வெளியிடப்பட்ட நேரம்: 11:51 (02/08/2017)

கடைசி தொடர்பு:12:24 (02/08/2017)

ஒரே நாளில் ஜனாதிபதிக்கு 30 லட்சம் ட்விட்டர் ஃபாலோயர்கள் கிடைத்த ரகசியம் இதுதான்!

ட்விட்டர்

இந்திய நாட்டின் புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கென்று புதியதாக ஒரு ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அது தொடங்கப்பட்ட ஒரே நாளில் ஃபாலோயர்களின் எண்ணிக்கை மூன்றரை மில்லியனைத் தாண்டியது. தொடங்கப்பட்ட சிலமணி நேரங்களிலே இவ்வளவு அதிகமான ஃபாலோயர்கள்கள் பின்தொடர்வதாக காட்டப்பட்டதை, பெரும்பாலான தொலைக்காட்சிகள் மிக முக்கியமான செய்தியாக வெளியிட்டன. இத்தனை மில்லியன் ஃபாலோயர்கள் என்பது எவ்வாறு சிலமணி நேரங்களில் சாத்தியப்பட்டது? இது உண்மையான கணக்குதானா?

 

 

ஒரு நாட்டின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதம மந்திரி மற்றும் இதர அமைச்சர்கள் என அனைவரின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்குகள், அந்தந்த நாட்டின் டிஜிட்டல் சொத்துகளாகக் (Digital assets) கருதப்படும். இந்தப் பதவிகளில் உள்ளவர்கள் மாறும்போது, முன்னவர்களைப் பற்றிய விபரங்களைப் பாதுகாப்பதற்கும் அந்தக் கணக்கின் தொடர்ச்சியினைப் பராமரிப்பதற்கும் ட்விட்டர் ஒரு வழியினை கையாள்கிறது. ஒபாமாவுக்குப் பின்பு ட்ரம்ப் (@POTUS) வந்தபோது கையாளப்பட்ட அதே கொள்கை முடிவுதான் பிரணாப் முகர்ஜிக்குப் பின்பு வந்துள்ள ராம்நாத் கோவிந்தின் விஷயத்திலும்  (@rashtrapatibhvn ) கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

1.    பிரணாப் முகர்ஜியின் அனைத்துப் பதிவுகளும் @POI13 என்ற புதிய ட்விட்டர் கணக்கில் பதிவு செய்யப்படுகிறது.

 2.    புதிய @ rashtrapatibhvn  கணக்கானது பூஜ்ஜியப் பதிவுகளுடன், முந்தைய கணக்கின் அனைத்து ஃபாலோயர்களையும் பெற்றிருக்கும். புதிய கணக்கின் உரிமையை ராம்நாத் கோவிந்த் பெற்றிருப்பார். அதனால்தான் பிரணாப் முகர்ஜியைப் பின்தொடர்ந்த 3 மில்லியன் ஃபாலோயர்கள் சிலமணி நேரத்தில் ராம்நாத் கோவிந்தை பின்தொடர்வதாகக் காட்டப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பினை (@POTUS)  5 மில்லியன் பேர் பின்தொடர்வதாக காட்டப்பட்டதன் ரகசியமும் இதுதான். 

 3.  தற்போது ஃபாலோயர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். தாங்கள் பிரணாப் முகர்ஜியைத் தானே பின்தொடர்ந்தோம்? இப்போது புதிய ஜனாதிபதியைப் பின்தொடர்வதாகக் காட்டப்பட்டால், பிரணாப்-ஐ தற்போது பின்தொடரவில்லையா என்ற கேள்வி எழலாம். அதற்காகத்தான் ட்விட்டர் இந்த வழிமுறையினைக் கையாள்கிறது. ஃபாலோயர்கள் புதிய ஜனாதிபதியின் கணக்கைத் தொடர்வது மட்டுமல்லாமல் முந்தைய ஜனாதிபதியின் புதிய கணக்கையும் (@POI13 ) பின்தொடர்வார்கள்.  

 4.    நமக்கு வேண்டாம் என்ற பட்சத்தில் அதனை அன்ஃபாலோ செய்துவிடலாம்.

 5.    @POI13 என்பது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதிவுகளின் காப்பகமாகவே செயல்படும். அதிலிருந்து எந்தவொரு புதிய பதிவுகளையும் காண முடியாது. பிரணாப் முகர்ஜியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு @CitiznMukherjee ஆகும்.

இதுபோன்று பாதுகாப்புக்காக செய்யப்படும் மாற்றங்கள் (digital assets transition) சமீப காலமாகத்தான் மேற்கொள்ளப்படுகிறது என்றும் மன்மோகன் சிங்கிற்கு பின் நரேந்திர மோடி பிரதமராக வந்தபோது அவர்களின் ட்விட்டர் கணக்கில் ( @PMOIndia ) இதுபோன்ற மாற்றங்கள் செய்யப்படவில்லை என்றும் ’ட்விட்டர் இந்தியா தெரிவித்துள்ளது.

இப்போதே பெரும்பாலான நாட்டின் அதிபர்கள், பிரதம மந்திரிகள் மற்றும் அமைச்சர்கள் ட்விட்டர் மற்றும் இதர சமூக வலைதளங்கள் மூலமாகவே பல முக்கிய முடிவுகளை அறிவித்து வருகின்றனர். எதிர்காலத்தில் வாக்களிப்பது முதல் அனைத்து சம்பிரதாயங்களுக்கும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களே உதவும் என எதிர்பார்க்கலாம். அதனால்தான் இதுபோன்ற ட்விட்டர் கணக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது எனலாம்.


டிரெண்டிங் @ விகடன்