இந்தியாவில் முடங்கிய உலகின் மிகப்பெரிய இணையதளக் காப்பகம்! ஆதார் தான் காரணமா?! | Wayback Machine - World's Largest Internet Archive has been blocked in India

வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (10/08/2017)

கடைசி தொடர்பு:09:20 (10/08/2017)

இந்தியாவில் முடங்கிய உலகின் மிகப்பெரிய இணையதளக் காப்பகம்! ஆதார் தான் காரணமா?!

மெரிக்காவைச் சேர்ந்த Wayback Machine (web.archive.com) என்ற இணையதளக் காப்பகம், மத்திய தொலைத்தொடர்புத் துறையால் முன்னறிவிப்பின்றி முடக்கப்பட்டிருக்கிறது. உலகில் உள்ள இணையதளங்களின் தகவல்கள் அனைத்தையும் சேமித்து வைக்கும் இணையதளக் காப்பகமான இது முடக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இணையதளக் காப்பகம் முடக்கம்

இந்தியாவில் இணையதளங்களை தணிக்கை செய்யும் அதிகாரம் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின், தொலைத்தொடர்புத் துறைக்கு உள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2015-ம் ஆண்டு 857 ஆபாச இணையதளங்களை இந்தியாவில் தொலைத்தொடர்புத் துறை முடக்கியது. ஆனால் அதன் பின்னர் இந்த முடக்கம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதே போல பல இணையதளங்கள், இதற்கு முன்னர் தொலைத்தொடர்புத் துறையால் முடக்கப்பட்டிருக்கின்றன. புது டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட மாநகரங்களில் ஏர்டெல், எம்.டி.என்.எல் போன்ற இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் மட்டும் இத்தளத்தை முடக்கியுள்ளன. இத்தளம் இந்த இடங்களில் மட்டும் முடக்கப்பட்டிருக்கிறதா அல்லது விரைவில் இந்தியா முழுவதும் படிப்படியாக முடக்கப்படுமா என்பது குறித்த தகவல்கள் இல்லை. மேலும், நீதிமன்ற உத்தரவின் பேரில் இத்தளம் முடக்கப்பட்டதா... மத்திய அமைச்சகத்தின் முடிவால் முடக்கப்பட்டதா... எந்தக் காரணத்தால் இத்தளம் முடக்கப்பட்டது... போன்ற எந்தத்தகவல்களும் இல்லை.

Internet Archive - Wayback Machine

1996-ம் ஆண்டு தொடங்கப்பட்ட Internet Archive டிஜிட்டல் லைப்ரரியின் கீழ் புத்தகங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள், இமேஜ், சாப்ட்வேர்கள் போன்றவற்றை காப்புரிமை இல்லாமல் இலவசமாக பயனாளர்கள் அக்சஸ் செய்துகொள்ளலாம். தாள்களில் இருக்கும் புத்தகங்களை அனைவரும் பயன்படுத்தும்படி டிஜிட்டல் மயமாக்கியது இத்தளம். இதில் பயனாளர்களால் தகவல்களை அப்லோடு மற்றும் டவுன்லோடு செய்துகொள்ள முடியும். இத்தளத்தின் இணையதளத்துக்கான காப்பகம் 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக லாப நோக்கமற்ற இணையதளக் காப்பகமாக செயல்பட்டு வரும் Wayback Machine (https://archive.org/web/), முன்னறிவிப்பின்றி முடக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. சுமார் 30,200 கோடி இணையதளப் பக்கங்களும், 15 டெரா பைட் அளவிலான தகவல்களும் இத்தளத்தில் சேமிக்கப்பட்டுள்ளன.

ஆதார் தொடர்பான தகவல்களை பயனாளர்களின் அனுமதி இல்லாமல் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட, தனியார் நிறுவனங்களின் பட்டியலை UIDAI தனது தளத்தில் இருந்து நீக்கியிருந்தது. ஆனால் இந்தப் பட்டியல்  Wayback Machine காப்பகத்தில் சேமிக்கப்பட்டிருந்தன. இதனை அடுத்தே மத்திய தொலைத்தொடர்புத் துறையால் இந்த இணையதளம் முடக்கப்பட்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

URL Blocked Info

இன்டர்நெட் ஆர்கைவ் அமைப்புக்கு இந்த முடக்கம் குறித்து, இந்திய அரசின் சார்பாக எவ்வித முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை. அந்த அலுவலகத்தின் மேலாளர் கிரிஸ் பட்லர் இந்த முடக்கம் குறித்து, 'எங்கள் இணையதளத்தின் முடக்கம் குறித்து இந்திய அரசு எங்களைத் தொடர்புகொள்ளவில்லை. ஏன் இணையதளம் முடக்கப்பட்டது என்பது குறித்த எவ்விதத் தகவலும் எங்களுக்குத் தெரியவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

விக்கிபீடியா இணையதளம் சீனாவில் இதுபோல பல்வேறு முறை முடக்கப்பட்டும், தடை செய்யப்பட்டும் இருக்கிறது. அதன்பின், தணிக்கை செய்யப்படாத தகவல்கள் அனைவருக்கும் சென்றுசேர வேண்டும் என்ற நோக்கில், விக்கிபீடியா தனது வலைதளத்தில் சிறிய மாற்றம் செய்தது. 2011-ம் ஆண்டில் HTTP (Hypertext Transfer Protocol) ஃபார்மட்டில் தணிக்கை செய்யப்பட்ட பக்கங்களை, HTTPS என்ற செக்யூர்ட் வலைப்பக்கங்களில் பயனாளர்களுக்குப் படிக்கக் கொடுத்தது அந்நிறுவனம். இதனால் தணிக்கை என்ற பெயரில் முடக்கப்படும் பக்கங்களும் பலருக்கும் சென்று சேர்ந்தது. HTTPS தளத்தைப் பொறுத்தவரை தகவல்கள் அனைத்தும் என்க்ரிப்ட் செய்யப்பட்டுவிடும் என்பதால், ஒருவர் அந்தத் தளத்தைப் பார்வையிடுகிறார் என்பதை மட்டுமே கண்டுபிடிக்க முடியும். ஆனால், அந்தப் பயனாளர் எந்தப் பக்கத்தை அக்சஸ் செய்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. Wayback Machine விஷயத்திலும் இதுதான் நடந்திருக்கிறது. தற்போது இத்தளம் முடக்கப்பட்ட புது டெல்லி மற்றும் பெங்களூரு மாநகரங்களிலும் இத்தளத்தின் HTTPS இணையதளத்தை அக்சஸ் செய்ய முடிகிறது.

தொழில்நுட்பம் அசுரவேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கும் இந்த யுகத்தில், தனது கண்களை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிடும் என நினைக்கும் பூனையின் மனப்பான்மை வெற்றிபெறாது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்