"விளம்பரச் செலவுகள்னு நினைச்சுக்கோங்க!" - HBOவிடம் பணம் கேட்கும் ஹேக்கர்கள் #GOT | Consider this as advertisement, hackers demand money from HBO

வெளியிடப்பட்ட நேரம்: 15:53 (08/08/2017)

கடைசி தொடர்பு:15:53 (08/08/2017)

"விளம்பரச் செலவுகள்னு நினைச்சுக்கோங்க!" - HBOவிடம் பணம் கேட்கும் ஹேக்கர்கள் #GOT

HBO ஹேக்கர்கள் GOT

HBO தொலைக்காட்சிக்கு இது போதாத காலம் தான். சென்ற வாரம் அந்த நிறுவனத்தில் இருந்து 1.5 TB அளவிலான டேட்டா. ஹேக்கர்கள் கைவசம் சென்று விட்டது. “HBO is falling!” என்ற தலைப்புடன் முதற்கட்டமாக கேம் ஆஃப் த்ரோன்ஸ் நாடகத்தின் வெளிவராத எபிசோடின் முழு நீள ஸ்கிரிப்ட், மற்றும் வேறு சில நாடகங்களின் வெளிவராத எபிசோடுகள் ஆன்லைனில் கசிந்தன. இதற்கிடையில், சென்ற வார இறுதியில், கேம் ஆஃப் த்ரோன்ஸ் நாடகத்தின் இதுவரை ஒளிபரப்பாகாத எபிசோட் ஆன்லைனில் உலா வரத் தொடங்கியது. ஆனால், இதற்கும் ஹேக்கர்களுக்கும் சம்மந்தமில்லை, இது HBO தொலைக்காட்சியின் பார்ட்னரான ஸ்டார் நெட்வொர்க்கின் அஜாக்கிரதையால் வெளிவந்தது என்று பின்னர் தெரிய வந்துள்ளது. இதற்கு தாங்கள் முழுப் பொறுப்பு ஏற்பதாகவும் ஸ்டார் நிர்வாகம் அறிக்கை விட, HBO சற்றே நிம்மதி அடைந்தது.

இரண்டாவது மெயில்

அடுத்த இடியாக, இப்போது அந்த “HBO is falling!” ஹேக்கர்கள் குரூப் மீண்டும் HBOவை சீண்டியுள்ளது. இரண்டாவது ரவுண்டாக மேலும் சில விஷயங்கள் கசிந்துள்ளன. 13 ஆகஸ்ட் அன்று வெளிவரவிருக்கும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் நாடகத்தின் அடுத்த எபிசோடின் (5ஆவது எபிசொட்) ஒரு பகுதி ஸ்கிரிப்ட், சுருக்கமான ஒரு வீடியோ உட்பட வெளிவராத வேறு சில நாடகங்களின் வீடியோஸ், தங்களுடன் இருக்கும் மொத்த டேட்டாவின் ஸ்க்ரீன் ஷாட்  என ஒரு இ-மெயிலில் அனைத்து லிங்க்களும் வைத்து  HBO தலைமை நிர்வாக அதிகாரியான ரிச்சர்ட் பிளெல்பர் அவர்களுக்கே இ-மெயில் அனுப்பியுள்ளது. “HBO is falling!” என்ற அடைமொழியுடன் வந்த இ-மெயிலில் இது போக, HBO வின் அலுவல் மின்னஞ்சல்கள், நிதி இருப்புநிலை, வேலை ஒப்பந்தங்கள் மற்றும் மார்க்கெட்டிங் திட்டங்கள் உள்ளிட்ட பல உள் ஆவணங்களையும் விலாவரியாக PDF வடிவில் இணைத்து அனுப்பி அச்சுறுத்தி இருக்கிறார்கள்.

கேம் ஆஃப் த்ரோன்ஸ்

யார் அந்த Mr.Smith?

கூடுதலாக, முதன் முறையாக இந்த இ-மெயிலில் ஹேக்கர்கள் தங்களின் தேவை என்ன என்பதைக் குறிப்பிட்டுள்ளார்கள். Mr.Smith என்ற பெயரில் வந்துள்ள அந்தக் குறிப்பில், “எங்கள் தேவை ஒன்றே ஒன்று தான். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்களுக்கு XXXX டாலர்கள் தேவை. அதைக் கொடுக்காவிட்டால், நிறைய விஷயங்கள் கசியும். கேம் ஆஃப் த்ரோன்ஸ் புது எபிசோடுகள் உட்பட! நீங்கள் வருடத்திற்கு, 12 மில்லியன் மார்க்கெட் ரீசர்ச்சிற்கு என்று செலவு செய்கிறீர்கள். அது போக கேம் ஆஃப் த்ரோன்ஸ் நாடகத்தின் விளம்பரத்திற்கு என்று 5 மில்லியன் வரை செலவு செய்கிறீர்கள். அந்த விளம்பர பட்ஜெட்டில் எங்களுக்குக் கொடுக்க வேண்டிய இந்தத் தொகையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று எள்ளல் கலந்த மிரட்டலாக அந்த இ-மெயில் விரிகிறது. ஆனால், ஹேக்கர்கள் எவ்வளவு பணம் கேட்டார்கள் என்பது எங்கேயும் வெளிப்படுத்தப் படவில்லை. HBO நிறுவனம் அதை இரகசியமாக வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

நாங்கள் கிரிமினல்கள் கிடையாது

இதன் தொடர்ச்சியாக, கேம் ஆஃப் த்ரோன்ஸ் நாடகம் இணையத்தில் கசிந்தால், என்னவெல்லாம் நடக்கும், எவ்வளவு இன்னல்கள், நஷ்டங்கள் அதனால் ஏற்படும் என்று விலாவரியாக விளக்கி எழுதியுள்ளார்கள். “இது நடந்தால், உங்கள் நிறுவனத்திற்கு இது ஒரு பெரிய அடியாக இருக்கும். எனவே சிந்தித்து சிறந்த முடிவாக எடுங்கள்” என்று எச்சரித்துள்ளார்கள். கேட்டத் தொகையை 3 நாட்களுக்குள் தரவேண்டும் என்றும் கட்டளையிட்டிருக்கிறார்கள். சொல்வதை எல்லாம் சொல்லிவிட்டு, இறுதியாக, “நாங்கள் கிரிமினல்கள் அல்ல. எங்களுக்கு இது ஒரு விளையாட்டு. எங்களை நாங்கள் “White Hats” என்று குறிப்பிட விரும்புகிறோம். எங்களுக்கு பணம் பெரிதல்ல. HBO நிறுவனத்தைக் களங்கப்படுத்தவும் இதைச் செய்யவில்லை. நிறுவனத்தின் லாபத்தில் ஒரு சிறிய பங்கு, அவ்வளவே எங்கள் தேவை” என்று குறிப்பிட்டுள்ளனர்.

கேம் ஆஃப் த்ரோன்ஸ்

HBO பதில்

இந்த புது இ-மெயில் குறித்து விளக்கம் அளித்துள்ள HBO வின் செய்தித் தொடர்பாளர் ஜெஃப் கஸ்ஸன், “தடயவியல் மற்றும் சைபர் ஆய்வுகள் தற்போது நடந்துக் கொண்டிருக்கிறது. எங்கள் நிறுவனத்தின் மொத்த இ-மெயில் சிஸ்டமும் பல்வேறு ஊடுருவலைச் சந்தித்துள்ளது. வெளிவரும் விஷயங்கள் ஒவ்வொன்றும் எங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் அறிவோம். இதற்காகவே, சைபர்செக்யூரிட்டி நிறுவனங்கள் மற்றும் சட்ட அமலாக்கத் துறையுடன் சேர்ந்து இரவுபகல் பாராது உழைத்துக் கொண்டிருக்கிறோம்” என்று நம்பிக்கை அளித்தார்.

இது ஒருபுறமிருக்க, இந்தியாவில் இருக்கும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களோ எப்படியும் நாங்கள் இங்கே டோரன்ட்டுளில் அல்லது ஹாட்ஸ்டாரில் தான் பார்க்கப் போகிறோம். அது எப்போது வந்தால் என்ன? முன்னரே வந்தால், இன்னும் சந்தோசம் தான் என்று ஏக குஷியில் ஆன்லைனில் வழிமேல் விழிவைத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்