மொபைலில் அது என்ன Type- C போர்ட்... இதனால் என்ன பயன்? #TypeCport

டைப் சி போர்ட்

சமீப காலமாக வெளியாகும் ஸ்மார்ட்போனின் சார்ஜிங் போர்ட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை நீங்கள் கவனித்திருக்கலாம் அல்லது நண்பர்களோ உறவினர்களோ உங்களிடம் அதைப்பற்றி கேட்டிருக்கலாம். "இது நார்மல் சார்ஜர் பின் போல் இல்லையே" என நீங்கள் யோசித்திருந்தால் நீங்கள் பார்த்தது கேட்டது எல்லாமே Type -C போர்ட்டை பற்றிதான். அது என்ன Type -C போர்ட் இது அவசியமா?  இதனால் என்ன பயன் ? பார்க்கலமா...

1990-களில் தொழில்நுட்ப கருவிகள் பிரபலமடைய தொடங்கிய காலகட்டம். கணினி, மொபைல்கள் என அனைத்துமே தங்களுடைய தயாரிப்புகளில் வெவ்வேறு வடிவங்களில் தகவல் பரிமாற்றங்களுக்கான போர்ட்களை உருவாக்கி பயன்படுத்தின.  ஒவ்வொரு போர்ட்களும் வெவ்வேறு மாதிரியாக இருந்ததால் மற்ற சாதனங்களை இணைப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதைச் சரிசெய்ய அப்பொழுது கணினி தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் இருந்த ஐபிஎம், இன்டெல், காம்பேக், மைக்ரோசாப்ட் மற்றும் சில நிறுவனங்கள் ஒன்றினைந்து ஒரே மாதிரியான போர்ட்களை உருவாக்கி பயன்படுத்துவது என்று முடிவு செய்தன. முதல் USB வடிவமைப்பு ஜனவரி 1996-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதை உருவாக்கியதில் இன்டெல் நிறுவனத்தில் பணிபுரிந்த அஜய் பட் என்ற இந்தியரின் பங்கு முக்கியமானது. அதன்பின்னர் வெளியான அனைத்து கணினிகளிலும் ஒரே வடிவிலான USB போர்ட்கள்  பயன்படுத்தப்பட்டன.

கணினிகளுக்கு ஏற்பட்ட அதே பிரச்னை மொபைலுக்கும் ஏற்பட்டது. தொடக்கத்தில் நோக்கியாவின் சார்ஜரை சோனி எரிக்ஸன் மொபைல்களுக்குப் பயன்படுத்த முடியாது என்பது உங்களுக்கு நினைவுக்கு வரலாம். நோக்கியா கூட தனது மொபைல்களுக்கு இரண்டு விதமான கனெக்டிங் போர்ட்களை பயன்படுத்தியது. எனவே இதிலும் micro USB  முறை கொண்டுவரப்பட்டது. நாம் தற்பொழுது பெரும்பாலான ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்துவது micro USB 2.0 இதன் மேம்படுத்தப்பட்ட வடிவம் தான் micro USB 3.1 அதை USB type -C என்றும் அழைக்கின்றனர்.

கடந்த 2014-ம் ஆண்டே இது அறிமுகப்படுத்தப்பட்டாலும் தற்பொழுதுதான் இது பரவலாகி வருகிறது. இப்பொழுது விலை அதிகமான ஸ்மார்ட்போன்கள்  type - C போர்ட்டை  பயன்படுத்துகின்றன. இன்னும் சில ஆண்டுகளில்  அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இது மட்டுமே இடம்பெறும்.

Type -C பயன்கள்:

இது USB 2.0 கனெக்டிங் போர்ட்டில் இருந்து சற்று வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. USB 2.0 வில் அடிப்பகுதி தட்டையாகவும் மேற்பகுதியின் இரண்டு முனைகள் சற்று சாய்வாகவும் இருக்கும் இதனால் நாம் அதை ஒவ்வொரு முறையும் பார்த்து பயன்படுத்த வேண்டும். ஆனால் Type - C யை பொறுத்தவரை அந்தக் கவலை வேண்டாம். இது அனைத்து பகுதிகளிலும் சீராக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. (சீராக என்றால் சரியாக) எனவே, இதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.  இதை reversible connector என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இதன்மூலமாக டேட்டாவை வேகமாக பரிமாற முடியும். USB 2.0 மூலமாக அதிகபட்சமாக 480 Mbps வேகத்தில் தகவல்கள் பரிமாற்றம் செய்ய முடிந்தது. ஆனால், இதன்மூலம் நொடிக்கு 5 ஜிபி என்ற அளவில் தகவல் பரிமாற்றம் செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

4 K வீடியோக்களின் தரம் அதிகமாக இருப்பதால் அதன் அளவும் அதிகமாக இருக்கும். இதுவரை நாம் பயன்படுத்தும் கனெக்டரில் இது சாத்தியமில்லை. ஆனால் type-c ன் வேகமான பரிமாற்றம் மூலமாக தடையின்றி 4 k வீடியோக்களை எளிதில் பரிமாற்றம் செய்யலாம். இது மட்டுமின்றி இதன் மற்றொரு குறிப்பிடத்தக்க பலன் வேகமான சார்ஜிங்.

அதிக மின்சாரத்தை கடத்தும் திறனை பெற்றுள்ளதால் வேகமான சார்ஜரை பயன்படுத்தும்போது இதன்மூலமாக வேகமாக சார்ஜ் ஏற்ற முடியும்.

கணினியில் USB 3.0  போர்ட்கள் நீல நிறத்தில் இருக்கும் அதன் மூலமாக அதை எளிதில் கண்டறியலாம்.வரும் காலங்களில் அனைத்துமே USB 3.0 போர்ட்களை மட்டுமே கொண்டிருக்கும் என்பதோடு மட்டுமின்றி பயன்களும்  அதிகம் என்பதால்  தற்பொழுது புதிதாக மொபைல் வாங்க நினைப்பவர்கள் Type- c கனெக்டர் இருக்கும் மொபைலை தேர்ந்தெடுக்கலாம்.

இன்னும் 4-5 ஆண்டுகளில் இந்த Type-c போர்ட்டும் மாறலாம். புது டெக்னாலஜி வந்துவிடலாம். மொபைல் டெக்னாலஜியில் மாற்றங்கள் 4ஜி அல்ல; 40ஜி வேகத்தில் தான் நடைபெறும். அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!