாடு, சோலார் போன்றவை சரியான முறையில் நெறிமுறைப்படுத்தப்படாமல் இருப்பது போன்றவை தொடர் கேள்விகளாகவே உள்ளன. அரசு இந்தத் திட்டத்தைப் பற்றி பெருமைகளைப் பேசும் வேளையில் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் திட்டங்களை மக்களுக்குப் பாதிப்பின்றி நிறைவேற்ற வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்தியா ஒளிர்கிறது என்ற வாஜ்பாய் பிஜேபி அரசின் வார்த்தையை மோடி அரசு மின் துறையில் செயல்படுத்தி இந்தியாவை இருளில் இருந்து காப்பாற்றினாலே போதும். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!