Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"துணிந்தவனுக்குத் தோல்வியில்லை..!" - ஒரு வெஸ்டர்ன் காலா சொன்ன வெற்றிக்கதை #Uber

ந்தக் கதையை ஆரம்பிக்கும் முன் நாம் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இந்தக் கதை உருவானதின் அவசியம் புரியும். அமெரிக்கா பெரிய நிலப்பரப்பு கொண்ட தேசம். ஆனால் இருப்பதோ, குறைவான பேருந்து வசதிகள். மெட்ரோ ரயில் ஓடும் நகரங்களில் இருப்பவர்கள் மட்டுமே கொடுத்து வைத்தவர்கள். மற்றவர்கள் நகரின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு விரைவாக செல்ல சொந்தமாக கார் வைத்திருக்க வேண்டும் அல்லது வாடகை காரில் சென்று வர வேண்டும். இதுதான் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி. அமெரிக்காவில் வாடகைக்காரில் மீட்டர் போட்டுதான் ஓட்டுவார்கள். ஆனால் அந்தத் தொகை நம்ம ஊரில் மீட்டர் போடாமல் ஆகும் செலவை விட பன்மடங்கு அதிகம்.

இந்தச் சூழலில்தான் அந்த இருவருக்கும் ஓர் ஐடியா தோன்றியது. வாடகை காரில் செல்லும் ஒருவர், இன்னொருவருக்கு இடம் கொடுத்து அதன் மூலம் அவர் செலுத்தவேண்டிய தொகையில் பகிர்ந்துகொண்டால் அவர்கள் இருவருக்குமே லாபம் அல்லவா? கிட்டத்தட்ட ஷேர் ஆட்டோ ஐடியாதான். ஆனால் மொபைல் இன்டர்நெட் மட்டும் இங்கே கூடுதல் சிறப்பு. மேலே உள்ள இந்த இரண்டு வரிகள்தான் உபெர் என்னும் மாபெரும் நிறுவனம் தொடங்கப்படுவதற்கான அடிப்படை ஐடியா. அருகில் உள்ள வாடகை கார் பிடிப்பது, பேரம் பேசாமலே பயணம் செய்வது, பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வது போன்றவையெல்லாம் இதற்கடுத்து வந்தவையே!

உபெர் நிறுவனம்

ட்ராவிஸ் காலானிக், கார்ரெட் கேம்ப் என்ற இரு தொழில்முனைவோர்களின் கனவுக் குழந்தைதான் உபெர்(uber). இந்த இருவருக்கும் இது இரண்டாவது ஸ்டார்ட்அப். அதற்கு முன் இருவரும் வெவ்வேறு ஸ்டார்ட்அப் நடத்தி வெற்றிகரமாக அதை விற்றுவிட்டு, வெளியில் வந்து இதைத் தொடங்கினார்கள். எப்பவும் முதல் பிரசவம்தான் மிகுந்த பயத்தையும், மன உளைச்சலையும், தவிப்பையும் கொடுக்கும். ஸ்டார்ட்அப் என்பதும் குழந்தைதான். இவர்களுக்கும் அவ்வாறே முதல் ஸ்டார்ட்அப்புகளில் எண்ணற்ற சிரமங்கள்.

ட்ராவிஸ் காலானிக்(Travis Kalanick)கின் தந்தை ஒரு சிவில் என்ஜினீயர், தாய் ஒரு தினசரி பேப்பரில் விளம்பர பிரதிநிதி. ட்ராவிஸ் பள்ளியில் மிடில் பெஞ்ச் மாணவர்தான். புத்தகங்களின் மீது ஆர்வம். குறிப்பாக தொழில்நுட்ப புத்தகங்களில் பெரிய ஆர்வம். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படித்துக்கொண்டிருக்கும் போதே ஸ்கோர் என்ற சகமாணவர்களின் ஸ்டார்ட்அப்பில் பணிபுரிய படிப்பை பாதியில் விட்டுவிட்டு செல்கிறார். அன்றைய 2G-க்கும் குறைவான இணைய வேகத்தில் பெரிய இசைக்கோப்புகளை இணையத்தில் அனுப்புவது எளிதல்ல. அப்போது அதற்கு மாற்றாக நேரடியாக இரண்டு கணினிகளை இணைத்து ஃபைல்களை அனுப்புவது என்று அந்த நிறுவனத்தை தொடங்கினார்கள். அந்த நேரத்தில் அமெரிக்க இசை வெளியீட்டாளர்கள் சங்கம் இவர்கள் மேல் வழக்கு தொடர்ந்து 250 பில்லியன் இழப்பீடு கேட்கவே நிறுவனத்தை இழுத்து மூட வேண்டிய நிலை. இந்தத் தொழில்நுட்பமே பின்னர் டோரன்ட் என்று வடிவெடுத்தது.

ட்ராவிஸ், அரசனை நம்பி புருஷனை விட்டுட்டோமோ என்றெல்லாம் யோசிக்கவில்லை. அதே Peer to Peer File Sharing ஐடியாவை மற்ற துறைகளுக்கும் தேவைப்படும் என்று RedSwoosh என்ற ஸ்டார்ட்அப்பை தொடங்குகிறார். முதல் மூன்று வருடம் படுத்தி எடுக்கிறது. கம்பெனிக்கு வாடகை கொடுத்து கட்டுபடியாகவில்லை. பெற்றோர்கள் இருந்த வீட்டிற்கே கம்பெனியைக் கொண்டு வரவேண்டிய சூழல். எழுபது லட்சத்திற்கு வரி பெண்டிங் இருக்கிறது வருமானவரி துறை நெருக்க, வேறு வழியில்லாமல் தாய்லாந்துக்கு நிறுவனத்தை கொண்டு செல்கிறார். அதன் பிறகு ஒரு வருடம் கழித்து அக்கமாய் டெக்னாலஜீஸ் என்ற பெரிய நிறுவனம் இவரின் நிறுவனத்தை 120 கோடி ரூபாய்க்கு வாங்குகிறது. இதுதான் முதல் வெற்றி

கார்ரெட் கேம்ப்(Garrett Camp) கனடா நாட்டை சேர்ந்தவர். தந்தை ஒரு எகனாமிஸ்ட். தாய் ஒரு ஆர்டிஸ்ட். இருவரும் சேர்ந்து வீடுகளுக்கு இன்டீரியர் டிசைன் செய்து கொடுக்கலாம் என்று ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கிறார். அப்படி பெற்றோர்களைப் பார்த்தே தொழில்முனையும் ஆர்வம் அவருக்கு வந்ததாக பின்னாளில் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். பள்ளி படிப்பிற்கு பின் கல்லூரியில் சாப்ட்வேர் இன்ஜினீயரிங் படிக்கிறார். படிக்கும்போதே சொந்தமாக ஸ்டார்ட்அப் தொடங்கவே அவருக்கு விருப்பம். வேறு நிறுவனத்தில் வேலை செய்யும் யோசனையெல்லாம் இல்லவே இல்லை.

அவரது நண்பர்களுடன் பல ஐடியாக்களை முயன்று பார்க்கிறார். இறுதியில் இணைய பயனர்களுக்கான தனி விருப்ப தேடுபொறியை செய்வது என்று முடிவெடுக்கிறார். அப்படி பிறந்ததுதான் Stumbleupon எனப்படும் சமூக இணையதளம். நீங்கள் உங்கள் விருப்பத்தை கணக்கு தொடங்கும்போதே என்னென்ன வகை என்று சொல்லிவிட்டால் இன்றைய தேதியில் அந்தத் துறைகளில் என்னென்ன நடக்கிறது என்று எடுத்துக்காட்டும். ஸ்டம்பில் பட்டனை கிளிக் பண்ண பண்ண உங்கள் விருப்பத் தேர்வுகேற்ற பக்கங்களை லோடு செய்யும். வாசிப்பு பிரியர்களுக்கு இதைவிட சிறந்ததளம் இருக்க முடியாது. 2001 நவம்பரில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தளத்தின் வளர்ச்சியினால் கவரப்பட்டு ஈபே (ebay) 2007-ல் 450 கோடி வாங்கியது.

travis

2008-ல் கார்ரெட், ட்ராவிஸ் இருவரும் சந்திக்கிறார்கள். இருவருக்கும் ஒரே சூழ்நிலை. முதல் ஸ்டார்ட்அப் வெற்றிகரமாக நடத்தி விற்று வெளியில் வந்தாயிற்று. அடுத்து என்ன செய்யலாம்? என்ற கேள்வி நிற்கிறது. மொபைல் தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன்களுக்கு மாறிக்கொண்டிருந்த தொடக்ககாலம். இணையம் உள்ளங்கையில் புரண்டு விளையாடிக்கொண்டிருக்கிறது. அப்போது உதித்த ஐடியாதான் உபெர். கார்ரெட் தான் இதை வடிவமைக்கிறார். ட்ராவிஸ் அதை வளர்த்தெடுக்கிறார். மொபைல் ஆப்பாக வெளியிடுகிறார்கள். அதுவரை டாக்சிக்கு செல்ல தெருவில் இறங்கிதேட வேண்டும். அல்லது போன் செய்து புக் செய்ய வேண்டும். இதை மாற்றி நீங்கள் நிற்கும் இடத்திற்கு அருகில் எத்தனை உபெர் வண்டிகள் உள்ளன. நீங்கள் செல்ல வேண்டிய தூரத்திற்கு எவ்வளவு செலவாகும். மற்றொருவருடன் உங்கள் வண்டியைப் பகிர்ந்துகொண்டால் எவ்வளவு குறையும் என்றெல்லாம் தெரிந்துகொள்ள இதைவிட ஒரு சிறந்த ஆப் இல்லை என்பதால் மக்கள் ஆர்வம் காட்டினார்கள்.

முதலில் அமெரிக்கா, கனடாவில் மட்டுமே தொடங்கிய இந்த நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக எல்லா முக்கிய நாடுகளுக்கும் சென்று சேர்ந்தது. சில நாடுகளில் உள்ளூர் டாக்சி டிரைவர்களுக்கும் உபேர் டாக்ஸி டிரைவர்களுக்கும் பிரச்னை வந்தது. ஆனால், பயணிகள் உபேர் பக்கமே நின்றனர். ஏனென்றால் கட்டணங்கள் வெளிப்படையாகவும், குறைவாகவும் இருந்ததால் தேவையற்ற பிரச்னைகள் வரவில்லை. ஒரு பெரிய நிறுவனம் என்பதால் பெண்களின் பாதுகாப்புக்கு மினிமம் கியாரண்டி இருக்கும் என்று மக்கள் நம்பினார்கள்.

உபெர்


பல பெரிய நிறுவனங்கள் உபெரில் முதலீடு செய்ய தொடங்கினார்கள். கூகுள் வென்ச்சர்ஸ் நிறுவனமும் இதில் முதலீடு செய்தது. ஆப்பிரிக்கா ஐந்து கண்டங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக உபெர் சென்று சேர்ந்துள்ளது.

ஸ்டார்ட்அப் பாடம்:

ஒரு முன்னணி தொலைக்காட்சியில் நடந்த ஸ்டார்ட்அப் விவாதத்தில் பரம்பரையாக தொழில் செய்யும் ஒருவர் புதிய தலைமுறை தொழில்முனைவோர்களைப் பார்த்து “இவர்கள் விற்பதற்காகத்தான் நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள்” என்று குற்றம் சாட்டினார். அதிலென்ன தவறு இருக்கிறது? ஸ்டார்ட்அப்புகளை வாங்குபவர்கள் யார்? அதே துறையில் இருக்கும் பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை வளர்க்க, தொழில் போட்டியைக் குறைக்க வாங்குகிறார்கள்.

ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் எல்லோரும் இளைய தலைமுறையினர். அவர்களுக்குப் பலவித ஸ்டார்ட்அப் ஐடியாக்கள் இருக்கக்கூடும். அவர்கள் அதை அனைத்தையும் முயற்சி செய்ய துணிகிறார்கள். இதேதொடரில் நாம் பார்த்த எலன் மஸ்க், டோனி ஷெய், ட்ராவிஸ், கார்ரெட் எல்லோருமே முதல் ஸ்டார்ட்அப்பை விற்று அந்த முதலீட்டில் அதைவிட பெரிதாக இரண்டாம் ஸ்டார்ட்அப்பை கொண்டு சென்றவர்கள்தான். இது ஒரு சிறந்த டெக்னிக். இந்தப் பட்டியல் இன்னும் நீளவே செய்யும். மில்லியன் டாலர் ஐடியாவை வளர்த்து அதை விற்று பின்னர் பில்லியன் டாலர் நிறுவனத்தை தொடங்குவதும் ஒரு தொழில் புரட்சிதான். ஆனால் இதற்கு அவசியமானது துணிவு. துணிந்தவனுக்கு என்றும் தோல்வியில்லை. இது இளைஞர்கள் காலம்.

முந்தைய அத்தியாயம்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement