வெளியிடப்பட்ட நேரம்: 10:16 (05/08/2017)

கடைசி தொடர்பு:10:16 (05/08/2017)

அறிவியல் வளர்ச்சிக்காக இந்த உலகம் எவ்வளவு செலவு செய்கிறது தெரியுமா? #VikatanData

வானவியல்

நம் உலகில் அறிவியல் என்னவெல்லாம் செய்கிறது? அணு முதல் ஆகாயம் வரை அதன் அரசாட்சிதான். உடலின் ஒவ்வொரு செல் வரை சென்று நோய்களைக் குணப்படுத்துகிறது; நல்லதோர் எதிர்காலத்தை உருவாக்குகிறது. தொழில்நுட்பத்தை வளரச் செய்து நம் வாழ்வை இனிமையாக்குகிறது; சுலபமாக்குகிறது. விண்ணைத் தாண்டி அழைத்துப் போய், இப்பிரபஞ்சத்தின் அதிசயங்களைக் காண உதவுகிறது; சாதனைகள் பலவற்றை சாத்தியமாக்குகிறது.

ஆராய்ச்சிகளின் தேவை

அறிவியல் ஆராய்ச்சிகள், அதிலும் மிக முக்கியமாக மருத்துவ ஆராய்ச்சிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஓர் உதாரணம் இதோ...

யுனைடெட் கிங்டமில் ஒவ்வொரு வருடமும் 40,000 பேர் குடல் புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் 16,000 பேர் இறந்தும் விடுகிறார்கள் என்கிறது ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்! விஞ்ஞானிகளின் பல வருட கடின உழைப்பால், குடல் முழுவதையும் சுலபமாக ஸ்கிரீனிங் செய்யும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. வளைந்து கொடுக்கும் குழாய் ஒன்றில் ஃப்ளாஷ் லைட் கொண்ட கேமரா ஒன்றைப் பொருத்தி குடலுக்குள் செலுத்துகிறார்கள். இதனைக் கொண்டு குடலில் ஏதேனும் பாதிப்புகள் இருக்கின்றனவா, புற்று நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தெரிகின்றனவா என்பதை அலசி ஆராய்ந்து விடுகிறார்கள். இதன் மூலம் குடல் புற்று நோயைச் சற்று கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது, பல பேருக்குத் தகுந்த நேரத்தில் சிகிச்சை அளித்துக் காப்பாற்றவும் முடிந்தது.

இது அறிவியலால் உலகளவில் நடக்கும் கடலளவு நன்மைகளில் ஒரு துளிதான். அன்று அம்மை நோயால் வரும் இறப்பைத் தடுத்தது முதல் இன்று கேன்சருக்கு அளிக்கப்படும் கீமோதெரபி வரை அனைத்துமே அறிவியலின் சாதனைகள்தான்.

அறிவியல் தொழில்நுட்பம்

மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அடுத்த இடத்தில் இருப்பது தொழில்நுட்ப ஆராய்ச்சிகள். இன்று நம் அனைவரின் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் தொடங்கிப் பலவகை கேட்ஜெட்கள் வரை, அதிவேக இன்டர்நெட் தொடங்கி நேற்று வந்த விர்ச்சுவல் ரியாலிட்டி வரை எல்லாமே தொழில்நுட்ப ஆராய்ச்சியால் விளைந்தவை. மற்றொரு புறம், நிலவில் கால்பதித்தது, செவ்வாயில் கொடி பறக்கவிட்டது, பல ஒளியாண்டுகள் தொலைவிலிருக்கும் கேலக்ஸியை எட்டிப் பார்த்தது என அனைத்துமே வானவியல் ஆராய்ச்சிகளால் சாத்தியமானவை.

எந்தெந்த அறிவியல் துறைகளுக்கு இனி முக்கியத்துவம்?

உலகம் முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், எந்தெந்த அறிவியல் துறைகள் வரும் ஆண்டுகளில் முக்கியத்துவம் பெரும் என்று கண்டறிந்துள்ளார்கள். அதன்படி, 2018ஆம் ஆண்டின் போது, எந்தத் துறை எத்தனை  சதவிகிதம் முக்கியத்துவம் பெரும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு...

அறிவியல் தொழில்நுட்பங்கள்

தகவல்: Industrial Research Institute

எவ்வளவு செலவு செய்கிறார்கள் உலக நாடுகள்?

இவ்வளவு முன்னேற்றங்களும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் கடின உழைப்பால் மட்டும் நிகழ்ந்து விடவில்லை. அரசாங்கத்தின் பங்கு இந்தச் சாதனைகளில் மிக முக்கியமான ஒன்று. சரியான நேரத்தில் நிதியுதவி, ஆராய்ச்சிக்கான முழு ஆதரவு என அவர்கள்தான் திரை மறைவிலிருக்கும் சூப்பர் ஸ்டார்கள்! கடந்த 2010ஆம் ஆண்டில் மட்டும் அனைத்து நாடுகளும் சேர்ந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக ஒரு டிரில்லியன் டாலர்கள் வரை செலவு செய்து இருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகளைப் பற்றிய விபரம்…

PPP

தகவல்: International Monetary Fund, World Bank, Wikipedia

கிளம்பும் எதிர்ப்புகள், போராட்டக் களத்தில் விஞ்ஞானிகள்!

இது இப்படி இருக்க, பொருளாதார சிக்கலில் இருக்கும் தருவாயில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்குவது அவசியமா என்று எதிர்ப்புக் குரல் பல நாடுகளில் எழுந்த வண்ணம் உள்ளது. அதிலும், அமெரிக்காவில், நாசாவிற்கு எதற்காக இவ்வளவு பணம் ஒதுக்குகிறார்கள் என்று ஒரு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவிலும் நாம் சந்திராயன் தொடங்கி சரஸ்வதி கேலக்ஸி வரை சாதித்திருந்தாலும், ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதி நம் மொத்த GDPயில் ஒரு சிறு பங்குதான் என்று வருத்தப்படுகிறார்கள் விஞ்ஞானிகள்.. இது மட்டுமல்லாது, ஆளும் பா.ஜ.க ஆட்சியில் பல ஆதாரமற்ற, மூடநம்பிக்கைகள் செய்திகளாக தொடர்ந்து பரவிக்கொண்டே இருக்கின்றன என்ற ஒரு குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார்கள் அறிவியலாளர்கள்.

இது இங்கு மட்டுமல்ல, உலக அரங்கிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், கூடுதல் நிதி மற்றும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும், March for Science என்ற பெயரில் பேரணிகள் உலகம் முழுவதும் நடந்த வண்ணம் உள்ளன. இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி, அனைத்து மாநில தலைநகரங்களிலும் ‘India March for Science’ என்ற பெயரில் அணிவகுப்பு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு சார்பாக சென்னையில் அதே நாளில் மாலை 5 மணி முதல் பெசன்ட் நகர் பீச்சில் பேரணி நடக்கவுள்ளது. இதில் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் விருப்பமுள்ள குடிமக்கள் என யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்